Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா உணவகம் : செலவு 100 கோடி; முறைகேடு 5.69 கோடி- சி.ஏ.ஜி. அறிக்கை

 

ரம், நோக்கம், வருவாய் என்று அனைத்திலும், ‘அம்மா’ உணவங்கள் தோல்வி அடைந்துள்ளன என்று மத்திய தணிக்கைத்துறை(சி.ஏ.ஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தின், 15-வது சட்டசபைக்கூட்டத் தொடர், ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடர், செப்டம்பர் 2-ம் தேதி நிறைவடைந்தது. சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளன்று, சி.ஏ.ஜி. தனது அறிக்கையை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அரசின் வருவாய், கல்வி, சுகாதரம், குழந்தை நலன், இலவச லேப்டாப் என்று அனைத்தையும் போட்டு வாங்கிய சி.ஏ.ஜி, அம்மா உணவகங்களையும் விட்டு வைக்கவில்லை. 

 

சி.ஏ.ஜி அறிக்கையின்படி, அம்மா உணவகங்களால், தமிழக அரசுக்கு 63 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், அம்மா உணவகங்களுக்காக நடைபெற்ற கொள்முதல்  நேர்மையாக நடக்கவில்லை. அதிலும் பல முறைகேடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சி.ஏ.ஜி.அறிக்கையில், “குறைந்த விலையில், ஏழை-எளிய மக்களுக்கு தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவங்கள், அந்த நோக்கத்தில் தோல்வியடைந்துள்ளது. 2013-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு ஒரு நாளைக்கு 4 லட்சம் சப்பாத்திகள் தயாரிக்கப்பட வேண்டும். அதற்காக, சாப்பாத்தி தயாரிக்கும் மெஷின் வாங்கப்பட்டது. ஆனால், அதன் உற்பத்தியை மாநகராட்சி கண்காணிக்கவில்லை. அதனால், அந்த வேலையை எடுத்துச் செய்த ஒப்பந்ததாரர், 4 லட்சம் சப்பாத்திகளை தயாரித்துக் கொடுக்கவில்லை. மேலும், சப்பாத்தி தயாரிக்கும் இந்திரத்தின் தரமும் சரியாக இல்லை. இதனால், அரசாங்கத்திற்கு, 1 கோடியே 33 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்தத் தவறுகளை, சென்னை மாநகராட்சியின் கண்காணிப்புக் குழு கண்டுபிடித்து, அறிவுறுத்திய பிறகும், தவறு சரி செய்யப்படவில்லை; ஒப்பந்ததாரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதுபோல, சரியாக இயங்காக சப்பாத்தி தயாரிக்கும் மெஷினை பழுதுபார்த்த வகையில், கூடுதலாக 22 லட்சம் ரூபாய் மாநகராட்சி செலவழித்துள்ளது.  அம்மா உணவகத்திற்கு, கோதுமை மாவு வாங்கியதிலும்  விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை. இதனால், சென்னை மாநகராட்சிக்கு கூடுதலாக 30 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  வெளி மார்க்கெட்டுகளில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில்,  2 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு முறையான கணக்குகள் இல்லை. மொத்தத்தில், 2014-15 நிதியாண்டில், அம்மா உணவகத்திற்காக செலவழிக்கப்பட்ட தொகை,100 கோடி. வருமானம் என்ற வகையில் அரசுக்கு திரும்பக் கிடைத்தது வெறும் 37 கோடியே 56 லட்சம் மட்டும்தான். இதனால், நஷ்டம் 63 கோடியே 4 லட்சம் ரூபாய். இந்த செலவுத் தொகையில் 5 கோடியே 69 லட்சத்துக்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லை. அவை முறைகேடு செய்யப்பட்ட தொகையாக கணக்கில் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- ஜோ.ஸ்டாலின்
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ