Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மண்ணைவிட்டு மறைந்தார் மக்கள் இசைக்கலைஞர்! #திருவுடையான் #அஞ்சலி

“எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கும் பூமி... 
எமை திக்கற்றதோர் அகதிகளாய் மாற்றிவிட்ட பூமி...
நல் உறவு என்றே சொல்லி எமை விழுங்குது இந்த பூமி
நாங்கள் கதறும் குரல் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும் பூமி..."
திருவுடையானின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது இதயம் உருகிப் போகும். 

“ஆத்தா உஞ் சேலை...  அந்த ஆகாயத்தைப் போல...
தொட்டில் கட்டி தூங்க... தூளி கட்டியாட...
ஆத்துல மீன் பிடிக்க... அப்பனுக்கு தலைதுவட்ட...
பாத்தாலே சேர்த்தணைக்க தோணும்
நான் செத்தாலும் என்னைப் போர்த்த வேணும்..." என்று திருவுடையான் பாடும்போது, அத்தனை பேரும் தங்கள் தாயை நினைத்து மறுகிப் போவார்கள்.  

திருவுடையானின் கணீர்குரலில் ஆத்தா உஞ்சேலை..’ பாடலைக் கேட்க...

 

 

 

“தமிழா... நீ பேசுவது தமிழா...
அன்னையை தமிழ் வாயால் மம்மி என்றழைத்தாய்...
அழகு குழந்தையை பேபி என்றழைத்தாய்
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்
என்னுயர் தமிழை கொன்று தொலைத்தாய்..." என்று காசி ஆனந்தன் வரிகளை அவர் பாடும்போது, கேட்போர் நெஞ்சில் தீ மூளும். 

திருவுடையானின் மக்களிசைக் குரல் ஒலிக்காத ஊரில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய மேடைகள், இடதுசாரி மாநாட்டு மேடைகள், திராவிட இயக்க மேடைகள், மக்கள் இயக்க மேடைகள் என தினமொரு திக்கில் தம் கணீர் குரலால் வர்க்க பேதங்களையும், சாதிய ஒடுக்குமுறைகளையும், உறவுச் சீர்குலைவுகளையும், அரசியல் கீழ்மைகளையும் பாடலாக்கி ஒலித்தவர். 51 வயதிலும் இடைவிடாது பயணித்து, முற்போக்கு மேடைகளை தன் இசையால் நிறைத்த திருவுடையான் 28ம் தேதி நள்ளிரவில், மதுரை வாடிப்பட்டி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

சேலத்தில் தம் நண்பரின் இல்ல நிகழ்ச்சிக்குச் சென்று, பாடல்கள் பாடி மகிழ்வித்துவிட்டு, தம் தம்பி மற்றும் இசைக்குழுவினரோடு சங்கரன்கோவில் திரும்பும் வழியில், நின்று கொண்டிருந்த லாரி மீது கார்மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே திருவுடையான் உயிரிழந்தார். 

திருவுடையானின் சொந்த ஊர் சங்கரன்கோவில். நெசவை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பம். விளம்பர போர்டுகள் எழுதுவது தான் திருவுடையானின் தொழில். இயல்பிலேயே அமைந்த குரல் வளமும், இசை சார்ந்த நட்பு வட்டமும் இவரை பக்திப் பாடகராக மாற்றியது. சீர்காழி கோவிந்தராஜன், ஜி.எஸ்.ஜெயராமன் போன்றோரின் பாடல்களை இவர் பாடி கேட்க வேண்டும். மிகச்சிறப்பாக தபேலா வாசிப்பார். காலப்போக்கில், கரிசல்குயில் கிருஷ்ணசாமி போன்றோரின் நட்பு காரணமாக இடதுசாரி இயக்கத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட, மக்கள் பாடகனாக மாறினார். இவரே எழுதி, இசையமைத்துப் பாடுவார். வரிகளில் உணர்ச்சி பொங்கும்.

“கோவில்களில் பக்திப்பாடல்களை பாடிக்கொண்டிருந்த திருவுடையான், இடதுசாரி இயக்கத் தொடர்புக்குள் வந்தபிறகு, வர்க்கப் போராளியாக மாறிப்போனார். அவருடைய பாடல்கள் தேசத்தையே உயிர்பித்தன. அவரது குரல் ரொம்பவே தனித்தன்மையானது. உச்சஸ்தாயியில் பாடக்கூடிய அபூர்வ குரல். விருமாண்டி படத்தில், "கருமாத்தூர் காட்டுக்குள்ள" பாடல் பாடியபோது, அவருடைய குரல் வளம் கண்டு இளையராஜாவே வியந்திருக்கிறார். கங்கை அமரன் எங்கே இசை நிகழ்ச்சி நடத்தினாலும் திருவுடையானை அழைத்து நான்கைந்து பாடல்களை பாடச்சொல்லுவார். அந்த அளவுக்கு ஆளுமைகள் விரும்பக்கூடியவராக திருவுடையான் இருந்தார். கலைஞன் என்ற கர்வமே இல்லாமல் எல்லாரோடும் இயல்பாக பழக்கூடிய எளிய மனிதன். சீர்காழி கோவிந்தராஜன் மீது தீவிர பற்றுள்ளவர். அவர் இறந்தபோது, சங்கரன்கோவிலில் இரங்கல் கூட்டம் நடத்தி, விடியவிடிய தனி ஒருவராக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்களை தபேலா வாசித்தபடி பாடிக் கொண்டிருந்தார்.

வெறும் கலைஞனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ளாமல், இடதுசாரி களப்போராளியாகவும் இருந்தார். சங்கரன்கோவில் கைத்தறி நெசவாளர் தொழிற்சங்க தலைவராக செயல்பட்டார். நெசவாளர்களின் பிரச்னைகளுக்காக பலமுறை போராட்டங்களை நடத்தியிருக்கிறார். சங்கரன்கோவில் நகர சிபிஎம் செயலாளராக 6 ஆண்டு காலம் இருந்தார். ஒரு கலைஞன், ஒரே பகுதிக்குள் அடைபட்டுக் கிடக்கக்கூடாது என்பதற்காகவே அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கு கொண்டு வந்தோம். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நெல்லை மாவட்டச் செயலாளராகவும், மாநிலக்குழு உறுப்பினராகவும் இருந்தார். 
தனிப்பட்ட முறையில் என் குடும்பத்துக்கு நெருக்கமான தம்பி அவர். கட்சிபேதம் பார்க்காமல் எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவர். அதேநேரம், இயக்கத்தின் கொள்கைகளை எச்சூழலிலும் விட்டுக்கொடுக்காதவர். திருவுடையானின் மரணம் இடதுசாரி இயக்கத்துக்கும் தமிழிசைக்கும் நேர்ந்த பேரிழப்பு..."  என்று வருத்தம் தோயச் சொல்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ச.தமிழ்செல்வன்.

திருவுடையானின் குரல் வளம் கண்டு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. கொள்கைக்கு முரணில்லாத பாடல்களை மட்டுமே பாடினார். இவன், களவாடிய பொழுதுகள், மயில், மதயானைக் கூட்டம் உள்பட பல படங்களில் பாடியுள்ளார்.  

“20 வருடங்களுக்கு முன்பு, திருவுடையானை ஒரு இயக்க மேடையில் பார்த்தேன். பார்த்தவுடனே மனதிற்கு நெருக்கமாகி விட்டார். என்.எஸ்.கிருஷ்ணன் பாடல்களை அவ்வளவு உயிரோட்டமாகப் பாடுவார். உக்கார்ந்து தபேலா இசைத்துக் கொண்டே பாடுவார். நிறைய பேச மாட்டார். ஒற்றை வார்த்தையில் தான் பதில் சொல்வார். இயக்கத் தோழர்கள் பணம் கொடுத்தால், அவ்வளவு எளிதில் வாங்க மாட்டார்.

நானும், நா.முத்துக்குமாரும் குற்றாலத்துக்கு போவதுண்டு. அந்த தருணங்களில் தபேலாவை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். அவரைப் பாடச்சொல்லி கேட்டுக்கொண்டே இருப்போம். முத்துக்குமார் போய்விட்டார். இப்போது திருவுடையானும். வாழ்க்கையில் மிகவும் தனித்து விடப்பட்ட நிலையில் தவிக்கிறேன்..." என்று கலங்குகிறார் எழுத்தாளர் பவா.செல்லத்துரை. 

 

திருவுடையானின் மனைவி பெயர் சங்கர ஆவுடையம்மாள். மகன் பழனிபாரதி. கல்லூரி மாணவர். மகள்கள் அன்பரசியும், அறிவரசியும் இரட்டையர்கள். பிளஸ் டூ படிக்கிறார்கள்.  திருவுடையான் மறைந்து விட்டார். அவர் உயிர்ப்பித்துச் சென்றிருக்கும் இசை எக்காலமும் காற்றுவெளியில் சுற்றிக்கொண்டிருக்கும். அதற்கு மறைவேயில்லை..!

-வெ.நீலகண்டன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ