Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செப்-2 அகில இந்திய வேலை நிறுத்தம்: தமிழகத்தில் பேருந்துகள் ஓடுமா?

          

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக்  கண்டித்து, மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு நாளை (செப்.2) அகில இந்திய அளவிலான மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற் சங்கங்கள் கலந்து கொள்கின்றன.இதனால் நாளை தமிழகத்தில் பேருந்துகள் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சாலை போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தைக் கைவிடக்கோரி செப்.2-ஆம் தேதி கர்நாடகத்தில் பொதுவாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய சாலை போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய அளவில் உள்ள அரசு சார்ந்த மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் ஒப்பந்தக் கூலி முறை, குறைவான கூலியை உயர்த்த வேண்டியும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை மீட்டெடுப்பது, நிறுவனங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, பொதுத்துறைப் பங்குகளை விற்பதைத் தடுத்தல், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மய மாக்கக் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும்உ என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 2-9-2016 அன்று அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில், ஐ.என்.டி.யூ.சி.,  எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட, பல தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.

கர்நாடகத்தின், அகில இந்திய சாலை போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அங்கும் நாளை போக்குவரத்து முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் நாளை 24 மணி நேரத்திற்கு பேருந்து, லாரி, வாடகை கார், வாடகை வேன்கள் உள்ளிட்ட பொது வாகனங்கள் எதுவும் இயக்கப்படமாட்டாது. என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழிற் சங்கங்களில்,பிஎஸ்என்எல், அஞ்சல்துறை ஊழியர்களும் பங்கேற்கின்றனர். அதனால் அஞ்சல் பட்டுவாடா மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.  இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி கூறுகையில்,

" புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஊதிய மாற்றக் குழு அமைக்க வேண்டும்.அரசுப்பணிகளில்  காலியாக உள்ள 3  லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழகத்தில் போராடி வருகிறோம்.தமிழக அரசு அலட்சியமாக உள்ளதால் வேறு வழியின்றி 5 லட்சம் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கிறோம்.

மேலும், அரசுவருவாய் துறை அலுவலர் சங்கத்தினரும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள னர். இதனால் தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலங்களிலும், நாளை பணிகள் ஸ்தம்பிக்கும்" என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் பேருந்துகள் ஓடுமா?

பெரும்பாலான தொழிற் சங்கங்கள் இந்தப் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கும் நிலை ஏற்படும். இதில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான போக்குவரத்து  ஸ்தம்பிக்கும் சூழல் இருப்பதாகவே தெரிகிறது.ஆட்டோ, லாரி, வேன் போக்குவரத்தும்  பாதிக்கப்படும். மேலும், ஆளும் கட்சியின் தொழிற்சங்கம் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்ற கட்சிகளின்  அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் பங்கேற்பதால், அரசுப் பேருந்துகளின்  இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்தப் போராட்டம் குறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர், ஆறுமுக நயினார் தெரிவிக்கையில்," ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு நடத்துவதோடு, ஓய்வு பெற்றோருக்கான பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையையும் வலியுறுத்தி, போராட்டத்தில் பங்கேற்கிறோம். பேருந்துகளை இயக்க மாட்டோம்" என்றார்.

- சி.தேவராஜன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ