Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி செல்லும்! - உயர் நீதிமன்றம்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி, சேலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஆனால், என்னுடைய வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டார்.

எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலையும், இந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றதையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த தொகுதிக்கு புதிதாக தேர்தல் நடத்த, இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று வழங்கினார். அந்த தீர்ப்பில், ''மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. அதனால், இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும், ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லும்" என்று தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ