Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின் கையால் சாதனை விருது! துணை கலெக்டர் அசத்தல்!

துரை மாவட்டத்தின் கூடுதல் கலெக்டர் ரோஹினி ராம்தாஸ் ஊரக வளர்ச்சி முகமை மூலம் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டிச் சிறப்பான சுகதாரப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அலங்காநல்லூர், திருமங்கலம், வாடிப்பட்டி போன்ற பகுதிகளில் முழு ஆர்வத்தோடு செயல்பட்டு, கிராம மக்களுக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுத்து அதனைப் பயன்படுத்த வலியுறுத்தி, பல விழிப்பு உணர்வுகளைப் பொதுமக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார். அதனால் விருவிருவென்று ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின் மூலம் பல பயனாளர்கள் பயன்பெற்றனர். அதனைத் தொடர்ந்து ரோஹினி ராம்தாஸுக்கு சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் மத்திய அரசின் சார்பாகவும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் சார்பாகவும் டெல்லியில் நடந்த விழாவில் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் கைகளால், சாதனைக்கான விருது வழங்கப்பட்டது.

 

‘‘அடிப்படைத் தேவைகளை புரிந்துகொண்டேன்!’’

இதுபற்றி ரோஹினி ராம்தாஸ், ‘‘மத்திய அரசு என்னைப் பெருமைபடுத்தியது மகிழ்சியாக உள்ளது. ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரரிடம் விருதுபெற்றது கூடுதல் சந்தோஷம். மொத்தம் 26 மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். இதில், கலெக்டர்கள் மற்றும் கூடுதல் கலெக்டர்கள் அடக்கம். நான் பாராட்டுகள், பரிசுகளை எதிர்பார்த்துச் செயல்படவில்லை. கிராம மக்களுக்கு விழிப்பு உணர்வைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். அதனால் எப்போதும் எனது பணியைத் திறம்படச் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் மகாராஷ்டிர பெண்ணாக இருந்தாலும் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளை புரிந்துகொண்டேன். தமிழ்நாட்டுக்குப் பணிக்கு வந்து எட்டு ஆண்டுகளாகிவிட்டன. அதுவும் நான், முதலில் பயிற்சியில் இருந்தது மதுரையில்தான். எனக்கு மதுரையை மிகவும் பிடித்திருக்கிறது. இங்கு பணிபுரிவது மிகவும் எளிமையாக இருக்கிறது. நான் கிராமப் பகுதிகளுக்குச் சென்று வருவதால் அங்குள்ள மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது’’ என்றார்.

அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமத்தில் 8-ம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவி ஒருவர், ‘‘மாதவிடாய்க் காலங்களில், தான் மிகவும் சிரமப்பட்டேன். தற்போது அதற்குத் தீர்வு கிடைத்துவிட்டது. தனிநபர் கழிப்பறை திட்டத்தை எங்கள் ஊருக்குக் கொண்டுவந்த கலெக்டர் அவர்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்திருந்தார் அந்த மாணவி. இதற்கு ரோஹினி ராம்தாஸ், ‘‘இந்த விருதைவிட, இதுவே எனக்கு சந்தோஷம். இது பெரும் மகிழ்சியளித்தது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

மோடி பாராட்டிய தம்பதி!

ஸ்வட்ச் பாரத் தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறை கட்டிப் பயன்படுத்திவரும் மதுரை அச்சம்பட்டி கிராமத்து அங்கம்மாள் மற்றும் அழகு தம்பதியினரை, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பாராட்டினார். ‘‘இளையவர்களுக்கு வழிகாட்டியாய் அமைவது அனுபவசாலிகளான முதியவர்கள்தான்’’ என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து, அந்தத் தம்பதிகளுக்குப் பண உதவிகளும் பாராட்டுகளும் கிடைத்தன.

 

‘‘விழிப்பு உணர்வைத் தூண்டிய ரோகிணி ராம்தாஸ்!’’

இதுகுறித்து அச்சம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள அங்கத்தினரை பிரதமர் பாராட்டியது எங்கள் கிராமத்துக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன். அழகு மற்றும் அங்கம்மாள் தம்பதியினர்தான் தனிநபர் வீட்டுக் கழிப்பறை திட்டத்தின் முதல் பயனாளிகள். நாங்கள் சொன்னவுடன் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு கழிப்பறை கட்டிக்கொள்ள சம்மதித்தனர். எங்கள் கிராமத்தில் உள்ள 377 வீடுகளில், 145 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. அதில், முதலில் 30 வீடுகளைத் தேர்ந்தெடுத்து கழிப்பறை கட்டத் தொடங்கினோம். முதலில், யாருக்கும் இதில் அதிக நாட்டம் இல்லை. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட அலுவலர் ரோகிணி ராம்தாஸ், வீடு வீடாகச் சென்று கிராம மக்களிடம் விழிப்பு உணர்வைத் தூண்டினார். பொதுவான இடங்களிலும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்களிடமும் சென்று எடுத்துக்கூறினார். மேலும், சுமார் 30 முறைக்கு மேல் வந்து எங்கள் ஊர் மக்களிடம் இதுபற்றி எடுத்துரைத்தார். அதன் காரணமாகவே, எங்கள் ஊர் பெருமை அடைந்திருக்கிறது. தற்போது 80 பஞ்சாயத்துகளில் 40 ஆயிரத்துக்கும் மேலான பயனாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்ததற்காக சச்சின் டெண்டுல்கரின் கையில் இருந்து விருது வாங்கியுள்ளது பெருமையளிக்கிறது. கண்டிப்பாக, இப்படிப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டும்’’ என்றார்.

ரோஹிணி ராம்தாஸ், தேர்தல் சமயங்களில் மதுரை மாவட்டம் முழுவதும், ‘அனைவரும் வாக்களிக்க வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியரோடு இணைந்து, புதுப்புது வித்தியாசமான விழிப்பு உணர்வுகளை வாக்காளருக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சே.சின்னதுரை,

படம்: க.விக்னேஷ்வரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ