Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தக்காளி விலை வீழ்ச்சி! நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

டந்த மாதம் தக்காளி விலையை நினைத்துக் கவலைப்படாத மக்களே இருக்க முடியாது. கிலோ 120 ரூபாய் என விற்ற தக்காளியை அண்ணாந்து பார்த்தனர் மக்கள். பேஸ்புக், வாட்ஸ் அப் என எல்லா ஏரியாவிலும் வெங்காயத்திற்கு அடுத்து தக்காளி மீம்ஸ், தூள் பறந்தன. அப்போது தங்கமாக பார்க்கப்பட்ட தக்காளி இப்போது தகரமாக மாறிப்போயிருக்கிறது. அன்று கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட போது வருந்திய நாம் இன்று அதனைப் பற்றி மறந்தே விட்டோம் அல்லவா? இன்று தக்காளி, ரூ.10 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படுகிறது. இதற்கான காரணம் குறித்தும், விவசாயிகளின் நிலைமை குறித்து, முன்னோடி இயற்கை விவசாயி, திருச்செங்கோடு நடேசனிடம் பேசினோம்.

 "தக்காளியின் விலை உயர்ந்திருந்தபோதும் சரி, தாழ்ந்திருந்தபோதும் சரி. விவசாயிக்கு எதுவுமே கிடைக்கவில்லை, எல்லா லாபமும் இடைத்தரகர்ளுக்குத்தான். எப்பவுமே தக்காளி விலை ஏறுவதும், இறங்குவதும் எப்போதும் நடப்பதுதான். வரத்து அதிகமானால் விலை குறைவதும், வரத்து குறைந்தால் விலை அதிகமாவதும் வாடிக்கைதான். ஆனால் விலை ஏறினாலும், இறங்கினாலும் விவசாயிகளுக்கு எப்போதும் லாபம் கிடைப்பதில்லை. எங்களிடம் 30 ரூபாய்க்கு வாங்கி 80 ரூபாய்க்கும், 120 ரூபாய்க்கும் விற்பனை செய்த கொடுமைகளும் இங்கேதான் நடந்தது. விலை ஏறும்போது அதை ஏற்றிவிடுவது இடைத்தரகர்கள்தான். இதனால் விவசாயிகளும், நுகர்வோரும்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உற்பத்தி செய்யும் விவசாயிக்கு இன்று உற்பத்தி செய்யும் விலையில் 25% கூட தக்காளிக்கு விலை கிடைக்கவில்லை. அப்படியே பறித்துக்கொண்டு சந்தைக்கு போனாலும், இடையில் உள்ள சுங்கத்திற்கும், வாகன வாடகைக்குமே சரியாக இருக்கிறது. தக்காளி 120 ரூபாய் விற்றபோது, மக்களிடம் அதைபற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால் இன்று மூன்று ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் விற்கும்போது மக்கள் விவசாயிகளை கண்டுகொள்வதில்லை.  அன்று 300 ரூபாயில் வேலைக்கு சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் இன்று 10,000 ரூபாய்க்கு மேல், ஆனால் மக்களுக்காக உழைக்கும் விவசாயிகளை பற்றி கண்டுகொள்ளாது. முட்டைக்கு எவ்வளவு விலை என்று முட்டை உற்பத்தியாளர் சங்கமே முடிவு செய்கிறது. ஆனால் விவசாய பொருட்களுக்கு மட்டும் இடைத்தரகர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள். 


தமிழ்நாட்டில் எந்த தொழில் செய்வோர் தாக்கப்பட்டாலும், அவர்களுக்காக அந்தந்த சங்கங்களும், அரசும் குரல் கொடுக்கிறது. ஆனால் விவசாயிகளை அடித்தால் கேட்ககூட ஆள்கிடையாது. இப்படி விலைவாசி விற்றால் விவசாயி எப்படி வாங்கிய கடனை கட்ட முடியும். தவணை தவறினால் வங்கிகளே காவல்துறையில் புகார் கொடுத்து விவசாயியை தாக்கும். ஒருவேளை விளைவித்த பொருளை சந்தைக்கு கொண்டுபோனால் அங்கே இடைத்தரகர்கள் அநியாயமான விலைக்கு கேட்கிறார்கள். கரும்புக்கு இவ்வளவு மானியம் என அறிவித்த அரசாங்கமே உரிய விலை கிடைக்காமல் இருக்கும்போது விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. இப்படி எங்கே போனாலும் விவசாயி ஏமாற்றப்படுவதுதான் நடக்கிறது. அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதவரை விவசாயி இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவான். நேரடியான சந்தை வாய்ப்பை அரசாங்கம் எங்களுக்காக அமைத்து தர வேண்டும். தமிழ்நாட்டில் பொருட்களை பதப்படுத்துவதற்கான குளிர்பதன கிடங்குகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சரியாக சொல்லப்போனால் விவசாயம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இல்லாமல் போய்விடும். 'தக்காளி தங்கமானாலும், தகரமானாலும்' எங்களுக்கு எப்போதுமே ஏமாற்றம் மட்டுமே மிச்சம். அன்று விலை ஏறும்போது அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய தீர்வை எப்போது கொண்டுவருகிறதோ, அப்போதுதான் விவசாயமும், விவசாயிகளும் வாழ முடியும்" என்றார். 

விவசாயிகளின் குரல், நமக்கானதும் கூட..!


  -துரை.நாகராஜன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close