Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று டெங்கு... இன்று ஜிகா... நாளை ..? - என்னதான் தீர்வு ?!

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் திருத்தணியின் சுற்றுப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாகக் காய்ச்சலின் தாக்கம் அதிகம். “விஷவண்டு கடித்து உடனடி வைத்தியம் மேற்கொள்ளாததால், அது காய்ச்சலாக மாறி ஆளை காலி செய்துவிட்டது” என்று அந்த மரணங்களுக்கு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்த ஐந்து மரணங்களுக்கும், காய்ச்சலுக்குள் ஏதோ ஒரு காய்ச்சலைவைத்து காரணம் சொல்லப்பட்டது.

திருத்தணியில் பெரும் பாதிப்புக்குள்ளான காவேரிராஜபுரம் பகுதிக்கு வந்த தமிழக சுகாதாரத் துறை மந்திரி விஜயபாஸ்கர், “இங்கு சாதாரணக் காய்ச்சல்தான் காணப்படுகிறது. டெங்கு அறிகுறி இருந்த ஓரிருவர் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டது. டெங்கு பரவாத அளவுக்கு அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டன. டெங்குவால் யாரும் இறக்கவில்லை” என்றார்.



பொதுவாகவே காலநிலை மாற்றத்தின்போது பலவிதமான காய்ச்சல்கள், நோய்த்தொற்றுகள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நேற்று முன்தினம் (ஆகஸ்ட்-31) வந்த தகவலின்படி சிங்கப்பூரில் 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 115 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிப்ரவரி 2016-ல் உலக சுகாதார அமைப்பு, ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்பாக பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. அதன்பேரில், ஜிகா வைரஸ் குறித்த விழிப்பு உணர்வு பிரசாரங்கள், பரிசோதனைகள் அனைத்து நாட்டிலும் வேகமாக நடக்க ஆரம்பித்தன. இந்த நிலையில்தான் சிங்கப்பூரில் வசிக்கும் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், ‘‘சிங்கப்பூரில் வசித்துவரும் இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சிங்கப்பூரில் கட்டுமானப் பணிகள் நடந்துவரும் இடத்தில் இந்த நோய் தாக்கம் அதிகமாக இருக்கிறது” என்றார். சிங்கப்பூரில் வசிக்கும் பங்களாதேசத்தைச் சேர்ந்த 6 பேர், 21 சீனர்கள் உள்பட மொத்தம் 115 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல், சார்ஸ், ஆந்த்ராக்ஸ், பறவைக் காய்ச்சல், சிக்குன்குனியா, டெங்கு, ஜிகா என்று காலந்தோறும் கால மாற்றத்துக்கு ஏற்றவாறு நோய்த்தொற்று (பரவி) ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இன்னும் டெங்குவிற்கே தீர்வு காணப்படவில்லை. இப்போது போன வேகத்தில் திரும்பியிருக்கிறது, கொசுக்களால் பரவிடும் கொடிய நோயான ஜிகா.

உகாண்டா நாட்டுக் காடுகளில், 1947-ல் குரங்குகளிடம் இருந்து ‘ஜிகா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆப்பிரிக்கர்களிடம் இந்த ஜிகா தொற்று, 1952-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜிகா வைரஸானது, மெல்ல வளர்ச்சிபெற்று, உலகம் முழுவதும் ஆப்பிரிக்க வெரைட்டி, ஆசிய வெரைட்டி என இருவகை ஜிகா வைரஸ்களாக உருவெடுத்துள்ளன. இன்றைய தேதியில் அமெரிக்கர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ‘ஜிகா’தான், சிங்கப்பூர் மக்களையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. 


ஜிகா என்ற வைரஸைப் பரப்பும் கொசு, கர்ப்பிணிகளை (கரு உருவான மூன்றுமாத காலத்துக்குள்) தாக்கினால், அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசுவை அந்த வைரஸ் தாக்குமாம். இதனால் பிறக்கப்போகும் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நரம்பு மண்டலங்கள் முற்றிலும் சேதமாகும் என்கிறார்கள். அதன்பின்னர், அந்தக் குழந்தை பிறந்து வளர்ந்தாலும், அது முழுமையான குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்பதே மருத்துவ வல்லுநர்கள் சொல்லும் ஆய்வின் முடிவாக உள்ளது.


டெங்குவையே இன்னும் முற்றாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்கிற நிலையில் பின்னால் துரத்துகிறது, ஜிகா !


- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ