Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோனோ ரயிலுக்கு பதில் அதிவிரைவுப் பேருந்து! - அன்புமணியின் அட்வைஸ்

சென்னை: சென்னையில் மோனோ ரயில் திட்டத்திற்கு பதிலாக அதிவிரைவுப் பேருந்து திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னையில், பூந்தமல்லி-கத்திப்பாரா சந்திப்பு இணைப்புடன் போரூர் முதல் வடபழனி வரை 20.68 கி.மீ தொலைவுக்கு ரூ.3,267 கோடியிலும், வேளச்சேரி முதல் வண்டலூர் வரை 20.80 கி.மீ தொலைவுக்கு ரூ.3,135 கோடியிலும் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தால், மோனோ ரயில்களில் தினமும் 64,000 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இது சென்னையின் போக்குவரத்து நெரிசலை எந்த வகையிலும் குறைக்காது. அதுமட்டுமின்றி, போரூர்-வடபழனி சாலை தான் சென்னையில் மிகவும் குறுகலான நெடுஞ்சாலை ஆகும். அந்த சாலையின் மத்தியில் மோனோ ரயில் திட்டத்திற்காக தூண்கள் அமைக்கப்பட்டால், பேருந்து போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். மோனோ ரயிலால் ஏற்படும் சாதகங்களைவிட, அதனால் பேருந்து போக்குவரத்துக்கு ஏற்படும் பாதகம் அதிகம்.

இதற்கெல்லாம் மேலாக மோனோ ரயில் திட்டம் உலகம் முழுவதும் தோல்வியடைந்த திட்டமாகும். இத்திட்டத்தை செயல்படுத்த கடந்த 2011-ம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், ஒப்பந்தம் கோர சிலர் மட்டுமே முன்வந்ததால் அரசே அந்த நடைமுறையை ரத்து செய்தது. 2013-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தம் எடுக்க எவருமே முன்வரவில்லை. 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் சில நாட்களில் மோனோ ரயில் திட்டத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்றார். ஆனால், ஒப்பந்தம் கோரப்படவில்லை.

43 கி.மீ. நீள மோனோ ரயில் திட்டத்திற்காக செலவிடப்படவிருக்கும் ரூ.6,402 கோடியில் நான்கில் ஒருபங்கு தொகையில், அதாவது ரூ.1,500 கோடியில் சென்னையில் 96.70 கி.மீ தொலைவுக்கு அதிவிரைவுப் பேருந்துத் திட்டத்தை (பி.ஆர்.டி.எஸ்.) செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க முடியும். இதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகள் கடந்த 2013-ம் ஆண்டில் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் என்ற அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு விட்டன.

அதன்படி சென்னையில் கோயம்பேடு-பூந்தமல்லி (14 கி.மீ), கோயம்பேடு-அம்பத்தூர் (7 கி.மீ), கோயம்பேடு-மாதவரம் (12.40 கி.மீ), சைதாப்பேட்டை-சிறுசேரி (24.80 கி.மீ), சைதாப்பேட்டை-தாம்பரம் (18.20 கி.மீ), துரைப்பாக்கம்-குரோம்பேட்டை (10.60 கி.மீ), கோயம்பேடு-சைதாப்பேட்டை (9 கி.மீ) என 7 பாதைகளில் முதல்கட்டமாக அதிவிரைவுப் பேருந்து திட்டத்தை செயல்படுத்த முடியும். மோனோ ரயில் மூலம் ஒரு நாளைக்கு 60,000 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால், அதிவிரைவுப் பேருந்து திட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1.68 லட்சம் பேர் வீதம் ஒரு நாளைக்கு சராசரியாக 25 லட்சம் பேர் எளிதாக பயணம் செய்ய முடியும்.

இந்த திட்டத்தை 18 மாதங்களில் செயல்படுத்த முடியும் என்பதுடன், மூன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக செய்யப்பட்ட முதலீட்டை திரும்பப் பெற முடியும். எனவே, மோனோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, குறைந்த செலவில் அதிக பயனும், வேலைவாய்ப்பும் அளிக்கக் கூடிய அதிவிரைவுப் பேருந்துத் திட்டத்தை (பி.ஆர்.டி.எஸ்.) செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்று கூறி உள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close