Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலினுக்கு சபரீசன்; வாசனுக்கு..? இப்படித்தான் காலியாகிறது த.மா.கா

கடந்த 2014 நவம்பர் 28ல் திருச்சியில் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தமாகா ஆரமித்த ஜி.கே.வாசனுக்கு கடைசி அடி அதே திருச்சியில் இருந்து விழுந்திருக்கிறது. தமிழகம் முழுக்க வாசன் வசமிருந்த மாவட்ட தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் எதிர் முகாம்களுக்கு போய்க்கொண்டே இருக்க, வாசனும் அமைதியாக இருக்கிறார்.

திருச்சியில் நடந்த துவக்க விழாவை முன்னின்று நடத்திய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், திருச்சி வடக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜசேகரன் உள்ளிட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார்கள். அதிலும் ராஜசேகரன், வாசனை நேரில் சந்தித்து விலகல் கடிதம் கொடுத்துவிட்டு, தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை, காங்கிரஸ்கூட கடந்த 60 வருடங்களுக்கு மேல் ஏதாவது ஒரு கட்சியைதான் சார்ந்து இருக்க வேண்டியிருக்கு. நாங்கள் இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க இருக்கிறோம். இதை தவிர வேறு வழி தெரியவில்லை என்று சொன்ன ராஜசேகரிடம், எனக்கு நேரம் சரியில்லை என்னய்யா பண்ண சொல்றீங்க என பேசினாராம் வாசன். ஆனால் போகாதீங்கன்னு வாசன் ஒரு வார்த்தைகூட சொல்லலையாம்.  இப்போதுவரை தமிழகம் முழுவதும் 22 மாவட்ட செயலாளர்கள் வாசன் முகாமில் இருந்து கிளம்பிவிட்டார்கள். மிச்சமிருப்பது  ஞானதேசிகன் மட்டும்தானாம். அவரும் போனாலும் பரவாயில்லை. தவறான முடிவெடுத்துவிட்டேன் என வாசன் இப்போது பல நேரங்களில் புலம்புகிறாராம்.

இதுகுறித்து பேசிய அதிருப்தியாளர்கள், "கட்சி முழுக்க முழுக்க வாசன் மருமகன் சுரேஷ் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. ராஜசேகர், ஆறு தேர்தலில் போட்டியிட்டு ஒருமுறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சாருபாலா தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் பரம்பரையில் வந்த ராணி, அவரது குடும்ப சொத்தையும் கட்சிக்காக கரைத்தவர், இப்படி வாசனை நம்பிய பலர் அவர் குடும்பத்தில் ஒருவராக இருந்ததுடன், அவருக்காக அனைத்தையும் செய்தார்கள். இப்போது அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் ஐக்கியம் ஆக தேதிக்காக காத்திருக்கிறார்கள்.  ஏற்கனவே காங்கிரஸை உடைக்க வாசன் மூலம் காய் நகர்த்திய அதிமுக, இப்போது வாசன் கட்சியையே அழிக்க முயற்சி நடக்கிறது. ஆனால் வாசனின் அடுத்தடுத்த முடிவுகள் தவறாகிவிட்டது. காங்கிரஸை விட்டு வந்திருக்ககூடாது. என்னதான் ராகுலிடம் மன சங்கடம் ஏற்பட்டிருந்தாலும், கொஞ்ச நாள் அமைதியாக இருந்திருந்தால், இளங்கோவன் தமிழக காங்கிரஸ் பொறுப்பில் இருந்து விலகிய பின் அடுத்த தலைவரை அடையாளம் காணமுடியாமல் காங்கிரஸ் தலைமை தவிக்கிறது. ஆனால் அங்கிருந்திருந்தால் இன்று வாசன் கட்சியின் மாநில தலைவராகி இருக்கக்கூடும். ஆனால் அவசரப்பட்டு கட்சியை ஆரம்பித்தார். அதுபெரிய தவறு என வாசன் இப்போது உணர்ந்ததுடன், குறுகிய காலத்திற்குள் கட்சியை நடத்த முடியல, பேசாமல் அமைதியாக இருந்துட்டு போய் விடலாம் என நினைத்து சங்கடப்படுகின்றாராம்.

இப்போது கட்சி ஜி.கே.வாசனின் மாப்பிள்ளை சுரேஷின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம். கடந்த தேர்தலில் 20 சீட், ஒரு எம்.பி சீட் தருவதாக கார்டனில் இருந்து உத்தரவாதம் கிடைத்ததால்தான் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதையும் வாசனின் மாப்பிள்ளை சுரேஷின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பேச்சுவார்த்தை சொதப்பி, மக்கள் நலக்கூட்டணி பக்கம் போய், வேட்பாளர்கள், கை செலவுக்குகூட காசு இல்லாமல் கஷ்டப்பட்டது எங்களுக்குதான் தெரியும். அதுமட்டுமல்லாமல் பல விசயங்கள் வாசனுக்கு தெரியாமல் சுரேஷ்தான் நடத்துகிறார். இவரின் நடவடிக்கைகள் பலருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்டாலினுக்கு அவரது மாப்பிள்ளை சபரீசன் நடந்துகொள்வதைபோல, வாசனுக்கு சுரேஷ்தான் எல்லாம் என காட்டிக்கொள்கிறார். அது இங்க நடக்குமா, கட்சியில் என்ன நடக்குதுன்னு கட்சியில் அடுத்தகட்ட தலைவர்களுக்கே தெரியல. இது உணர்ந்தும் வாசனால் நடவடிக்கை எடுக்க முடியல. இதுபிடிக்காமல்தான் பல தலைவர்கள் போய்க்கொண்டே இருக்கிறார்கள். வாசனும் நம்மை நம்பி வந்தவர்களை இப்படி குழியில் தள்ளிட்டோமே என நினைத்து கட்சியை விட்டு போகிறவர்கள் போகட்டும் என நினைக்கிறார். இப்போதுகூட பலர் காங்கிரஸ் பக்கம் போய் விடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் காங்கிரஸுடன் மீண்டும் இணையும் பேச்சுக்கே இடமில்லை என வாசன் அறிவிக்கிறார். ஆரம்பகாலக்கட்டத்தில் இருந்து மத்திய மண்டலத்தில் வாசன் குடும்பத்துக்கு செல்வாக்கு அதிகம். இப்ப அதுவும் சரிய துவங்கிவிட்டது. இவ்வளவு இருந்தும் தடுப்பது எது.  எல்லோரும் போனபிறகு விரைவில் வாசன் ஒரு தேசிய கட்சியில் சேர வாய்ப்பிருக்கிறது. அது பிஜேபியாககூட இருக்கலாம் என்றார்கள். நல்லா இருந்த ஒருதலைவரை இப்படி வீணாக்கி, அடுத்தக்கட்ட நகர்வே இல்லாமல் முடிவெடுக்க வைச்சிட்டாங்களே" என புலம்பினார்கள்.

இந்நிலையில் வரும் 30ஆம் தேதி ஜி.கே.மூப்பனார் நினைவு நாள், எப்போது அரசியல் பரபரப்புகளுக்கு நினைவுநாளில் வித்திடுவார், நாளை இந்த பிரச்னைகளுக்கு தீர்வு சொல்வாரா என காத்திருக்கிறார்கள் வாசன் தீவிர ஆதரவாளர்கள்.

சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ