Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரிசு சான்றிதழால் தடைபட்ட தங்கை திருமணம்...! அண்ணனின் அதிர்ச்சி முடிவு

தூத்துக்குடி : வாரிசு சான்றிதழ் தராமல் இழுத்தடித்ததால் தனது தங்கையின் திருமணம் நின்று விட்டதாக கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் தாலுகா பிதாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது தந்தை கருப்பசாமி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இறந்தார். மாரிமுத்துவின் தங்கையின் திருமணத்துக்காக வாங்கிய நகைகள், தந்தை கருப்பசாமியின் பெயரில் அடகு வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நகையை மீட்க வாரிசு சான்றிதழ் அவசியம் என்பதால் எட்டையபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாரிமுத்து தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தீக்குளிக்க முயன்ற மாரிமுத்துவிடம் பேசினோம், ‘’எட்டையபுரம் பக்கத்துல இருக்குற பிதாபுரம்தான் என் ஊரு. போன வருஷம் ஜூலை மாதம் 13ம் தேதி என்னோட அப்பா கருப்பசாமி உடல்நலம் சரியில்லாம இறந்துட்டாங்க. குடும்பக் கஷ்டத்துல எட்டையபுரத்துல உள்ள ஒரு வங்கியில என் தங்கச்சியோட நகை 20 பவுனை அப்பா பேருலயே அடகு வச்சிருந்தாங்க. அப்பா இறந்த கொஞ்ச நாளிலேயே அந்த நகையை மீட்க அடகு வச்ச நகைக்கான பணம், அப்பாவோட இறப்புச்சான்றிதழோட வங்கிக்கு போனேன். ’’இறப்புச்சான்றிதழோட வாரிசு சான்றிதழும் வேணும்’’னு  வங்கியில சொல்லிட்டாங்க. உடனே எட்டையபுரம் தாலுகா அலுவலகத்துல வாரிசு சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தேன்.

ஆனா, 'உன் அப்பாவோட இறப்புச்சான்றிதழ் மட்டும் போதுமா? கருப்பசாமிக்கு நீதான் மகன்னு எப்படி நம்ப முடியும்'னு தாசில்தார் பரமேஸ்வரி கேட்டாங்க. கருப்பசாமி மகன்தான் மாரிமுத்துன்னு ஊருல உள்ள 10 பேர் கிட்ட கையெழுத்தும், நோட்டரி பப்ளிக் வக்கீல் கிட்ட சான்றிதழும் வாங்கி கொடுத்தேன். ’’இதையெல்லாம் ஏத்துக்க முடியாது, உங்க தாத்தா பாட்டியோட இறப்பு சான்றிதழ், உங்க அப்பாவோட வாரிசுச்சான்றிதழ் வேணும்’’னு கேட்குறாங்க. நான் பிறக்குறதுக்கு முன்னாலயே தாத்தா, பாட்டி இறந்துட்டாங்க. எங்க அப்பா இறக்கும் போது வயசு 65. அப்படி இருக்கும் போது இப்போ தாத்தா, பாட்டி உயிரோட இருந்தா 100 வயசுக்கு மேல இருக்கும். 40 வருசத்துக்கு முன்னால இறந்த தாத்தா, பாட்டியோட இறப்புச்சான்றிதழ் கேட்டா நான் எங்க போவேன்?. மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துலயும் மனு கொடுத்தேன். ஆட்சியர் வாரிசு சான்றிதழ் கொடுக்கச் சொல்லி தாசில்தாருக்கு உத்தரவு போட்டாங்க.

ஆனா, ‘’யாரு உத்தரவு போட்டாலும், தாத்தா, பாட்டி இறப்புச்சான்றிதழ், உன் அப்பாவோட வாரிசுச்சான்றிதழ் இல்லாம உனக்கு நான் வாரிசுச்சான்றிதழ் கொடுக்க மாட்டேன். நீ முதல்வருக்கே மனு கொடுத்தாலும் இதுதான். என்னை டிரான்ஸ்பர் பண்ணுனா பண்ணிக்கட்டும்.’’னு கறாரா சொல்றாங்க.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு போட்டும் இந்த அம்மா இப்படி பண்றாங்க. அடகு வச்ச நகையை மீட்டா என் தங்கச்சி கல்யாணத்தை நடத்தி முடிச்சிடுவேன். இந்த வாரிசு சான்றிதழ் தராம இழுத்து அடிச்சதுனால இரண்டு தடவை தங்கச்சியோட கல்யாணம் நிச்சயம் வரை வந்து நின்னு போச்சு. மன விரக்தியிலதான் உடம்புல மண்ணென்ணெய ஊத்திட்டேன். ஒரு வாரத்துல வாரிசு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்குறேன்னு கோவில்பட்டி கோட்டாச்சியர் கண்ணபிரான் உறுதியளிச்சிருக்காங்க. எனக்கு மட்டும் இல்ல வாரிசு சான்றிதழ் பிரச்சினையால 200 மனு வரைக்கும் நிலுவையிலயே இருக்குது ‘’ என்றார்.

- இ.கார்த்திகேயன்  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ