Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாயர் கடை டீ, கொசுக்கடி, படுக்கையான பலகை..! போலீஸ் கஸ்டடியில் பதறிய பச்சமுத்து

 

வேந்தர் மூவீஸ் மதன் மாயமான விவகாரம் மற்றும் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்குவதாக கூறி 112 மாணவர்களிடம் ரூ.75 கோடி வசூல் செய்து மோசடி விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பச்சைமுத்து பல மணி நேர விசாரணைக்கு பிறகு உறங்க அனுமதிக்கப்பட்டார். மரப்பெஞ்சில் படுத்த பச்சமுத்து கொசுக்கடியால் அவதிப்பட்டதோடு, கையே தலையணையாக வைத்து உறங்கியுள்ளார் என்கிற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த மதன் என்பவர் வேந்தர் மூவீஸ் என்ற பெயரில் சினிமா படக் கம்பெனி  நடத்தி வந்தார். அரவான், தலைவா, சகுனி, எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களை வெளியிட்டு சில படங்களையும் தயாரித்துள்ளார். எஸ்ஆர்எம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார். கடந்த மே மாதம் 28ம் தேதி மதன் திடீரென மாயமானார். ‘‘எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவுக்கும், எனக்கும் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பணப்பிரச்னை உள்ளது. மாணவர்களிடம் நான் வாங்கிய பணம் முழுவதையும், பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டேன். அதனால் மாணவர்களுக்கு அவர்தான் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். நான் காசிக்கு சென்று கங்கையில் விழுந்து ஜலசமாதியாகப் போகிறேன்” என கடிதம் எழுதி, அதனை வாட்ஸ்ஆப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பி விட்டு தலைமறைவாகி விட்டார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதனின் மனைவிகள் புகார்: மதனின் முதல் மனைவி சிந்து, 2வது மனைவி சுமலதா மற்றும் மதனின் தாய் தங்கம் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கிடையில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட்டு தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக மதன் மீது மோசடிப் புகார்கள் குவிந்தன. எஸ்ஆர்எம் நிறுவன தலைவர் பச்சமுத்து மீதும் மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடிப் புகார்கள் அளிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது தாய் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி பல மாணவர்களிடம் பெரும் தொகை வாங்கி மோசடி செய்ததாக மதன் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 112 மாணவர்களிடம் ரூ.75 கோடி வரை பணம் வாங்கி மதன் மோசடி செய்ததாக கூறப்பட்டது.

தனிப்படை: மதன் காணாமல் போன வழக்கு, அவர் மீதான மோசடி வழக்குகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணைக் கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை அதிகாரிகள் எஸ்ஆர்எம் மோசடி வழக்கு தொடர்பாக, அவ்வப்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து வந்தனர்.

போலீஸுக்கு கண்டனம்: கடந்த 17ம் தேதி போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மதன் விவகாரத்தில் போலீஸாரின் நடவடிக்கை திருப்திகரமானதாக இல்லை, மோசடிப் புகாரில் கூறப்பட்டுள்ள பச்சமுத்து மற்றும் கல்லூரி நிர்வாகிகளிடம் ஏன் இதுவரை போலீஸ் விசாரணை நடத்தவில்லை என கடும் கேள்விகளை எழுப்பினர். இது போலீஸார் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மாயமான மதன் கேரளாவில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார், அவர் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பச்சமுத்துவுக்கு சம்மன்: மதன் மாயமான வழக்கு மற்றும் மருத்துவ சீட் மோசடி வழக்கு ஆகியவற்றில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை நேரில் ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பச்சமுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜரானார். அப்போது பச்சமுத்து தனது காரில் செல்லாமல் வாடகை காரை பயன்படுத்தியதாக தெரிகிறது.

விடிய விடிய விசாரணை: அங்கு அவரிடம் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 3 உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீஸார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். மதன் காணாமல் போனது பற்றியும்,  எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்கித் தருவதாக கூறி பணம் வசூல் செய்தது பற்றியும் பல கோணங்களில் கேள்விகள் அவரிடம் கேட்டுள்ளனர். மேலும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பற்றியும் சுமார் 350க்கும் மேற்பட்ட கேள்விகளை போலீஸார் பச்சமுத்துவிடம் கேட்டுத் துளைத்தனர். மாணவர்களிடம் வசூலித்த சுமார் ரூ.75 கோடி பணம் எங்கே என கேட்ட போது பச்சமுத்து அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என கூறப்படுகிறது.

விசாரணையில் அவதி: முன்னதாக, விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பச்சைமுத்து பல மணி நேர விசாரணைக்கு பிறகு உறங்க அனுமதிக்கப்பட்டார். அவர் படுப்பதற்கு தனி அறை எதுவும் கொடுக்கப்படவில்லை. விசாரணை அறையில் உள்ள சாதாரண போலீஸார் அமரும் மரப்பெஞ்சை அவர் படுப்பதற்காக ஒதுக்கி கொடுத்தனர். ஆனால் அவருக்கு தூக்கம் வரவில்லை. கொசுக்கடி, கையே தலையணையாக படுத்த பச்சமுத்துக்கு உறக்கம் வரவில்லை. பின்னர் அவரது அலுவலக நிர்வாகிகள் கேட்டுகொண்டதன் பேரில் ஒரு தலையணை மட்டும் வைத்துகொள்ள போலீஸார் அனுமதித்தனர். இதன் பின்னர் ஓரளவு அசௌகரியத்துடன் உறங்கினார். காலையில் போலீஸ் உயர் அதிகாரிகள் அறையில் பல் துலக்கிய அவருக்கு பக்கத்து நாயர் கடையிலிருந்து டீ வாங்கி கொடுத்தனர். பின்னர் அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து காலை உணவு வாங்கித்தரபட்டது.

திடீர் கைது: விடிய விடிய விசாரணை நடத்திய போலீசார் நேற்று காலை 9 மணி வரை விசாரணையைத் தொடர்ந்தனர். இதனையடுத்து பச்சமுத்து கைது செய்யப்படுவதாக போலீஸார் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஜெயராமன் என்ற மாணவர் உள்பட சுமார் 112 புகார்களின் அடிப்படையில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் ஒதுக்குவதாக கூறி ரூ.75 கோடி மோசடி செய்துள்ளதாக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி) மற்றும் பிரிவு 34 (மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பச்சமுத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அட்மிட்: பச்சமுத்துவுக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்புதான் இருதய நோய்க்கான ‘ஆஞ்சியோகிராம்’ சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் போலீஸாரின் தொடர் விசாரணையின் போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும், அதனால் சோர்வடைந்த அவர் லேசாக நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் அவரை போலீஸார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருதய மருத்துவப் பரிசோதனை செய்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இருதயத்தில் எதுவும் அடைப்பு உள்ளதா என மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதற்குரிய வசதிகள் ராயப்பேட்டை மருத்துவமனையில் இல்லாததால் பச்சமுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு மீண்டும் இருதய ஆஞ்சியோ பரிசோதனை நடந்தது.

அதில் பச்சமுத்து நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதற்கான உடல் தகுதி சான்றிதழ் பெற்ற பின்னர், பச்சமுத்து சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்றிரவு 8.25 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பச்சமுத்து தரப்பில் உடனடியாக ஜாமீன் கேட்கப்பட்டது. இதற்கு மதன் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும், அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையை வரி விடாமல் நீதிபதி பிரகாஷ் படித்தார். பின்னர் இது தொடர்பாக பச்சமுத்துவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, மதன் எனக்கு தெரியும். ஆனால் பண விவகாரம் என்று தெரியாது. மதனுடன் தொடர்ந்து கொண்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது. எனக்கும் இந்த மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பச்சுமுத்து கூறினார். இதைத் தொடர்ந்து பச்சமுத்துவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பச்சமுத்து வழக்கறிஞர்கள் வெங்கடேசன், பாலு ஆகியோர், சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பச்சமுத்துக்கு முதல் வகுப்பு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு பச்சமுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

பத்திரிகையாளர்களுக்கு தடை: முன்னதாக, பச்சமுத்துவிடம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர் என்ற தகவல் கசிந்ததும் பத்திரிகையாளர்கள் எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலக நுழைவு வாயிலில் குவிந்தனர். இதனால் அங்கு ஒரே பரபரப்பு நிலவியது. பத்திரிகையாளர்கள் யாரையும் போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் அவரை கைது செய்து அழைத்துச் சென்ற போது ஐஜேகே கட்சியைச் சேர்ந்த தொண்டர் வினோத் என்பவர் போலீஸார் வேன் முன்பு பாய்ந்தார். போலீஸார் அவரை பிடித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வீடியோவில் பதிவு: பச்சமுத்து கைது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மதன் தலைமறைவானது மற்றும் ரூ.75 கோடி மோசடி குறித்தும் பச்சமுத்துவிடம் விசாரணை நடந்தது. அவர் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் வீடியோவிலும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை அத்தனையும் நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும். மதன் எப்படி அறிமுகமானார் என்பது தொடங்கி பண விவகாரம், வேந்தர் மூவிஸ், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விசாரணைக்குத் தேவையான அனைத்துக் கேள்விளும் கேட்கப்பட்டன. இவ்வழக்கில் ஏற்கனவே திண்டுக்கல் ஐஜேகே மாவட்ட செயலாளர் பாபு, திருச்சியை சேர்ந்த டாக்டர் பார்கன் பச்சமுத்து, மதுரையை சேர்ந்த சண்முகம், மதனின் கூட்டாளி சுதீர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் சீட் கொடுப்பதாக கூறி ரூ.75 கோடி வரை மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே பச்சமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்று தெரிவித்தார்.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ