Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராட்டக் களத்தில் தமிழக விவசாயிகள்... ஏன்?

      

முப்போகமும் வேளாண்மை செழித்த தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு போகம் விவசாயம் நடந்தாலே பெரிய சாதனை என்கிற நிலை உருவாக்கப்பட்டு, குடிநீருக்கும்,அரிசிக்கும் பருப்புக்கும் அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இழந்த நீர் ஆதார உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்து வரும் நிலையில்,காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளும் பிற மாவட்ட விவசாயிகளும் ஒன்றிணைந்து மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு ஆயத்தமாகியுள்ளனர். இதற்கென அனைத்து மாவட்ட விவசாயிகளும் பலகட்ட ஆலோசனைகள் நடத்தியுள்ளனர்.பலகட்ட போராட்டங்கள் நடத்த அதில் முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடக்கமாக கடந்த ஒரு வாரம் முன்பு காவிரி டெல்டா விவசாயிகள் கர்நாடகம் சென்று அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம்,காவிரியில் நீர் திறந்து விடக் கோரி வலியுறுத்தினர். ஆனால் அவர், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்று கூறி தண்ணீர் திறக்க மறுத்துள்ளார். இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.                        

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், காவிரி பாசனப் பகுதி சம்பா சாகுபடிக்கு நீர் பெறுவது தொடர்பான, அனைத்து விவசாய சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இரண்டு நாளுக்கு முன்பு  நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,

" கர்நாடக அரசு, காவிரி நீரை காலத்தோடு திறந்து விடாததால், காவிரி டெல்டா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. இந்த ஆண்டு சம்பா சாகு படிக்காவது காவிரி நீரை தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.

அதற்கு, உடனடியாக அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்ட வேண்டும். எங்களை, முதல் வர் தலைமைதாங்கி அழைத்துச் சென்று, பிரதமர், மத்திய நீர்ப் பாசனத் துறை அமைச்சர் ஆகி யோரை சந்தித்து, தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பெற்றுத் தர வேண்டும். மேலும் காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைக்க வும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்கவும் வற்புறுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை பிரதமர் ஏற்க மறுத்தால், செப்டம்பர் 2-வது வாரத்தில், தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் குறைந்தது 3 நாட்களுக்கு தொடர் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறோம்" என்றார்.

இந்நிலையில்,தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாளை(30.08.2016) மாநிலம் தழுவிய அளவில் ரயில் மறியல் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடக்கவுள்ளன. சென்னையில்,சென்ட்ரல் ரயில் நிலையம், பல்லாவரம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடக்கவுள்ளது.     

தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் பல உள்ளன. மாவட்டம் தழுவிய அளவில் ஆங்காங்கே பல இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடைபெறும். இந்நிலையில், மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து உள்ளார்கள். அரசியல் சார்பற்ற முறையில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விவசாயிகளால் நடத்தப்படவுள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு முழுமையான  ஆதரவை அனைத்து அரசியல் கட்சிகளும், வணிகர்களும் கொடுத்து, விவசாயிகளும் ஒருங்கிணைந்து முழு அடைப்பு போராட்டத்தை வெற்றியடைய செய்ய  வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.     

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ