Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மர்மக் காய்ச்சலும் அல்ல... டெங்குவும் அல்ல! அதிக அளவு உடல் உஷ்ணத்தால் உயிர்பலி?

திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிக்கு அருகில் உள்ள திருவாலங்காடு ஒன்றியத்தில் வருகிறது காவேரிராஜபுர கிராமம். அங்கு ஆரம்பித்த ஏதோ ஒரு வகையான உடல் உஷ்ணம் தான் (அது டெங்குவும் அல்ல... மர்மக் காய்ச்சலும் அல்ல... வெறும் வைரஸ் காய்ச்சல்தான் என்று மாநிலத்தின் சுகாதாரத் துறை மந்திரியே கூறியுள்ளதால், அதை ஒரு வகையான உடல் உஷ்ணம் என்றே இப்போதைக்கு அழைக்கலாம்.) இப்போது மிக வேகமாய்ப் பரவி வருகிறது.

ஜூன், 2016 முதல் வாரத்தில் மோசஸ் என்ற ஆறுமாத குழந்தை இப்படியான உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டு, திருவள்ளூரின், திருவாலங்காடு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டான். பின்னர் உடல் உஷ்ணம் அதிகமாகிவிடவே, சென்னை அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை சேர்க்கப்பட்டு, அங்கிருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை என்று அடுத்தடுத்து சிகிச்சைக்காகச் சென்றபோதும் பயனில்லை. அங்கே, குழந்தை மோசஸின் உடல் உஷ்ணம் அதிகமாகிக்கொண்டே போனதைக் கட்டுப்படுத்த முடியாததால் இறந்திருக்கிறான். மாவட்ட நிர்வாகம் பணியாளைக்கொண்டு தண்டோரா போடவைத்தது. “மர்மக் காய்ச்சலாலோ, டெங்குக் காய்ச்சலாலோ யாரும் சாகவில்லை. அங்கீகாரம் இல்லாத மருத்துவர்களிடம் முதலில் சிகிச்சை பெற்று காய்ச்சல் முற்றிய நிலையில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டதால்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது” என்று அந்தப் பணியாளும் அறிவித்தார்.

10.8.2016 முதல் அடுத்தடுத்து யுவராஜ், மோகன், மோகனகுமார், சந்தோஷ் என்று குழந்தைகள் அதே மாதிரியான அதிகபட்ச உடல் உஷ்ணத்தால் உயிரிழந்தனர். காவேரிராஜபுரத்தைச் சேர்ந்த தனஞ்செயன், அவரது மகன் சக்திவேல், மகள் மகிழினிக்கு ஏற்பட்ட இப்படியான அதிக உடல் உஷ்ணம் குறித்து ரத்த ஆய்வு மேற்கொண்டபோது... தனஞ்செயன், சக்திவேல் ஆகியோருக்கு டெங்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சென்னை அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை கண்டுபிடித்தது. காவேரிராஜபுரத்துக்கு அருகில் உள்ள அருங்குளம் கிராமத்திலும் இப்படியான உடல்உஷ்ணம் அதிக அளவில் மக்களிடம் காணப்படுகிறது. பெரியகுப்பம் பகுதி பட்டம்மாள், விஜயராணி, கனகம்மாசத்திரம் சிறுமி யுவசக்தி, சிறுவன் சினேகா உள்ளிட்ட 60 குழந்தைகள், இதே உடல் உஷ்ணத்தால், திருத்தணி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

 

 

காவேரிராஜபுரத்தைச் சேர்ந்த திலிப்குமார், பிரியதர்ஷனி ஆகிய குழந்தைகள், அதிக உடல் சூடு காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வயிறு வீக்கத்துடன் அனுமதிக்கப்பட்டனர். திருத்தணி அருகேயுள்ள மங்காபுரம் காலனி, என்.என்.கண்டிகை, சத்திரம், ஜெயபுரம், அத்திப்பட்டு, சீதாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுக்கும் தீவிரமான நிலையில் உடல்சூடு இருப்பது தெரிந்ததால் மாவட்ட திட்ட இயக்குநர் மகேந்திரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் துணை இயக்குநர் கிருஷ்ணமராஜ் குழுவினரோடு அங்கே சென்று ஆய்வு செய்தனர்.

காவேரிராஜபுரம், சுற்றுப்புற கிராமவாசிகள் இப்படியான அதிக உடல்சூட்டைத் தாங்க முடியாமல் தங்களின் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இதனால் விவரிக்க முடியாத அமைதி காணப்படுகிறது. மக்களின் நடமாட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது. திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “சேட்டு என்பவரின் குழந்தை குபேரனுக்கு மட்டுமே இங்கு டெங்குக் காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. மற்றவர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்மக்காய்ச்சல் என்றெல்லாம் ஒன்றுமில்லை. காவேரிராஜபுரத்தில் ஏற்கெனவே இறந்த 4 பேரும் வைரஸ் காய்ச்சலால்தான் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் டெங்குவால் இறக்கவில்லை” என்றார்.

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close