Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

100 சதவீத கழிப்பறையை உறுதி செய்யும் முதல்வர்..! கேரளா பாணியில் அதிரடி

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் பொருட்டு தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார். 

தமிழக சட்டப்பேரவை விதி 110ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், "தமிழகத்தில் 5 மாநகராட்சிகள் மற்றும் 49 நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 30 திட்டங்கள்  முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள திட்டங்கள்  பல்வேறு நிலைகளில்  முன்னேற்றத்தில் உள்ளன.  இந்த ஆண்டு, மேட்டுப்பாளையம் நகராட்சியில்பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் 91 கோடியே 70 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது தடுக்கப்படும்.

திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் வகையில் இந்த ஆண்டு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில்  1,25,352  தனிகுடியிருப்பு கழிவறைகள்  150 கோடியே 42  லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்படும்.  மேலும், மொத்தம் 2,184 இருக்கைகள் கொண்ட  சமுதாய கழிப்பறைகள்  21 கோடியே 40 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில்  கட்டப்படும்.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுக்க மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  விழிப்பு உணர்வு பரப்புரையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் சுகாதார சீர்கேடு, திடக்கழிவுகளை குறைத்திடும் வழிமுறைகள், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவை குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விழிப்பு உணர்வு பணிகள்  57 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீர் மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்த ஈரோடு  மாநகராட்சியில் இரண்டாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரினை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்காக  மீண்டும் சுத்திகரிக்க  20 MLD கொள்ளளவு  உள்ள  எதிர்மறை சவ்வூடு பரவலுடன் கூடிய மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 62 கோடியே 20 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் (PPP Mode)  நிறுவப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீரானது தொழிற்சாலை பயன்பாட்டிற்காக  வழங்கப்படும்.

இதே போன்று, பெரம்பலூர் நகராட்சியில், நெடுவாசல் சாலையில் அமைந்துள்ள 4.20 MLD  கொள்ளளவு  உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும்  இரண்டாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரினை, மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்காக  மீண்டும் சுத்திகரிக்க  2.50 MLD  கொள்ளளவு  உள்ள  எதிர்மறை சவ்வூடு பரவலுடன் கூடிய மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் 12 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு  மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் (PPP Mode)  நிறுவப்படும்.

பேரூராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தலை அறவே நீக்கம் செய்திடும் பொருட்டு இந்த ஆண்டு 90,150 எண்ணிக்கையிலான தனிநபர் கழிப்பிடங்கள் 108 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும், 2,620  இருக்கைகள் உள்ளடக்கிய  சமுதாயக் கழிப்பிடங்கள் 17 கோடியே 3 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் 100 சதவீத கழிப்பறை அமைப்பதை உறுதி செய்யும் வகையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இதனை டிசம்பர் மாதத்தில் முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதே பாணியில் தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.

சகாயராஜ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ