Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சி கொட்டப்பட்டு ஏரியில் பணிகள் மேற்கொள்ள இடைக்காலத் தடை

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கொட்டப்பட்டு ஏரியில் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள கொட்டப்பட்டு ஏரியில் 2008-ம் ஆண்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் வீட்டுமனை போட்டு பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்தது. இந்த ஏரியானது அப்பகுதியின் முக்கிய வடிகாலாகவும், நிலத்தடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் நிலையில் இந்த ஏரியை ஆக்கிரமித்து திருச்சி மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமாக அண்ணா கோளரங்கம், ஆவின்பால் பண்ணை தொழிற்சாலையையும் அமைத்து அப்பகுதி மக்களுக்கு துரோகம் இழைத்தது. அதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களாக இந்த ஏரிக்குள் மண்னை கொட்டி சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை எதிர்த்து தண்ணீர் இயக்கம், நாணல் நண்பர்கள், சட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களும் கொட்டப்பட்டு பகுதி மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என தண்ணீர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வினோத் ராஜ் சேஷன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த ஏரியில் பணிகள் மேற்கொள்ள இடைக்காலத் தடையும் கோரியிருந்தார். இதனை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கொட்டப்பட்டு ஏரியில் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ