Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ராணுவத்தை அனுப்பி அணையை திறக்கவேண்டும்"-பி.ஆர்.பாண்டியன்

இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களுக்கு 50 டி.எம்.சி. தண்ணீரைக் காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டியது கர்நாடகத்தின் கடமை. இதை அந்த மாநில அரசு வழங்காத காரணத்தால் அதனை உடனடியாக வழங்கிட, கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் உடனடியாக தமிழகத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டது.

இதனை இப்போது வரை கர்நாடக அரசு அமுல்படுத்தவில்லை. தீர்ப்புக்கு எதிராகக் கர்நாடக காவிரி விவசாயிகள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாண்டியா மாவட்டம் முழுவதும் கடும் பதட்டம் நிலவுகிறது. வரும் 9-ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அவர்களிடம் இந்த நிலவரம் குறித்து தொடர்பு கொண்டு கேட்ட போது,

"கர்நாடக அரசு திட்டமிட்டு கலவரங்களைத் தூண்டுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அதை அமுல் படுத்தாமல் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அந்த மாநில முதலமைச்சர் தலைமையில் அம்மாநில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவிப்பது இந்திய நீதித்துறையைக் கேலி செய்வது போன்றதாகும். இதே நிலை தொடர்ந்தால் அழிவின் பிடியிலிருந்து தமிழகத்தை காப்பாற்றமுடியாது. இந்தியாவின் ஒற்றுமையும் கேள்விக்குள்ளாகும்.

 

இதே போல மற்ற மாநிலங்களும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அதிகாரத்தைக் கையிலெடுத்து செயல்படுவார்களே ஆனால் இந்தியா பல கூறுகளாக சிதறுண்டு போக வழிவகை செய்யும். ஒற்றுமையை வழியுறுத்தும் அனைத்துக் கட்சிகளும் கர்நாடகத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து அதற்கு அழுத்தம் தரவேண்டும்.  தேசிய கட்சிகள்  அங்குக் கிடைக்கும் அரசியல் லாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு கர்நாடகத்துக்கு மட்டுமே ஆதரவாக செயல்படாமல் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு துணை நிற்கவேண்டும். இந்தியப்பிரதமர் உடனடியாக தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட அம்மாநில அரசுக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். தேவையானால் ராணுவத்தை அனுப்பி அணைகளில் உள்ள தண்ணீரை திறந்துவிட வேண்டும். தீர்ப்பை மீறியுள்ளதால் கர்நாடக அரசு மீது உச்சநீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் துவங்க வேண்டும். 2001-ல் எஸ்.எம்.கிருஷ்ணா இதே போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறியதற்காக மன்னிப்பு கேட்கும் நிலை ஏற்பட்டது.

கர்நாடக அரசு தொடர்ந்து இதே போல நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு மாநிலத்தை பதட்டநிலைக்கு உள்ளாக்கி அதன் மூலம் தீர்ப்புகளை அமுலாக்காமல் தள்ளிப்போடும் தந்திரத்தைக் கையாளுகின்றது தேவைப்படுமானால் உடனடியாக அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமைதியை உருவாக்க அமுல் படுத்தவேண்டும். கர்நாடக தமிழர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உச்சநீதிமன்றமும் பாரத பிரதமருமே பொறுப்பு. அவர்களின் பாதுகாப்புக்கு உடனடியாக ராணுவத்தை அனுப்பவேண்டும் தமிழக அரசும் வாயைத் திறக்காமல் உள்ளது. அதன் நடவடிக்கையும் மூடுமந்திரமாக உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி வழக்கிற்காக வழக்கறிஞர் பாலி நார்மன் வீட்டிற்கே செல்கிறார், ஆனால் தமிழக அரசின் வழக்கறிஞர் யார் என்றே தெரியவில்லை. யார் வாதாடியது, யார் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என எதுவுமே தெரியவில்லை. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் என்ன செய்கிறார், நிலைமை சிக்கலாகி இருக்கும் போது நீர் பாசாணத்துறை கூட்டம் நடைபெறவில்லை. காவிரி தொழில்நுட்பக்குழு என ஒன்று உள்ளது அந்தக் குழு செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் கூட இது தொடர்பாக அமைச்சரவையைக்கூட கூட்டவில்லை. விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் இந்த நிலையில் கூட தமிழக அரசின் செயல்படாத நிலை வேதனையளிக்கிறது" என்றார்.

- வரவனை செந்தில்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ