Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவை எதிர்த்த பா.ம.க. பெண் வேட்பாளர் கைது


முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சமூக சேவகி ஆக்னஸ், மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ம.க சார்பில் களமிறக்கப்பட்டவர் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ஆக்னஸ். சமூக சேவகியான இவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். சமீபத்தில் பட்டினம்பாக்கம் சீனிவாசபுரத்தில் டாஸ்மாக் கடை மூடும் போராட்டத்தில் பங்கேற்றார். போராட்டம் காரணமாக அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் ஆக்னஸ் மீது ஏராளமான பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அதில், ஆக்னஸ், கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரியில் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கித் தர பணம் வாங்கியதாக கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி ஆக்னஸ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக பரணிபிரசாத் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து ஆக்னஸ் தரப்பினர் கூறுகையில், நகர்புற சமூக முன்னேற்ற அறக்கட்டளையின் நிறுவனர் ஆக்னஸ். இவர், பா.ம.கவில் மகளிரணி செயலாளராகவும் இருந்தார். மெரீனா கடற்கரையில் ஒதுங்கும் பிணங்களை அடக்கம் செய்வது, விநாயகர் சதூர்த்திக்கு தடுப்பு ஏற்படுத்து என பல சமூக பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட்டார். இது தான் அவர் மீது அரசியல் காழ்பு உணர்ச்சி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வீடு ஒதுக்கித் தர நடவடிக்கை எடுத்தார். ஆனால், அவர் மோசடி செய்ததாக அ.தி.மு.கவினர் சிலர் கூறி போலீஸில் புகார் கொடுத்து விட்டனர். கைது செய்வதற்கு முன்பு சைதாப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் பஞ்சாயத்து செய்தார். ஆக்னஸிக்கு சொந்தமான இடம் அச்சிறும்பாக்கத்தில் உள்ளது. அந்த இடத்தின் மதிப்பு 8 லட்சம் ரூபாய். அதன் ஆவணத்தையும் ஆக்னஸிடமிருந்து அந்த ரவுடி கும்பல் பிடுங்கி வைத்து விட்டது. இதுதவிர ஆக்னஸை மிரட்டி பல லட்சம் ரூபாயையும் பெற்ற பிறகு போலீசில் புகாரும் கொடுத்து விட்டனர். உதவி செய்ய சென்ற அவருக்கு இது உபத்திரமாக மாறி விட்டது. ஆக்னசுடன் கைது செய்யப்பட்ட பரணிபிரசாத், அவருடைய டிரைவர். அவருக்கும் இந்த வழக்குக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை" என்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "வீடுகளை ஒதுக்கித் தருவதாக கூறி சிலர் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆக்னசும் சிலரிடம் பணம் வாங்கியிருக்கிறார். பணத்தை திரும்ப கொடுக்க உறுதியும் அளித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. நியாயமாக  விசாரணை நடத்தி ஆக்னஸ், பரணி பிரசாத்தை கைது செய்துள்ளோம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்