Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களை அரசாங்கம் அடித்து விரட்டுவதா? - தா.பாண்டியன் ஆவேசம்

 

கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு, வாடகை முறையை ரத்துசெய்து, ஒப்பந்த அடிப்படையில் பட்டா வழங்கி, அதற்கான தொகையை கணிசமான முறையில் பெற வேண்டும்’ போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குடிகாணி’ முறை!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில், பல்லாயிரகணக்கான நிலமற்றக் ஏழை குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இதற்காக இவர்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்பந்த அடிப்படையில் குத்தகை செலுத்தி வருகின்றனர். இவை, 1998-ம் ஆண்டுவரை ‘பகுதி முறை’ என்றும் ‘குடிக்காணி’ முறை என்றும் வழக்கத்தில் இருந்தது. ‘குடிகாணி’ முறை என்பது, கோயில் நிர்வாகத்திடமிருந்து ஒரு நிலத்தைக் குறிப்பிட்ட ஆண்டுக்குக் குத்தகைக்கு வாங்கி அதற்கான பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில், அந்த நிலத்தில் குடிகாணியாக இருப்பவர், வேறு எங்கேனும் தொழில் நிமித்தம் காரணமாகவோ அல்லது சொந்தமாக வேறு நிலம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு தனியாகச் செல்லும்போது, தாம் வாழ்ந்துவந்த கோயிலின் இடத்தைப் பிறருக்குக் குடிகாணியாக விற்பனை செய்துவிட்டுச் செல்லலாம். அதன்பிறகு, வரும்காலங்களில் புதிதாக வந்த நபர் தனது பெயரில், இடத்தை மாற்றம் செய்துகொண்டு கோயிலுக்கு குத்தகை கட்டவேண்டும்.

1999-ம் ஆண்டிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை குடிக்காணி முறையை ரத்துசெய்து அங்கு வசிக்கும் மக்களிடம் வாடகை முறையில் அதிக பணம் வசூலித்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல், அவர்கள் குடியிருந்த அந்த நிலங்களை அறநிலையத் துறை தனியார் நிறுவனத்துக்குப் பெரும்தொகைக்கு வாடகைக்குக் கொடுத்து, அவர்களைக் கோயில் நிலங்ககளைவிட்டு வெளியேற உத்தரவிட்டுக்கிறது. 1998-க்கு முன் கோயில் மனைகளில் ஒருவர் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தால், அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த இடத்தை பட்டா செய்துகொள்ள அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், அதன் பிறகு வந்த சில ஆண்டுகளில் இருந்து இந்து அறநிலையத் துறை, அங்கு தங்கி இருப்போர்களிடம் வாடகை முறையில் பணம் வசூல் செய்வதும், மேலும் கோயில் நிலங்களைத் தனியாருக்கு அதிக வாடகைக்கு விடுவதும் நடந்துவருகிறது. இதனால் கோயில் நிலங்ககளை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டிருந்த மக்கள், தற்போது வேறு இடங்களுக்குச் செல்ல முடியாமலும், மேலும் இந்து அறநிலையத் துறையினரால் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரோடும் வாழ்ந்து வருகின்றனர்.

‘‘அரசு உத்தரவிட வேண்டும்!’’

இதுகுறித்து கூட்டத்தில் தா.பாண்டியன் பேசியதாவது, ‘‘கோயில் நிலங்களில் வாழ்பவர்கள் ஏழைக் குடியானவர்கள். அவர்கள் பல ஆண்டு காலங்களாக இந்த நிலத்திலேயே வாழ்ந்து வருகிறவர்கள். கோயிலில் நடைபெறும் விழா மற்றும் பண்டிகைக் காலங்களில் வியாபாரம் செய்து தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றனர். அவர்களிடம் இந்து அறநிலையத் துறை கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதுடன், அவர்களை வெளியேற்றவும் செய்கின்றனர். கந்து வட்டிக்காரர்களைவிட அதிகமாக வசூல் செய்து, அவர்களையே நல்லவர்களாக்கும் செயலைத்தான் தற்போது அறநிலையத் துறை செய்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் பரம்பரை பரம்பரையாகக் கோயில் மனைகளில் வாழ்ந்த மக்கள், ‘குடிகாணி’ முறையில் கோயில் நிர்ணயப் பகுதிப் பணத்தை முறையாகச் செலுத்தி வந்தனர். அதேபோல், குடிகாணி முறையைத் திரும்பக் கொண்டு வரவும், ஏழைக் குடியானவர்களை வெளியற்றாமலும் இருக்க வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு அரசு உத்தரவிட வேண்டும்’’ என்றார்

-ஜெ.அன்பரசன்

படங்கள்: பா.காளிமுத்து

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ