Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

" தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி " ஆர்ப்பாட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கருத்து !

திமுக உறுப்பினர்களை சட்டமன்ற சபாநாயகர் கொத்தாக சஸ்பென்ட் செய்து வெளியே அனுப்புகிறார். வெளியே வருகிற அவர்கள், செய்தியாளர்களை 4-ம் எண் 'கேட்'டில் சந்தித்து பேட்டி தருகிறார்கள், பின்னர் இன்னொரு இடத்தில் போய் அமர்ந்து போட்டி சட்டசபை நடத்துகிறார்கள், இவைகள் காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வெளியாகிறது.

அரசின் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கையாக, 4-ம் எண் கேட் பகுதியில் வந்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவோ, கேமராக்களைப் பயன்படுத்தி எதையும் ஆவணப் படுத்தவோ முடியாதவாறு தடை விதிக்கப்படுகிறது. அரசின் செய்தித் துறையினர், காவல்துறையினர் இணைந்து அதைச் செய்கின்றனர். பத்திரிகையாளர் அறைக்கு அருகே உள்ள கதவுக்குப் பூட்டுப் போட்டும் வேலை கடந்த 22-ந்தேதி நடக்கிறது.

சட்டப்பேரவைச் செயலாளர், சபாநாயகர்,செய்தித்துறைச் செயலாளர், அதன் இயக்குநர், உதவி இயக்குநர், பி.ஆர்.ஓ. உள்ளிட்ட அனைவரையும் செய்தியாளர்கள் அணுகி, 'இந்தத் தடையை விலக்கிக் கொண்டு, முன்னெப்போதும் போல் அதே இடத்தில் கேமரா- மைக் சகிதமாக செய்தி சேகரிக்க அனுமதி அளிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில்தான் அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து "பத்திரிகையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு" வை பத்திரிகையாளர்கள் ஏற்படுத்தினர். பின்னர், சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பாக கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.

மூத்த பத்திரிகையாளர்கள் பலர் இதில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்துக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் , பத்திரிகையாளர்களும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசியதிலிருந்து,

அ.குமரேசன் : " செய்தியாளர்களை ஒடுக்குவதன் மூலம் செய்திகளைத் தடுத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், செய்தியாளர்கள் இன்று ஒடுக்கப்பட்டார்கள் என்பதே நாளை செய்தியாக மாறும் என்பதை எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்கள்.
செய்தி சேகரிப்பது மட்டுமல்ல, சேகரித்த செய்தியை எப்படி, என்ன கண்ணோட்டத்தில் கொடுப்பது என்பதும் ஊடக வியலாளர்களின் உரிமை. இது ஊடகவியலாளர்களின் உரிமை பறிக்கப்படுகிற பிரச்சனை மட்டுமல்ல. ஊடகங்களின் வழியாக, என்ன நடந்தது என அறிந்து கொள்ளும் மக்களின் உரிமையும் களவாடப்படுகிற பிரச்சனை."

ஆர்.மோகன் (மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (MUJ) ):

"சட்டசபை நிகழ்வுகளையும், சட்டசபைக்கு வெளியே நடக்கிற நிகழ்வுகளையும் செய்தியாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ஆனால், அந்தக் கடமையைச் செய்ய முடியாதவாறு கடந்த 22- ந்தேதி செய்தி சேகரிக்கும் இடத்திலிருந்து இந்த அரசால் பத்திரிகையாளர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர். சட்டசபை செயலர், செய்தித்துறை அதிகாரிகள், காவல் துறையினர் என்று அனைவரிடமும் பேசிப் பார்த்தும் இந்த தடை நீட்டிப்பை விலக்கிக் கொள்ளவோ, இந்தத் தடை ஏன் என்று சொல்லவோ முடியாத நிலையில் அவர்கள் மழுப்புகிறார்கள். சட்டசபையின் நாயகரான சபாநாயகரைப் பார்த்துக் கேட்கும்போது, 'சட்டசபை ஏரியாவுக்குள் நுழைய மிகுந்த கட்டுப்பாடுகள் இருக்கிறது, என்னுடைய காரையே நிறுத்திச் சோதித்த பின்னரே உள்ளே விட அனுமதிக்கிறார்கள்' என்கிறார். இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.  தேசியகொடி பொருத்தப் பட்டுள்ள ஒரு மாநிலத்தின் சபாநாயகர் காரையே நிறுத்திச் சோதனை செய்த பின்னர்தான் அவரே கோட்டையில் நுழைய முடிகிறது என்றால் இந்த நாட்டின் பாதுகாப்பு குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் மிகப் பெரிய அச்சமும், கேள்வியும் எழுகிறது.

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் கூறுகிறார். ஆனால், மூன்றாயிரத்து ஐநூறு போலீசார், அவர் செல்லக் கூடிய கோட்டையின் அகழியைச் சுற்றி பாதுகாப்புக்குப் போடப் படுகின்றனர்.
முதல்வரின் செய்தி அறிக்கைகள், அரசு பிரஸ் மீட் குறித்த செய்திகளைத் தாண்டி வேறு எந்த செய்தியும் ஊடகங்களில் வந்து விடக் கூடாது என்று முதல்வர் நினைப்பது மிகக் மோசமான செயலாகும். 'அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ' என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்."

இந்திய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (CJI) ஏ.செல்வராஜ் :

"சமூக வலை தளங்களில் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது, பத்திரிகையாளர்களைத் தூண்டி விட்டது எதிர்க்கட்சிதான் என்பதே அது. பத்திரிகையாளர்களுக்குச் சொந்த மூளை உள்ளது. யார் சொல்லியும், யார் தூண்டியும் செய்ய வேண்டிய அவசியம் பத்திரிகையாளர்களுக்கு இல்லை. அரசின் கண் கொண்டோ, எதிர்க்கட்சியின் கண் கொண்டோ ஒரு செய்தியை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை"

தமிழ்நாடு பிரஸ் போட்டோ கிராபர் அசோசியேஷன் (TNPPA) எல்.ஆர். சங்கர் :

"புகைப்படக் கலைஞர்களுக்கு ஸ்பாட் பிக்ஸர் அவசியம். அதைத் தடுக்க நினைக்கும் செயலே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எதிரியை எதிர்கொள்ள வேண்டிய நொடிப்பொழுது தருணத்தில் கேமராவைக் 'கிளிக்' செய்த படி முன்னேறும் கடமை எம் தோழர்களுக்கு உள்ளது.

அரசுத்துறையின் குறை, நிறைகளை ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வியர்வையை ரத்தமாக சிந்தி மக்கள் மன்றத்தில் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பில் உள்ள எங்களிடமிருந்து அந்தப் பொறுப்பை தட்டிப் பறிக்கும் செயலை அரசு செய்கிறது.

22-ந்தேதியன்று நான் கோட்டைக்குப் போனேன், எப்போதும் செய்தியாளர்கள் வந்து போகும் பாதையை அடைத்து, செய்தியாளர்களை நுழைய விடாதவாறு பூட்டப் பட்டிருந்த அறைக் கதவைப் படம் பிடித்தேன். அதைக் கூட செய்ய விடாமல் தடுத்து செய்தித்துறை அதிகாரிகளும், போலீசாரும் பாடாய்ப் படுத்தி விட்டனர். எங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் அவர்களிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறோம்"

மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு :

"பத்திரிகையாளர்களின் இந்த ஆர்ப்பாட்டம் என்பது எதிர்வினை. ஆனால், இதற்கான வினை என்பது தேவையற்ற ஒன்று. அந்த வினை என்பது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் போட்டி சட்டமன்றக் கூட்டம் நடத்தியது குறித்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டதுதான். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் செல்லும் வழியை அடைத்தது, அவர்களைக் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்தியது. மறுபுறம் இந்த எதிர்வினைக்குக் காரணம், உரிய நேரத்தில் செய்தியாளர்கள் , சட்டமன்ற செய்திகளை சேகரிக்க முடியாதவாறு வழக்கமான நான்காம் எண் 'கேட்'டை அடைத்தது. இதை இந்த அரசு வாபஸ் பெற வேண்டும், பத்திரிகையாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியைத் தொடர அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும்"

தமிழ்நாடு மீடியா கேமராமேன் ஆசோசியேஷன் (TMCA) தசரதன் :

சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக பத்திரிகையாளர்கள், கட்டாயப் படுத்தி வெளியேற்றப் பட்டுள்ளது இதுதான் முதல்முறை. இதுவே கடைசி முறை என்றிருக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்."

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் (CMPC) ஹாசிஃப்:

"முதன்முறையாக அனைத்துப் பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர்களுக்கான , அமைப்புகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இது ஒரு ஆரம்ப அடையாளம்தான், முடிவல்ல. உரிய தீர்வு கிடைக்காவிட்டால், இந்த கூட்டமைப்பு அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். இது காலத்தின் கட்டாயம் "

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (TUJ), தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் (TNOA), , தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (WJU) ஆகியவற்றின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைக்குச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. பங்கேற்ற அனைவரும் அரசிடம் அளிப்பதற்கான கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டனர்.

கோட்டை ஏரியாவில் வலம் வந்த போது ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர், "சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்குத் தடைவிதித்து அம்மா ஒரு வழி பண்ணிட்டாங்க இல்லே" என்று சிலாகிப்பதைக் கேட்க முடிந்தது. எதிர்காலத்தில் வரலாற்றுப் பதிவாக 'ஊடக சுதந்திரத்தை இந்தளவு நெருக்கியதும் 2016-ன் தமிழக சட்டமன்றம் தான்' என்று எழுதப்பட்டு விடுமே என்பது குறித்தெல்லாம் யாரும் அக்கறை கொண்டதாய் தெரியவில்லை.

-ந.பா.சேதுராமன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ