Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை யார்தான் பராமரிப்பது?' - தத்தளிக்கும் காங்கிரஸ்

மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்து அறுபது நாட்கள் கடந்துவிட்டன. ' தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நீடிக்கின்றன' என்கின்றனர் சத்யமூர்த்தி பவன் ஊழியர்கள். 

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு எட்டு எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். ' சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறோம்' என மகிழ்ச்சியோடு டெல்லிக்கு ஃபிளைட் ஏறினார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனால், டெல்லியில் ராகுல்காந்தி கொடுத்த மரியாதையால் நொந்து போனவர், கடந்த ஜூன் 26-ம் தேதி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். ' அ.தி.மு.க மற்றும் தி.மு.கவை ஒரே தட்டில் வைத்துப் பார்க்கத் தவறியது; தி.மு.கவுடன் நெருக்கமாக இருந்தது; தகுதியற்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்தது' என்பதுதான் இளங்கோவன் மீது ராகுல்காந்தி சுமத்திய குற்றச்சாட்டுக்கள். இதையடுத்து, புதிய தலைவராக திருநாவுக்கரசரோ, ப.சிதம்பரமோ நியமிக்கப்படலாம்' என்ற தகவலால் கொந்தளித்த இளங்கோவன், மேலிடத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பினார். 

அந்தக் கடிதத்தில், ' திருநாவுக்கரசர் பல கட்சிகளில் இருந்து வந்தவர். பா.ஜ.கவில் பல பதவிகளை அனுபவித்தவர். காங்கிரஸ் தொண்டர்களின் சூழலுக்கு அவர் பொருந்த மாட்டார். உண்மையான காங்கிரஸ் கட்சியினர் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்' என விவரித்தவர், ' அகில இந்தியப் பதவிக்கு சிதம்பரம் பொருத்தமானவர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கீழ்நிலையில் இறங்கி வேலை செய்ய மாட்டார். அதற்குப் பதிலாக கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதுவரையில் நாம் பதவி கொடுத்ததில்லை. தொண்டர்களோடும் மீடியாக்களோடும் நெருக்கமாக இருக்கும் பீட்டர் அல்போன்ஸ்க்கு பதவி கொடுக்கலாம்' எனக் கொளுத்திப் போட்டிருந்தார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்யமூர்த்தி பவன் நிர்வாகி ஒருவர், " அறுபது நாட்களைக் கடந்தும் தலைவர் பதவியில்லாமல் தத்தளிக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. யாரை நியமிப்பது என்பதிலேயே சோனியாவுக்கும் ராகுல் காந்திக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர். ஐம்பது வருட காங்கிரஸ் கட்சி காலத்திலேயே இவ்வளவு நாட்கள், தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்ததில்லை. அகில இந்தியத் தலைமை நியமிக்கும் மேலிட பார்வையாளர்களால்தான் இவ்வளவு குழப்பமும் உருவாகின்றன. அவர்கள்தான் தலைமையின் கவனத்திற்குத் தவறான தகவல்களைக் கொண்டு செல்கின்றனர்" என வேதனைப்பட்டவர், 

" தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன. தலைவர் பதவியில் இருப்பவர்தான், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளைக்கும் தலைவராக இருப்பார். ஈ.வி.கே.எஸ் ராஜினாமா செய்த நாளில் இருந்து, காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தில் யாரும் இல்லை. இதனால் சத்யமூர்த்தி பவன் ஊழியர்களுக்கும் காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சிக்கு முன்வைப்புத் தொகை செலுத்தியவர்களுக்கும் பணத்தை திருப்பித் தர முடியவில்லை. சம்பளம் இல்லாமல் ஊழியர்கள் வேதனைப்படுவதை அறிந்து, தனது சொந்தப் பணத்தில் இருந்து மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கி வருகிறார் ஈ.வி.கே.எஸ். இந்த வகையில் மட்டும் 5 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்துவிட்டார். நிகழ்ச்சிகளுக்கு அட்வான்ஸ் பணம் கொடுத்தவர்கள், தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதை உணர்ந்தாவது புதிய தலைவரை, மேலிடத் தலைமை விரைவில் நியமிக்க வேண்டும்" என்றார் ஆதங்கத்தோடு. 

-ஆ.விஜயானந்த் 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ