Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எய்ம்ஸ் தமிழக மாணவர் மர்மச் சாவில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடக்கோரி மாணவரின் தந்தை தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறை பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (26), எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.டி. (மருத்துவ மேல் படிப்பு) படிக்க கடந்த ஜூலை மாதம் சேர்ந்தார். தெற்கு டெல்லி கெளதம் நகரில் தங்கியிருந்த அவர், வலது கையில் ஊசி செலுத்தப்பட்டு மர்மமான முறையில் கடந்த ஜூலை 10ஆம் தேதி உயிரிழந்தார். இச்சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என்று முதலில் கருதிய ஹோஸ்காஸ் போலீஸார், பின்னர் "சந்தேக மரணம்' என்ற கோணத்தில் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். எனினும், போதுமான துப்பு இன்னும் துலங்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில், சரவணன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கணேசன் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், எனது மகன் சரவணன், டெல்லி கெளதம் நகரில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பே சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் உயிரிழந்தது தொடர்பாக இதுவரை எங்களிடம் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), பிரேதப் பரிசோதனை அறிக்கை போன்ற எதையும் போலீஸார் வழங்கவில்லை. அவற்றின் நகல்களை எங்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யும் வகையில், உரிய அதிகாரியை நியமிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணை உயர் நீதிமன்றம் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். விசாரணை தொடர்பான அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் டெல்லி காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை அவசரகால வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் சரவணனின் எப்ஐஆர் நகல், பிரேத பரிசோதனை அறிக்கையை 4 வாரத்தில் மனுதாரரிடம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ