Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புறம்போக்கும், சென்னை வெள்ளமும்...! #ChennaiFloods

"புறம்போக்கு. இது தூய தமிழ்ச்சொல்தான். ஆனால், சங்க இலக்கியத்தில் இந்த வார்த்தை எங்குமே தென்படவில்லை. இது, இடைக்காலத்தில் வந்த சொல் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள். இதன் பொருள் ஊருக்குப் புறத்தே அமைந்திருக்கும் அனைவருக்கும் பொதுவான இடம். அதாவது, நம் அனைவருக்கும் பொதுவான சொத்து. ஆனால், நாம் என்றுமே இந்தப் புரிதலில் இந்த வார்த்தையை அணுகி இருக்க மட்டோம். நாம் பிறரை திட்ட, கொச்சப்படுத்த மட்டும்தான் பெரும்பாலும் ‘புறம்போக்கு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறோம். புறம்போக்கு என்ற சொல் குறித்த நமது இத்தகைய புரிதல்தான் சென்னை வெள்ளத்துக்குக் காரணம்’’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

யார் புறம்போக்கு... எது புறம்போக்கு?:

சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமன், ‘புறம்போக்கு’ என்ற பதம் குறித்து ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர், ‘‘ஒரு நல்ல விஷயத்தைச் சிதைக்க வேண்டுமென்றால், முதலில் அதுகுறித்த ஒரு தவறான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மக்கள் அதைத் தவறாகப் பார்க்க தொடங்கிய பிறகுதான், நாம் எந்த எதிர்ப்பும் இல்லாமல், அந்த விஷயத்தைச் சிதைக்க முடியும். அப்படியாக முதலில் தவறான பொருள் உருவாக்கப்பட்டு, பின் சிதைக்கப்பட்டவைதான் புறம்போக்கு இடங்கள். புறம்போக்கு என்பது யாருக்கும் பயன்படாத இடம் என்ற கருத்துருவாக்கத்தை அரசுகள் வெற்றிகரமாக உருவாக்கி இருக்கின்றன. புறம்போக்கு என்பதற்கு உண்மையான பொருள் அதுவல்ல... புறம்போக்கு அனைவருக்குமான இடம். ஆனால், நாம் இதைப் புரிந்துகொள்ளாததால்தான், புறம்போக்கு நிலங்களை நீடித்த வளர்ச்சிக்காகப் பயன்படுத்தும் எளிய மக்களைத் தவறாகப் பார்க்கிறோம். அதே நேரம், அரசு புறம்போக்கு இடங்களாக இருக்கும் சதுப்பு நிலங்களை, ஏரிகளை ஆக்கிரமித்து பெரு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும்போது அதை வளர்ச்சியாகப் பார்க்கிறோம்’’ என்றார்.

சரி... புறம்போக்கு நிலங்களை மக்கள் ஆக்கிரமிக்கலாம். ஆனால், பெருநிறுவனங்களும், அரசும் ஆக்கிரமிக்கக் கூடாது என்கிறீர்களா?

இல்லை. அது என் வாதம் இல்லை. புறம்போக்கு நிலங்களை பாமர மக்கள் எவ்வாறாகப் பயன்படுத்துகிறார்கள். சதுப்புக் காடுகளில் கோரைப் புல்லை எடுத்து பாய் செய்கிறார்கள்: கடற்கரை ஓரம் கருவாடு காயவைக்கிறார்கள்; ஏரிகளிலிருந்து மண் எடுத்து குயவர்கள் பானை செய்கிறார்கள்; விவசாயிகள் வண்டல் மண்ணை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரும் இயற்கையைச் சுரண்டவில்லை. அதனுடன் இயைந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் இந்தப் புறம்போக்கு நிலங்களுடன் பின்னிப்பிணைந்து உள்ளது. ஆனால், நமக்கு இவர்கள் குறித்த பார்வை எப்படியானதாக இருக்கிறது? அவர்கள்தான் அந்தப் புறம்போக்கு நிலத்தின் காவலர்கள். அவர்கள் மணல் எடுக்க வேண்டுமென்றால், ஏரி உயிருடன் இருக்க வேண்டும். சதுப்பு நிலங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், அவர்களின் பொருளாதாரமும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், மக்களுக்கும் இந்தப் புறம்போக்கு நிலங்களுக்கும் உள்ள தொடர்பை கத்தரித்து, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி... அதே நிலங்களைப் பெருநிறுவனங்களுக்குத் தாரைவார்க்கிறோம்... இது எப்படிச் சரியாகும்?

 

ஹூம். ஆனால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதற்கும், சென்னை வெள்ளத்துக்கும் என்ன தொடர்பு?

நாம் புறம்போக்கை நிலத்தைத் தேவையற்ற நிலங்களாகத்தானே பார்க்கிறோம்... நம் பார்வையில் தேவையற்ற நிலங்களாக இருக்கும் சதுப்பு நில கழிவெளி புறம்போக்கு நிலத்தை, IT corridor அமைக்கத் தாரைவார்த்தோம்... ஆற்றை மறித்து விமானநிலைய ஓடுதளம் அமைக்கப் பயன்படுத்தினோம்... கொசஸ்தலையாற்றின் கழிமுக புறம்போக்கில், மண்ணைக் கொட்டி, நீரைக் கொன்று துறைமுகம் கட்டினோம். எளிய மக்களின் நீடித்த வளர்ச்சிக்காக இருக்க வேண்டிய புறம்போக்கு நிலங்கள், சில நிறுவனங்களின் கைகளில் சென்று தன் உன்னதமான உயிரை இழந்தது. கழிமுக புறம்போக்கை, நீர்நிலை புறம்போக்கை கட்டடங்கள் கொன்று ஆக்கிரமித்தால்... ஊருக்குள்தானே வெள்ளம் வரும்.

நாங்கள் இப்படித்தான் வளர்ச்சி என்ற பெயரில் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்போம் என்பீர்களானால், உங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வரத்தான் செய்யும். நாம் அமைதியாக, ஆரோக்கியமாக வாழ விரும்புகிறோம் என்றால், நாம் ஆக்கிரமிப்பிலிருந்து புறம்போக்கு நிலங்களைக் காக்க வேண்டும்... மீட்க வேண்டும். ஆம், புறம்போக்கு நிலத்தை காப்பதிலிலும், மீட்பதிலும் தான் நம் வாழ்வும் அடங்கி இருக்கிறது.

- மு. நியாஸ் அகமது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ