Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

20 வருடங்களைக் கடந்த அந்த 80 பேர்! - அண்ணா பிறந்தநாளுக்கான முதல்வரின் அஸ்திரம்

மிழக சிறைகளில் நீண்டகாலம் அடைபட்டிருக்கும் கைதிகளின் பட்டியலைத் தயாரித்துவிட்டது சிறைத்துறை. ' அண்ணா பிறந்தநாளில் இவர்களை விடுவிக்கும் முடிவில் இருக்கிறார் முதல்வர்' என்கின்றனர் சிறை அதிகாரிகள். 

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்பட ஒன்பது இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. பெண் கைதிகளுக்கான தனிச் சிறைகள் நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் நீண்டகாலமாக சிறையில் வாடுகின்றனர். 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில் 1,405 கைதிகள், அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு, எந்தக் கைதியும் விடுதலை செய்யப்படவில்லை. ஒற்றைக் காரணம், சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக பா.ஜ.கவின் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்குதான்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ' 2008-ம் ஆண்டு முன்விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அனைவரையும் வழக்கில் சேர்த்துக் கொண்டு விசாரணை நடத்துவது சாத்தியமற்றது. தவிர, முன்விடுதலையான கைதிகள் அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சட்டரீதியாக ஏற்புடையதாக இருக்காது. இதுகுறித்த அரசாணையில் எங்களால் தலையிட முடியாது' என்று கூறி வழக்கை முடித்து வைத்தார் தலைமை நீதிபதி. இதனையடுத்து, எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. 

தமிழக சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " அண்ணா பிறந்தநாளில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த கைதிகளை விடுவிக்கும் முடிவில் அரசு இருக்கிறது. இதற்காக, கடந்த சில நாட்களாக ஆயுள் கைதிகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தோம். இருபதாண்டுகளைக் கடந்த கைதிகள் மட்டும் 80 பேர் உள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கின் கைதிகள், 19 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். எனவே, இவர்கள் விடுவிக்கப்படுவது குறித்து எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை" என்றார். 

இதையடுத்து, சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர்.புகழேந்தியிடம் பேசினோம். " எட்டு ஆண்டுகளாக முன்விடுதலை செய்யப்படாததால், பல கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரையில் முப்பது கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் பத்தாண்டுகளை நிறைவு செய்த கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், இந்த ஆண்டு கைதிகளை அரசு விடுவிக்கும் என சிறைவாசிகள் எதிர்பார்ப்போது உள்ளனர். ராஜீவ்காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை அரசியலைமைப்பு சட்டப் பிரிவு 161-ன்படி தமிழக அரசு விடுதலை செய்யும் என நம்புகிறோம்.

வீரப்பனின் அண்ணன் மாதையன், ஆட்டோ சங்கரின் தம்பி மோகன் ஆகியோர் 25 ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கின் நாற்பது கைதிகளும் 19 ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். கர்நாடக அரசு பத்தாண்டுகளைக் கடந்த 250 கைதிகளை முன்விடுதலை செய்துள்ளது. அதேபோல், தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கும் மேல் இருப்பவர்களை மாநில அரசு முன்விடுதலை செய்ய வேண்டும். எந்தப் பிரிவில் குற்றம் செய்தார்கள் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சிறை நன்னடத்தை விதிகளின்படி கைதிகள் முன் விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்" என்றார் நிதானமாக. 

-ஆ.விஜயானந்த்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ