Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' காதல் என்றாலே ஏன் அலர்ஜி?'  -ராமதாஸுக்கு சி.பி.எம் ராமகிருஷ்ணன் கேள்வி

பெண்கள் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ' காதலுக்கு நான் எதிரி அல்ல என்று நீங்கள் சொன்னாலும், காதல் குறித்து உங்களுக்கு ஒவ்வாமை வருவது ஏன்?' எனக் கேள்வி எழுப்புகிறார் சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன். 

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அண்மையில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் ராமதாஸ். அந்தக் கடிதத்தில், அரசியல் கட்சித் தலைவர் ஒருவரைக் குறிப்பிட்டுத் தாக்குதல் நடத்தியிருந்தார். பெண்ணுரிமை பேசும் இடதுசாரிகளும் பெரியார்வாதிகளும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ராமதாஸின் கடிதம் குறித்துப் பேசும் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், 

"பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் சில ஆலோசனைகளையும் உள்ளடக்கிய உங்கள் கடிதம் கிடைத்தது. பெண்கள் மீதான வன்முறை பல வகைப்பட்டது. எங்களைப் பொறுத்தவரையில், கட்சி உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளில் ஒன்றாகப் பாலின சமத்துவத்தை வலியுறுத்துகிறோம். எங்கள் கட்சியின் திட்டத்திலேயே, பாலின சமத்துவ போராட்டம், ஜனநாயகத்துக்கான ஒரு பகுதி என்பதையும் குடும்ப ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் இடம்பெற வைத்திருக்கிறோம். குடும்ப வன்முறையை ஒழுங்கு நடவடிக்கைக்கு உரிய குற்றமாகக் கருதுகிறோம். காதலுக்கு எதிரி அல்ல என்று ஒரு புறம் நீங்கள் சொன்னாலும், மறுபுறம் காதல் திருமணங்கள் மீதான வெறுப்பு, குறிப்பாக வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் திருமணம் குறித்து தீர்மானிப்பதில் உங்களுக்கு ஒவ்வாமை இருப்பது வெளிப்படுகிறது. 

'காதல் வழி சாதி மறுப்பு திருமணம் சாதிகளை ஒழிக்காது' என்று கூறியிருக்கிறீர்கள். அது மட்டுமே உதவாது என்பது உண்மை தான். தலித் மக்களுக்குப் பொது சொத்து மற்றும் நிலத்தின் மீதான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்; தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பன போன்ற பொருளாதார நடவடிக்கைகளும் இணைந்து எடுக்கப்பட வேண்டும். அதே சமயம், அகமணமுறை என்பது சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கும் கோட்டை என்னும்போது, அதில் மாற்றம் வந்தால், கட்டமைப்பு பலவீனப்படும் என்பது சரியானதுதானே? ஒரு வாதத்துக்கு இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காகக் காதல் திருமணங்களே வேண்டாம் என்று சொல்லி விட முடியுமா? வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திருமணம் செய்கிறார்கள் என்றும் கூற முடியாது. விரும்புகிறவர்கள் வாழ்க்கையில் இணைகிறார்கள். இது அரசியல் சட்டம் அளித்திருக்கும் ஜீவாதார உரிமை. பெற்றோர் விருப்பத்துடன் திருமணங்கள் நடப்பது நல்லது தான். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்கள், பெற்றோரையும் உடன்பட வைக்கும் போராட்டத்தை நடத்துவது தேவையானது. அதே சமயம், காரண காரியமின்றி, சாதியை மனதில் வைத்து அல்லது தன் மகனோ, மகளோ சுயமாக முடிவெடுப்பதை விரும்பாமல் பெற்றோர் மறுக்கும் போது, வேறு வழியில்லாமல் நண்பர்கள் உதவியுடன் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள் என்பதே எதார்த்தம். இதுகுறித்து பொது வெளியில் விவாதிப்பதுகூட பயன் தரும். 

ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் காதல் திருமணங்களில் மட்டும் நாம் பார்ப்பது இல்லை; வெவ்வேறு சாதி இணையும் திருமணங்களில் மட்டும் நடப்பதில்லை. பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில், ஒரே சாதிக்குள்ளான திருமணங்களில் கூட எத்தனை எத்தனை ஏமாற்று, மோசக்கார வேலைகள், வரதட்சணை கொடுமைகள் நடக்கின்றன. நெருக்கமான உறவினர் குடும்பத்திலிருந்து மாப்பிள்ளை வந்தாலும், பெண் வன்முறைக்குத் தப்புவதில்லை. ஏராளமான வழக்குகள் எங்களுக்கும் வருகின்றன. பெண்ணின் தாழ்ந்த சமூக அந்தஸ்து, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு போன்றவைதான் இந்த ஏமாற்று வேலைகளுக்கும், கொடுமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. நோயின் வாய் நாடி சிகிச்சைக்கு முயற்சிக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. காதலை கார்பைடு வைத்து கனிய வைப்பதில் எங்களுக்கும் உடன்பாடு கிடையாது. அதே போல் திருமணத்தில் இரு மனங்கள் கனிய வேண்டும், நமது குழந்தைகள் என்பதாலேயே கார்பைடு வைத்துத் திருமணத்தைக் கனிய வைக்கக் கூடாது. கட்டாய காதல் அல்லது கட்டாய திருமணத்தை எதிர்த்து தொடர்ந்து போதிக்க வேண்டும். காதலிக்க மறுத்தாலும் பெண்ணுக்கு வன்முறை, காதலித்து திருமணம் செய்தாலும் சாதி ஆணவ கொலை இரண்டும் வேண்டாம் என்று உரத்து குரல் கொடுப்போம். 

அதே சமயம், காதலுக்கு சம்பந்தமே இல்லாமல் நடக்கிற வன்முறை பற்றிக் கவலைப்பட வேண்டாமா? கடமலைக்குண்டு பகுதியில் பழங்குடியின பெண்கள் மீது வனத்துறையினர் நடத்திய வன்கொடுமை என்ன? சேலத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு அண்டாவில் திணித்து வைக்கப்பட்ட பிரச்னை என்ன? தஞ்சை சாலியமங்கலம் இளம்பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடுமை என்ன? நெகமம் அருகில் 8 மாத பச்சை குழந்தை பாலியல் கொடுமை செய்யப்பட்டு மண்டை ஓடு சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அராஜகம் என்ன? இதில் காதல் எங்கிருந்து வருகிறது? சாதிய கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக ஆணாதிக்கம் இருக்கிறது. ஒன்றைப் பாதுகாத்துக் கொண்டே மற்றொன்றை முழுமையாக ஒழித்து விட முடியாது. இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்குப் பின்புலமாக இருக்கும் கொள்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் ஒரு துளிகூட சமரசம் இல்லாமல் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம்" என விளக்கியிருக்கிறார் ஜி.ராமகிருண்ணன். 

-ஆ.விஜயானந்த் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ