Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புயல் கிளப்பிய ஜு.வி. ஸ்டோரி... தலைமைச் செயலக களேபரங்கள்! #FollowUp

தமிழக அரசின் அன்றாட நிர்வாகத்தை கவனிக்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான துறைகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கடந்த சில மாதங்களாக நியமிக்காமல் விட்டிருந்தனர். மத்திய அரசு பணியில் இருந்து தமிழக அரசு பணிக்கு திரும்பியவர்களுக்கும் புதிய பணி ஏதும் வழங்கப்படாமல் இருந்தது. ஒரு சில அதிகாரிகளிடம் பல துறைகளை கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி விட்டிருந்தனர். காரணம், அரசு மேலிடத்தில் செல்வாக்கு மிக்க  முன்னாள் அதிகாரி ஒருவரின் ஆசி பெற்ற சில அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த வகையில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இதற்கிடையில், டிட்கோ சேர்மன் ஞானதேசிகன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் பதவியில் இருந்த அதுல் ஆனந்த்...இருவரும் திடீரென காரணம் ஏதும் சொல்லாமல் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து, பொங்கி எழுந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்.

இதுமாதிரி வேறு சில பிரச்னைகள் குறித்தும் விரிவாக முதல்வரிடம் பேச நேரம் கேட்டனர். தலைமை செயலாளர் ராம் மோகன ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் குமுறல்களை மீடியாக்கள் அடிக்கடி வெளியிட்டு வந்தன. எதிர்கட்சியினர் மேடைக்கு மேடை இதே சப்ஜெக்ட் பற்றி பேசிவந்தனர். இந்த பிரச்னைகளைப் பற்றி ஆகஸ்டு 14-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் கோட்டையில் இல்லாத முக்கிய அதிகாரிகள் என்கிற தலைப்பில் கழுகார் விரிவாக சொல்லியிருந்தார். அதைதொடர்ந்து, கடந்த செவ்வாய் அன்று ஜூ.வி-யிலும் தலை இல்லாத செயலகம் என்கிற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியிருந்தது. அன்று மாலை... தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் அவசரஅவசரமாக 29 அதிகாரிகள் மாறுதல் லிஸ்டை வெளியிட்டார். இதைப் பார்த்த தலைமைச் செயலக அதிகாரிகள் பலரும், ''காலையில் ஜூ.வி-யில் செய்தி வெளியாகிறது. மாலையே மாறுதல் லிஸ்ட் வெளியாகிறது. பல மாதங்களாக நிலவி வந்த நிர்வாக குளறுபடிகளுக்கு ஜூ.வி-யில் செய்தி வந்ததும் விடிவுகாலம் பிறந்துவிட்டது'' என்று போன் மூலம் சொன்னார்கள்.

இதுபற்றி தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''அரசின் முக்கிய துறைகளான பொதுத்துறை. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தப் பயிற்சித்துறை, உயர்கல்வித்துறை, கால்நடைத்துறை, எரிசக்தித்துறை... ஆகியவற்றின் செயலாளர் பதவிகள் இன்னும்கூட காலியாகத்தான் இருக்கின்றன. அந்த பதவிகளை வேறு சிலர் கூடுதலாக கவனித்து வருகின்றனர். இதன் பின்னணி மர்மம் என்னவென்று புரியவில்லை. முதலமைச்சரின் சிறப்பு திட்ட செயலாக்க செயலாளர் பதவியில் இருந்த சத்யகோபாலை வேறு பதவிக்கு மாற்றி உள்ளனர்.

ஆனால், அவர் வகித்த பதவியில் இன்னும் யாரையும் நியமிக்கவில்லை. அதுல் ஆனந்த், எல்காட் நிறுவன சேர்மன் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் பதவியையும் கூடுதலாக கவனித்து வந்தார். கடந்த வாரம் திடீரென அதுல் மிஸ்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அல்லவா..? அவர் பதவிக்கு தற்போது ராஜேந்திரகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். காலியான புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் பதவியில் ஆர்.பழனிச்சாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரச்னையான இந்த தருணத்தில், இவர்கள் இருவரும் சர்ச்சைக்குரிய பதவியில் எப்படி அமரவைக்கப்பட்டார்கள் என்பது எங்களுக்கே புரியவில்லை. டிட்கோ சேர்மனாக இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஞானதேசிகன் இடத்தில் யாரும் நியமிக்கப்படவில்லை'' என்றார் அவர்.

கூடுதல் பொறுப்புகளில் இதுவரை செயல்பட்டு வந்த சில பதவிகளுக்கு தற்போது ரெகுலர் அதிகாரிகளை நியமித்துள்ளனர். காலியாக இருந்த வருவாய் நிர்வாக பதவியில் சத்தியகோபால் மற்றும் நிதித்துறை (செலவினம்) செயலாளர் பதவியில் செந்தில் குமார் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடுதல் பொறுப்பு என்கிற பேனரில் இருந்த போக்குவரத்துறை கமிஷனர் பதவியில் சந்திரகாந்த் காம்ளே, தொழிற்துறை செயலாளர் பதவியில் விக்ரம் கபூர், சமூகநலத்துறை இயக்குனர் பதவியில் அமுதவள்ளி, விவசாய மார்க்கெட்டிங் மற்றும் விவசாய பிஸினஸ் கமிஷனராக சன்சோன்கம் ஜடக் சிர்ரு, சி.எம்.டி.ஏ. மெம்பர் செகரட்டரி பதவியில் விஜயராஜ் குமார், இயக்குனர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம் பதவியில் ஸ்கந்தன் மற்றும் தாட்கோ நிர்வாக இயக்குனர் பதவியில் குமார் ஜெயந்த் ஆகியோர் புதியதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கூடுதல் பொறுப்பு யார் யாருக்கு?

சற்று சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் பதவியில் இருந்த அதுல்யமிஸ்ராவிற்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய சேர்மன் பதவி கூடுதலாக கவனிக்கும்படி தற்போது சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், எல்காட் சேர்மன் பதவியை கூடுதலாக கவனிக்கும்படி பணிக்கப்பட்டிருக்கும் ராஜேந்திரகுமார் ஏற்கனவே இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளராகவும் இருக்கிறார். இன்னும் என்னென்ன கூத்துக்கள் தலைமை செயலகத்தில் அரங்கேறப்போகிறதோ என்று ஐ.ஏ.எஸ். வட்டாரம் அதிர்ந்து கிடக்கிறது.

- ஆர்.பி.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ