Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலை ஆயுதமாகிறதா காதல்? அதிரவைக்கும் அறிக்கை

நாம் தினமும் சாதாரணமாக கடந்து செல்லும் செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள். காதல் விவகாரங்களால் நாளுக்கு நாள் பெண்கள் கொலை செய்வது ஒரு டிரண்டாக மாறிவிட்டது. சுவாதி கொலைக்கு அதிர்ச்சியாகி, அந்தக் கொலை பற்றி அதிகம் விவாதித்த நாம்.. நவீனா, சோனாலி, ஃபேஷினா, மோனிகா, ரோஸ்லின் விவகாரங்களை எளிமையாக கடந்துசெல்கிறோம். இதில் மோனிகா, ரோஸ்லின் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

கொலையின் கொடூரத்தைப் பொறுத்துதான் நமது கருணை, இரக்கம், கோபம், பரிதாபம் போன்றவை ஏற்படுமா? நமது மனிதாபிமானம் கொடூர கொலைகளுக்கும், பெரு நகரங்களில் நடக்கும் கொலைகளுக்குமே முக்கியத்துவம் கொடுக்கிறதா... என சுயபரிசோதனைச் செய்யவேண்டிருக்கிறது.

சமீபத்தில் நடந்த கொலைகளில்  பல ஒரு தலைக் காதல் விவகாரத்தை முன் நிறுத்துகின்றன . 2012-ல் வெளிவந்த ஒரு சினிமாவில் ஒருதலை காதலால் பெண்ணைப் பழிவாங்க.. ஆசிட்டை ஒரு ஆயுதமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும். அந்த வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஒரு தலைக்காதல் காரணமாக ஆசிட் வீச்சு நடந்தது. சமூக சீரழிவுக்களுக்கு சினிமாவே ஒரு முழு காரணம் இல்லையென்றாலும், சினிமாவும் ஒரு காரணம் என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஒரு சினிமாவின் தாக்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் செல்கிறது என்பதை, திரைப்பட இயக்குநர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். 

 

ஆகஸ்ட் 30,: கரூரில் கல்லூரி மாணவி சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலைசெய்தார். கைது செய்யப்பட்ட உதயகுமார், 'தன் காதலை ஏற்கொள்ளாததால் கொலை செய்ததாக' கூறியுள்ளார்.

நேற்று ஆகஸ்ட் 31: தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினாவை, சீகன் கோமஸ் என்பவர் பள்ளி வளாகத்தில் வெட்டிக் கொலைச் செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக்கொண்டார். 

அதேநாளில் திருச்சியில் காதலை ஏற்றுக் கொள்ளாததால் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை, பாலமுருகன் என்பவர் கத்தியால் குத்தியிருக்கிறார். உடனே சுற்றி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து பாலமுருகன் மீது வீசி தாக்கி, அவனைச் சுற்றி வளைத்து போலீஸில் ஒப்படைத்தனர். அப்போதுதான் பாலமுருகன் விஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இப்போது மோனிஷாவும், பாலமுருகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

மூன்றாவதாக பாதிப்புக்குள்ளானது புதுச்சேரியில் ரோஸ்லின் என்ற கல்லூரி மாணவி. எழிலரசன் என்பவரின் காதலை ஏற்றுக்கொள்ளாததால் ரோஸ்லினுக்கு கிடைத்த பரிசு அரிவாள் வெட்டு. இப்போது ரோஸ்லின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 

இப்படி இரண்டு நாட்களில் அடுத்தடுத்து 2 கொலைகள், 2 படுகாயங்கள் என்றால், எதிர்கால தலைமுறைகள் எதை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறார்கள்?  கல்வியும், சமூகமும் அவர்களுக்கு என்ன தான் கற்றுக்கொடுகிறது?

 

இது குறித்து ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, 

‘’இந்த ஆண்டில் நடந்த கொலைகளில் ஒருதலை காதல் கொலைகள் மட்டும் இல்லை. சாதிய கொலைகளும் உண்டு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பி படிக்க வைக்கும், முற்போக்கு சிந்தனையோடு இருக்கிறார்கள். ஆனால் சாதி என்ற பெயர் கேட்டவுடன், முற்போக்குச் சிந்தனை எல்லாம் மறைந்துவிடுகிறது. ஆக, பெற்றோர்கள் குறைந்த அளவிலான முற்போக்காகவே, சுயநலத்துடன் இருக்கிறார்கள். இதன் விளைவு பெற்றோர்களிடம் பெண் பிள்ளைகள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி பேசத் தயங்குகின்றனர். பெற்றோர்களிடம் சொன்னால் மேலும் பிரச்சனை பெருசாகும் எனவும், பின் வெளியில் எங்கும் அனுப்பமாட்டர்கள் எனப் பயந்தே பெண்கள் வீட்டில் பிரச்சனைகளைச் சொல்வதில்லை. இதுவே பிரச்னைக்கு முதல் காரணம். 

சோஷியலாக எல்லாரிடமும் சமமாக பழக வேண்டும் என நினைத்து பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உறவுகளைக் கையாளுவதில் சிரமங்கள் இருக்கிறது. இந்தக் கொலை சம்பவங்களில் ஏதோ ஓர் இடத்தில் கொலையாளிகளுக்கு நம்பிக்கை தரும் விதமாக, தெரியாமல் என்றோ அவர்கள் பேசிய வார்த்தைகளோ, செயலோகூட கொலையாளி தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிவிட்டார் எனக் கொலைச் செய்ய துணிகிறார்” என்றார்.

இதுமட்டும் அல்ல நேரடி தாக்குதலுக்கு அடுத்த படியாக, காதலை ஏற்றுக் கொள்ளாத பெண்கள் மீது நடத்தப்படும் மறைமுகத் தாக்குதல் நடத்த, இணையத்தை கையில் எடுக்கிறார்கள். மார்பிங் செய்யப்பட்ட தனது படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு பழிவாங்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் தற்கொலை இதற்கு சான்று. தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நான்கு ஆண்டுகளில் 66 வழக்குகள் சைபர் க்ரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை குறைவுதான். இன்னும் பல பெண்கள் புகார் அளிக்க முன்வருவதே இல்லை. 

காதல் விவகாரம் மட்டும் இல்லை, தமிழகத்தில் 2015-ம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 5847 வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக பதியப்பட்ட வழக்குகள் பற்றிய டேட்டாவை மத்திய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு தமிழகத்தில் எப்படி இருக்கிறது என்பதை ஆண்டு வாரியாக கீழே பார்க்கலாம். 

 • 2012
 • 2013
 • 2014
 • 2015
 • 2012: மற்ற குற்றங்களைவிட, வீட்டில் கணவனால் பெண்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்கள் தொடர்பான வழக்குகள் இந்த ஆண்டில் அதிகம்.

   
 • 2013: அட்டவணையில் இருக்கும் நான்கு ஆண்டுகளில் அதிகபடியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தது இந்த ஆண்டில்தான். மொத்தமாக பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களும் 2014-ல் உயர்வைச் சந்தித்தது.

   
 • 2014: இதற்கு முந்தைய ஆண்டை விட அனைத்து வகையிலும் குற்றங்கள் குறைந்துள்ளன. புகார் கொடுக்க பெண்கள் முன் வராததும் இதற்கு ஒரு காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

   
 • 2015: பாலியல் சீண்டல் தொடர்பாக 26 சைபர் க்ரைம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே தமிழகத்தில் அதிகம்.

   

- கே.அபிநயா, ரெ.சு.வெங்கடேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ