Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஞ்சனா கெரசினோடு கோட்டைக்கு வந்தது ஏன்? சிக்கும் காக்கிகள்!

சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டில் ஆர்வம். கோகோ  விளையாட்டில் ஓட ஆரம்பித்த அவரை வாழ்க்கையிலும் விதி ஓட, ஓட விரட்டுகிறது என்கிறார்கள் இன்ஸ்பெக்டர் காஞ்சனாவின் 1999 பேட்ஜ் பெண் அதிகாரிகள். பெயரை குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தனர் அவர்கள். 

"பயிற்சியின் போதே பல சவால்களை சந்தித்தவர் காஞ்சனா. அவரது அப்பாவுக்கு சென்னை ஐ.சி.எப்.பில் வேலை. அவர் மூலமே காஞ்சனாவுக்கு விளையாட்டில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. விளையாட்டு கோட்டா மூலமே காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக நுழைந்தார். செம்பியம் காவல்நிலையத்தில் பணியை தொடங்கினார். காவல்துறையின் அனைத்து பயிற்சிகளிலும் ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் பங்கேற்று சாதித்தார். அவரது துணிச்சலை ஜெயலலிதாவே பாராட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். யார் தவறு செய்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்கும் குணம் காஞ்சனாவுக்கு உண்டு. அதுவே அவருக்கு பல இடங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தியது. என்றாலும் தன்னுடைய குணத்தை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த சமயத்தில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஒராண்டு முன்பு இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். அந்த பணியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். இந்த சமயத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பிரகாஷ் நியமிக்கப்பட்டார். இவர் 1997ம் பேட்ஜ். சீனியர் என்ற பெருமையுடன், அவர் செயல்பட்டதாக சொல்கிறார்கள். திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு என்று தனியாக பெயர் பலகை கிடையாது. அதற்கு ஏற்பாடு செய்தார் காஞ்சனா. அதிலிருந்து இருவருக்கும் இடையே முட்டல், மோதல் தொடங்கியது. அடுத்து காஞ்சனாவின் டேபிளுக்கு வரும் பெண்கள் சம்பந்தமான புகார்களை பிரகாஷ் விசாரித்துள்ளார். இதுவும் இருவருக்கும் இடையே உள்ள மோதலை வலுவடைய செய்தது. இந்த சமயத்தில் காஞ்சனாவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் ஜீப், காலவதியாக; அதை ஓரங்கட்டி விட்டு தன்னுடைய சொந்த வாகனத்தையே காஞ்சனா பயன்படுத்தினார். அதற்கும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் இடையூறு ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். இந்த தகவலை காஞ்சனா, உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஆனால், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக காஞ்சனாவுக்கு மெமோ கொடுத்தனர். போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் காஞ்சனாவை, ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் சரமாரியாக திட்டினார். இது எல்லாம் காஞ்சனாவுக்கு மனஉளைச்சலை அதிகப்படுத்தியது. இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பணியில் கவனம் செலுத்தினார். அவரது அணுகுமுறை பொது மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தியது. பல விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.

இந்த சமயத்தில் காஞ்சனாவின் குடும்ப வாழ்க்கை குறிப்பிடும் வகையில் அமையவில்லை. காவல்துறையில் பணியாற்றிய ஒருவரை கரம்பிடித்தார். அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்னை தி.நகரில் ஸ்போர்ட்ஸ் உபகரணங்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார். காஞ்சனாவுக்கு இரண்டு குழந்தைகள். அதில் தான் காஞ்சனாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. ஒரு குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு. அந்த குழந்தையை அருகில் இருந்தே பார்த்துக் கொள்ள வேண்டிய நிலை. ஆனாலும், போலீஸ் வேலையோடு அந்த குழந்தையையும் அவர் சிரமத்தோடு கவனித்து வந்தார். சில ஆண்டுக்கு முன்பு ஏழுகிணறு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்த காஞ்சனாவின் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை ஆசிரியர் டஸ்ட்டரால் தாக்கியுள்ளார். அதில் மேலும் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஞ்சனா, ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் ஏனோ, காஞ்சனாவை விட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாகவே போலீஸ் நடந்து கொண்டது. இது காஞ்சனாவுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. குழந்தையை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள தற்போதுள்ள பணியிடம் சரிவராது என்று கருதிய காஞ்சனா, போலீஸ் துறையில் உள்ள வேறுபிரிவுக்கு தன்னை மாற்ற போலீஸ் உயரதிகாரிகளிடம் விருப்ப மனு கொடுத்தார். 4 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்ட அந்த மனுவுக்கு சமீபத்தில் தான் நல்ல பதில் வந்துள்ளது. காஞ்சனாவின் விருப்பப்படியே அவரை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற க்ரீன் சிக்னல் கொடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் பிரகாஷுக்கும், காஞ்சனாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் மனம் உடைந்த காஞ்சனா, தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து தனக்கு இதுவரை நேர்ந்த கொடுமைகளை சொல்ல மனுவோடு வந்தார். முதல்வரை சந்திக்க முடியவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள அவர் முடிவு செய்திருந்தார். காஞ்சனா போலீஸ் என்பதால் அவருக்கு எந்தவித சோதனையும் இல்லை. இதனால் எளிதில் கையோடு மண்எண்ணெய்யையும் எடுத்துச் சென்றார். சட்டமன்றத்துக்குள் நுழைய முயன்ற போது அங்குள்ள காவலர்கள் அவரை அனுமதிக்கவில்லை. இதனால் ஏற்கனவே முடிவு செய்தது போல தற்கொலை செய்ய மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு 4வது நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றார். அவரை தடுத்த காவலர்கள் அருகில் உள்ள ஜெனரேட்டர் அறைக்கு அழைத்துச் சென்றனர். இப்போது துறைரீதியான விசாரணை வளையத்தில் காஞ்சனா இருக்கிறார்" என்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சனாவிடம் விசாரிக்கும் உயரதிகாரிகளிடம் காவல்துறையில் பெண்களுக்கு நேரிடும் கொடுமைகள் குறித்து சொல்ல உறுதியான மனநிலையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

காஞ்சனாவுக்கும் பிரகாஷுக்கும் என்ன மோதல் என்று கேட்ட போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாகவே இருந்தது. "வெளிநாட்டை சேர்ந்த  15 வயது இளம்பெண், கடத்தப்பட்டு வடசென்னையில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அந்த இளம்பெண் பல வி.ஐ.பிக்களுக்கு விருந்தளிக்கப்பட்டார். இந்த சமயத்தில் அந்த வீட்டிலிருந்து இளம்பெண் தப்பினார். அவரை காஞ்சனாவிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர். இந்த வழக்கை திறம்பட விசாரித்து குற்றவாளிகளை கைது செய்தார். அப்போது இந்த வழக்கில் பிரகாஷ் தலையிட்டதாக கூறப்படுகிறது. அதோடு இல்லாமல் சில பெண்களிடம் தனியாக விசாரிக்க, அந்த காவல் நிலையத்தில் தனி அறையும் உள்ளதாம். இது காஞ்சனாவுக்கு பிடிக்கவில்லை. அதை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் காஞ்சனா மீது பழி சுமத்தி போலீஸ் உயரதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. விசாரணை என்ற பெயரில் ஒரு நாள் முழுவதும் காஞ்சனா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காத்திருந்தார். இவ்வாறு பல வகையில் காஞ்சனா, பழிவாங்கப்பட்டார். இந்த சமயத்தில் அவரது தற்கொலை முயற்சி சம்பவத்தில் காஞ்சனாவை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்ப காய் நகர்த்தப்பட்டு வருகிறது" என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் பேசினோம். "காஞ்சனா சொல்லும் புகார்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில் நான் எதை சொல்ல வேண்டும் என்றாலும் அதை எனக்கு மேல் உள்ள உயரதிகாரிகளிடம் சொல்லிக் கொள்கிறேன். காஞ்சனாவும், நானும் ஒரே ரேங்கில் இருக்கிறோம். அவரை பழிவாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் இதற்கு முன்பு வேலை பார்த்த இடங்களில் பிரகாஷ் எப்படிப்பட்டவர் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதுபோல காஞ்சனா வேலைப்பார்தத இடங்களிலும் விசாரித்துக் கொள்ளுங்கள்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

எஸ்.மகேஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close