Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் மன்னா!' -முதல்வரை சீண்டிய மார்க்சிஸ்ட் தலைவர்

மிழக சட்டமன்றத்தில் 28 நாட்களாக நடந்து வந்த மானியக் கோரிக்கைக்கான கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்டது. 'மக்களும் அரசும் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்காமல், அம்மாவைப் பற்றிய துதிபாடல்களோடு பேரவைக் கூட்டம் நடந்து முடிந்தது' என்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். 

சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 2-ம் தேதி நிறைவு பெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது; எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்குப் பதிந்தது; காங்கிரஸ் உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது; மசோதாவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிழித்து எறிந்தது என பேரவைக் கூட்டம் முழுக்கவே சர்ச்சையோடு நடந்து முடிந்தது. இதுகுறித்து ஃபேஸ்புக்கில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். அவருடைய பதிவில், 

' சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள், விவாதங்கள், பதிலுரைகள் என்பதைவிட சட்டமன்றம் ஜனநாயகப்பூர்வமாக நடத்தப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விவாதத்தில் இடம் பெறவில்லை என்பதும் கூட்டத் தொடரின் வெளிப்பாடாக இருந்தது. 2011-16 சட்டமன்றத்தைவிட வலுவான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடம்பெறுகிற சட்டமன்றம் இது. நடந்து முடிந்த கூட்டத்தில் தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 79 பேர் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடைநீக்க காலம் முடிந்து, அவர்கள் மீண்டும் சட்டமன்றத்திற்கு செல்வதற்கு முதல்நாள் காவல்துறை மானியக் கோரிக்கையை முதலமைச்சர் முன்வைத்து, நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் நிறைவு நாளன்று மன்றத்தில்வைக்கப்பட்ட பல துறைகள் பற்றிய தணிக்கைக் குழு அறிக்கைகள், அரசு நிர்வாகத்தினுடைய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதைப் பற்றியெல்லாம் விவாதிக்காமல், அம்மாவைப் பற்றி துதிபாடுதலோடு கூட்டம் முடிந்துவிட்டது. 

காவல்துறை மானியக் கோரிக்கையை முன்வைத்து பேசிய முதல்வர், 'தன் தலைமையிலான ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்தநிலையில் இருக்கிறது; சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி' என்பது பற்றியெல்லாம் விளக்காமல், தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்பது பற்றித்தான் கூடுதலாக பேசியிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டு காலத்திலும் நடப்பாண்டிலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, தலித்துகள் மீதான வன்முறை, பெண்கள் மீதான வன்முறை, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றியோ, இதைத் தடுப்பது பற்றியோ சரியான விளக்கத்தை முதல்வரும் கொடுக்கவில்லை. மானியக் கோரிக்கையிலும் இடம்பெறவில்லை. மாநில வேளாண் துறை 2012-17, 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படையில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கான செயல்பாட்டு முறைகளை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், மாநில அரசாங்கம் இதுகுறித்து எந்தத் திட்டத்தையும் உருவாக்கவில்லை. 2010-15-ம் ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்த ரூ. 36.62 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. 

இதேபோன்று ஒவ்வொரு துறையிலும் நிதி இழப்புகள், தவறான கணக்கீடுகள், உரியதலையீடுகள் இன்மை, கால தாமதம், தகுதியற்ற பொருளாதாரச் சலுகைகள், முறையானவழிமுறைகள் பின்பற்றாமை, தேவையான கவனம் செலுத்தாதது என்று பல்வேறு குறைபாடுகளை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து தணிக்கை அறிக்கைகளையும் படிக்கின்ற போது, தமிழகத்தில் முறையான அரசு நிர்வாகமும் அரசு அதிகாரிகளைக் கண்காணிப்பதற்கு உரிய அமைப்புகளும் இருக்கிறதா என்ற கேள்வியே எழுகிறது. அம்மா ஒருவரே எல்லாம்; அதன் மூலமே சிறப்பான நிர்வாகம் அமைந்து விடும் என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பேசிக்கொண்டிருப்பதற்கு மாறாக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிர்வாகச் சீர்கேடுகளையும் குளறுபடிகளையும் சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அரசவைக்கு வரும் மன்னன் ‘மந்திரி... மாதம் மும்மாரி பொழிந்ததா’ என்று கேட்க, ‘ ஆம் மன்னா, மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள்’ என்று சொல்வதைப் போலத்தான் அரசு நிர்வாகமும் உள்ளது' எனக் கொந்தளித்திருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன். 

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ