Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தடையை மீறி திறக்கப்படும் வள்ளுவர் சிலை!  -களமிறங்கும் தமிழ் உணர்வாளர்கள்

காஞ்சிபுரத்தில் அகற்றப்பட்ட திருவள்ளுவர் சிலையை, அதே இடத்தில் வைப்பதற்கான எந்த வேலைகளிலும் அரசு ஈடுபடவில்லை. ' அனுமதியை மீறி வள்ளுவர் சிலை அமைக்கும் வேலைகளில் இறங்க இருக்கிறோம்' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில், திருவள்ளுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த இந்தப் பூங்காவில், திருவள்ளுவர் சிலை அமைக்கும் வேலையில் இறங்கினர் தமிழ் முற்றம் அமைப்பினர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தனர். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, பூங்காவுக்கு சிலையும் வந்துவிட்டது. 'அனுமதி கிடைத்ததும் திறப்போம்' என முடிவு செய்துவிட்டு, சிலையைத் துணியால் மூடி வைத்தனர் சிலை ஏற்பாட்டாளர்கள். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவோடு இரவாக சிலையை அப்புறப்படுத்திவிட்டனர் வருவாய்த்துறை அதிகாரிகள்

வள்ளுவர் சிலை அமைக்கப்பட இருந்த பீடமும் உடைக்கப்பட்டு, சிலையும் காணாமல் போனதால் கொந்தளித்துப் போன தமிழ் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகளிடம் விசாரித்தனர். ' சமுதாய நலக் கூடத்தில் சிலை வைப்பதற்கு எந்த அனுமதியும் வாங்கவில்லை. இப்படியே போனால், தலைவர்களுக்கு சிலை வைக்கிறோம் என கிளம்பிவிடுவார்கள். இதைக் கருத்தில் கொண்டுதான், ஆர்.டி.ஓ பன்னீர்செல்வம் சிலையை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்தார். முறையான அனுமதி பெறும்வரையில், தாசில்தார் அலுவலகத்திலேயே வள்ளுவர் சிலை இருக்கும்' என உறுதியாகத் தெரிவித்துவிட்டனர். 

இதையடுத்து, நேற்று தமிழ் முற்றம் அமைப்பின் தலைவர் வீரபத்திரன் தலைமையில் ஒன்று திரண்டனர். கூட்டத்தில், வள்ளுவர் சிலை விவகாரம் தொடர்பாக, ' அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவது' என முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் முற்றம் அமைப்பின் நிர்வாகி ஒருவர், " பேரூராட்சி மன்றத்தின் முறையான அனுமதியோடுதான் சிலை திறக்கும் வேலைகளில் இறங்கினோம். இதற்கு முன்னால் பேரூராட்சி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள காந்தி, பெரியார் சிலைகளுக்கு, அப்படி எந்த அனுமதியும் வாங்கவில்லை. ' வள்ளுவர் சிலை திறக்கக் கூடாது' என்பதில் உள்நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் சிலையை அகற்ற வேண்டிய அவசியம் ஏன் வந்தது? சிலை திறப்பு குறித்து அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். எந்த அனுமதியும் கிடைக்காவிட்டால், வருகிற 14-ம் தேதி தடையை மீறி  வள்ளுவர் சிலையை நிறுவுவோம்" என்றார் கொதிப்போடு. 

-ஆ.விஜயானந்த் 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ