Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உள்ளாட்சி வெற்றிக்கு ஸ்டாலினின் 'ரகசியக் குழு'!  -மா.செக்களின் பரிந்துரைகள் புறக்கணிப்பு

ள்ளாட்சித் தேர்தலுக்கு அதிரடியாகத் தயாராகி வருகிறது தி.மு.க. ' மாவட்ட செயலாளர்களை நம்பி களத்தில் இறங்க வேண்டிய அவசியமில்லை. வெற்றிக்கான வழிமுறைகளைத் தீவிரமாக ஆராய்வோம்' என அறிவாலய நிர்வாகிகளை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள். கடந்த முறையைப் போல் அல்லாமல், ' கவுன்சிலர்களே மேயரைத் தேர்வு செய்யும்' மசோதாவைக் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதற்கு எதிராக தி.மு.க தரப்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் புதிய யுத்தியைக் கடைபிடித்து கூடுதல் வெற்றியைப் பெறுவதற்கான ஆலோசனைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். ' ஆளுங்கட்சியின் அசுர பலத்திற்கு எதிராக, அனைத்து உள்ளாட்சி இடங்களையும் கைப்பற்றினால் மட்டுமே, மக்கள் நம்பக்கம் இருக்கின்றனர் என்பதை நிலைநாட்ட முடியும்' என நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.

"சட்டமன்றத் தேர்தலில் பெறப்பட்ட ஓட்டு சதவீதத்தில் ஆளுங்கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதைவிட சில கூடுதல் வாக்குகளை உள்ளாட்சித் தேர்தலில் பெற வேண்டும் என்பதைக் காட்டும்விதமாக, சில முக்கியமான செயல்திட்டங்களை முன்வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்" என விவரித்த அறிவாலய நிர்வாகி ஒருவர், தொடர்ந்து, " ஒவ்வொரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போதும், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கே கவுன்சிலர் சீட் வழங்கப்பட்டு வந்தது. இந்தமுறையும், ' மாவட்ட செயலாளர் மனது வைத்தால் சீட் கிடைக்கும்' என சிபாரிசுக்காக கட்சிக்காரர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்தமுறை மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்கள் கொடுக்கும் பட்டியலுக்கு எந்த ரெஸ்பான்ஸும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடிய தகுதிவாய்ந்த வேட்பாளர்களை, அறிவாலயம் நியமிக்க இருக்கும் ரகசியக் குழுவே தேர்வு செய்யும். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெயர்களை, பொருளாளர் ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். ' பரிந்துரை என்ற பெயரில் தகுதியற்ற நபர்களை வேட்பாளராகப் போட்டு தோல்வி அடைவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம். ஒவ்வொரு சீட்டும் மிக முக்கியமானது. உள்ளாட்சித் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற தோற்றத்தை முறியடிக்க வேண்டும். எனவே, மாவட்டங்களில் இருந்து வரும் பரிந்துரைக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டாம்' என உறுதியாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். இதனால் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் சில அதிருப்திகளும் ஏற்பட்டுள்ளன. அதைப் பற்றியெல்லாம் தலைமை பொருட்படுத்தவில்லை.

சென்னையில் பத்து எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு உள்ளனர். சென்னை மாநகராட்சி தி.மு.க வசம் வருவதற்கே வாய்ப்பு அதிகம். திருநெல்வேலியில் இரண்டு எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதைப் போலவே, கழக உறுப்பினர்கள் அதிகம் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி இடங்களை தி.மு.க வசமாக்க வேண்டும் என்பதே தலைமையின் நோக்கம். இதற்காக, அறிவாலயத்தில் நியமிக்கப்பட இருக்கும் ரகசியக் குழு வேட்பாளர்கள் தேர்வில் அக்கறை செலுத்தும். இதன்பின்னர் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட இருக்கிறார். இதுவரையில் கடைபிடித்து வந்த நடைமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட யுத்தியாக இது இருக்கப் போகிறது. ஆளுங்கட்சியைவிட கூடுதல் எண்ணிக்கையில் இடங்களைக் கைப்பற்றும்போது, அடுத்து வரக் கூடிய தேர்தல்களில் தி.மு.க.வின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என தலைமை கணக்குப் போட்டு வருகிறது" என்றார் விரிவாக. 

ரகசியக் குழு, சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் என உள்ளாட்சியை குறிவைத்து, ஸ்டாலின் வகுத்துள்ள திட்டம் என்ன பலனைத் தரப் போகிறது என்ற விவாதமும் அறிவாலய வட்டாரத்தில் எழுந்துள்ளது. 

-ஆ.விஜயானந்த் 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ