Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகளிரணி செயலாளரை பதற வைத்த முகநூல் முடக்கம்! காங்கிரஸ் கலகம்


 

 

தன்னுடைய முகநூலுக்கு இரட்டை அர்த்தம் கொண்ட பதிவுகள் வருவதாக அகில இந்திய காங்கிரஸ் மகளிரணி தேசிய செயலாளர் ஹசினா சையத் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில் ஹசினா சையத், மற்றும் காங்கிரஸ் நண்பர்கள் இணைந்து முகநூல் நண்பர்கள் என்ற குரூப் வைத்துள்ளனர். அந்த குரூபில் பதிவான புகைப்படங்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ண பட்டாபி என்பவர் ஹரிமணி என்ற போலி முகநூல் ஐ.டி மூலம் இரட்டை அர்த்த வார்த்தைகளும், ஆபாச குறியீடுகளையும் பதிவு செய்தது தெரியவந்தது. 'புகாரின் பேரில் ஹரிமணி என்ற முகநூல் பக்கத்தை முடக்கியுள்ளோம்.  மேலும், ஹரிமணி என்ற போலி முகநூலைப் போல இன்னும் சில முகநூல் ஐ.டியிலிருந்தும் தவறான கமெண்ட்ஸ் மற்றும் பதிவுகள் வந்துள்ளன. அவர்கள் யார்? என்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை லோக்கல் போலீசுக்கு மாற்றியுள்ளோம். போலி ஐ.டி மூலம் இரட்டை அர்த்த பதிவுகளை பதிந்தவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று பேர். அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.


 இதுகுறித்து ஹசினா சையத் கூறுகையில், "ஹரிமணி என்ற போலி முகநூல் முடக்கம் செய்யப்பட்டுள்ளது இரட்டை அர்த்த கமெண்ட்ஸ் பதிவோருக்கு நல்ல பாடமாக அமையும். அடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால் வருங்காலத்தில் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள். பொதுவாக முகநூலில் போலி ஐ.டி மூலம் பழிவாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்கள் மீது புகார் கொடுத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இது போலி முகநூல் ஐ.டி வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. நடவடிக்கை இல்லாததால் பெண்களை குறித்து தவறான கமெண்ட்ஸ்களை பதிவு செய்கிறார்கள்"என்றார்.


போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "சமூக வலைத்தள புகார்களுக்கு ஆதாரம் சேகரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டணை வாங்கி கொடுப்பது என்பது இமாலய சாதனையாக உள்ளது. ஆனால் பெரும்பாலானவர்கள் புகார் கொடுக்கும்போதே நடவடிக்கை வேண்டாம், எச்சரித்து அனுப்பினால் போதும் என்கிறார்கள். இதனால் சம்பந்தப்பட்டவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறோம். இன்னும் சிலர், தங்களுடைய பெயர், விவரம் வரக்கூடாது என்று சொல்கிறார்கள். அவர்களின் விவரங்கள் ரகசியம் காப்பதால் தண்டணையிலிருந்து தப்பிவிடுகிறார்கள். பெரும்பாலும் சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் புகார் கொடுக்க தயங்குவது குற்றவாளிகளுக்கு தைரியத்தையும், தொடர்ந்து தவறான பதிவுகளை பதிய தூண்டுவதாக அமைந்து விடுகிறது. எனவே பெண்கள் விழிப்பு உணர்வு அடைய வேண்டும்"என்றனர்.

எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ