Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன் இருக்கும் சவால்கள் !

சென்னை போலீஸ் கமிஷனராக மூன்றாவது முறையாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார், ஜார்ஜ். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். 1984-ம் ஆண்டு, ஐ.பி.எஸ். பேட்ஜ் அதிகாரி. 

போலீஸ் கமிஷனராகப் பதவி ஏற்றதும் ஜார்ஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னை மக்களுக்குச் சேவை செய்வதற்கு எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். காவல் பணி அதிகரிக்கப்பட்டு ரோந்து பணி பலப்படுத்தப்படும். பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று கூறியுள்ளார்.

வரலாற்றுப் பிரசித்தம் பெற்ற சென்னை போலீஸ் கமிஷனர் பதவியில் ஒரு நாளாவது அமர்ந்துவிட வேண்டும் என்பது ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவு. அந்தக் கனவு, ஜார்ஜுக்கு மூன்று முறை நிஜமாகியிருக்கிறது.

சென்னை கமிஷனராக ஜார்ஜ், முன்னரே இரண்டு முறை பொறுப்பில் இருந்தவர் என்பதால் இரண்டொரு நாளில் வரவுள்ள பிள்ளையார் ஊர்வலம், அதன் பின்னர் வரக்கூடிய சில பண்டிகைகள் போன்றவற்றால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் எல்லாமே சிறப்பாக நடக்கும் அளவுக்கு பாதுகாப்புப் பணியைச் சிறப்பாகச் செய்யக்கூடியவர் ஜார்ஜ். அவரின் கடந்தகால பணிகளில் இருந்த நல்ல விஷயங்களையும், அவர் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்களையும் பதிவுசெய்தே ஆகவேண்டும்.

ஆக்கபூர்வமான பணிகளை அறிமுகப்படுத்தியவர்!

சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்தபோதுதான், போலீஸாருக்கான நவீன ரோந்து வாகனங்களை முதல்வரிடம் கேட்டு வாங்குவதற்கு துணிச்சலுடன் ஃபைல் அனுப்பினார். சென்னையின் முக்கியப் பகுதிகளில் சி.சி.டி.வி (கண்காணிப்புக் கேமராக்கள்) பொருத்தும் வேலையில் தீவிரம் காட்டி அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

அதேபோல் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமராவைப் பொருத்தும்படி உத்தரவிட்டார்.
சென்னையின் துணை கமிஷனர்கள் அலுவலகங்களில் ஆயுதப்படை, சிறப்பு அதிரடிப்படை போலீஸாரை எப்போதுமே தயார் நிலையில் வைக்கும் திட்டத்தைத் சத்தமில்லாமல் உருவாக்கினார்.

அன்றாடம் காலை 7 மணிக்கு போலீஸாருடன் அந்தக் காவல் மாவட்ட துணை கமிஷனர்களையும் ஒருங்கிணைத்து ‘கவாத்து அல்லது பரேடு’ எனப்படும் (போலீஸ் வேலைக்குத் தேர்வானபோது செய்த) பயிற்சியை மேற்கொள்ளும் திட்டத்தைத் துணிச்சலுடன் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

சென்னையின் காவல் மாவட்டத் துணை கமிஷனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் குறைந்தபட்சமாக, 10 காவல் நிலையங்களும், அதிகபட்சமாக 18 காவல் நிலையங்களும் வருகின்றன. (உ-ம்: புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்கள்).

அந்தந்த காவல் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர்கள், தங்கள் பகுதி காவல் மாவட்டத்தின் நிறை, குறை, குற்றங்கள் குறித்து முழுமையான அப்டேட்டில் இருக்கும் பொருட்டு ‘லெவல்- டூ’ என்ற அந்தஸ்தில் உளவுப் பிரிவு போலீஸாரை அவர்கள் தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நியமித்துக்கொள்ள உத்தரவிட்டார். (அது ஜார்ஜ் கமிஷனர் பதவியில் இருந்துபோன பின்னரும் தொடர்ந்தது, இன்னமும் தொடர்கிறது.).

சென்னையின் வணிக மைய, ஸ்டார் ஹோட்டல் அதிபர்கள், வங்கி மேலாளர்கள், குடியிருப்பு அபார்ட்மென்ட் செகரட்டரிகள், என்.ஜி.ஓ-க்கள், காப்பக நிர்வாகிகள் என்று தினமும் ஏதாவது ஓர் அடிப்படையான விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, கமிஷனர் அலுவலகத்தில் அதிகமான மீட்டிங்குகளை நடத்தியதும் கமிஷனர் ஜார்ஜ்தான்.

 

அதிகக் குமுறல்களைக் கேட்க வைத்தவர்!

“யாருமே நெருங்க முடியாத வளையத்தைப் போட்டு வைத்துக்கொண்டு இருக்கும் நீங்கள் (ஜார்ஜ்) அந்த ஜார்ஜ் கோட்டை மன்னரா, சென்னை போலீஸ் கமிஷனரா?” என்று ஒரு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.

எட்டுமாடிக் கட்டடத்தில் இரும்புத்திரை போட்டு இயங்கிவந்த கமிஷனர் ஜார்ஜின் அலுவலகம், அவருக்குப் பின்னர் அங்கு கமிஷனராக வந்த டி.கே.ஆர் (தற்போது போலீஸ் டி.ஜி.பி.) மூலமாக திரை விலகியது. யாரும், எந்த நேரத்திலும் தன்னைச் சந்திக்கலாம் என்று டி.கே.ஆர்-தான் முந்தைய இரும்புத் திரையை விலக்கி முகம் காட்டினார். 

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையில் போலீஸ் கமிஷனர் அலுவலக அறையிலேயே டி.கே.ஆரைப் பார்க்கலாம். ஜார்ஜ் கமிஷனராக இருந்தவரையில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு (விசிட்டர்ஸ்) எந்த லிஃப்ட்டும் அவர் இருக்கும் 8-வது மாடிக்குப் போனதில்லை. ஏழாவது மாடிதான் கடைசி. அந்த மாடியிலிருக்கும் அடுத்த நிலை அதிகாரிகள், விசிட்டர்களை அங்கேயே பிடித்து(?) ‘கவர்’ மூலம் வரும் குறைகளைக் கேட்டு வாங்கிக்கொண்டு ஆறுதலாய்ப் பேசி அனுப்பிவிடுவார்கள்.

மிகப் பெரிய கொள்ளை, கொலைகளில் குற்றவாளிகள் பிடிபட்டால் போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்துவிடுவார்கள். கமிஷனர், அவர்களைப் பாராட்டி ‘ரிவார்டு’ வழங்கி கெளரவிப்பார். மீட்கப்பட்ட பொருட்களை, ஆயுதங்களை கமிஷனர் அலுவலக ஹாலில் பரப்பிவைத்துவிட்டு, மீடியாக்களை போலீஸ் ஏரியா பி.ஆர்.ஓ அழைப்பார். கமிஷனரிடம் செய்தியாளர்கள் அந்தச் சம்பவம் குறித்து ‘பிரஸ் மீட்’டில் கேள்வியெழுப்பி பதில் பெறுவார்கள்.

ஜார்ஜ் கமிஷனராக வந்ததும் அந்த நூற்றாண்டு பாரம்பர்யம் உடைந்தது. எந்தச் செய்தியும், கமிஷனரின் பதிலோடு கூடிய நம்பகத்தன்மை கொண்டதாக இருந்ததும் உடைந்தது. அடுத்தகட்டமாக வாரந்தோறும் பிரஸ் மீட் என்ற நிலையையும் ஜார்ஜ் மாற்றினார். கைப்பற்றப்பட்ட பொருட்களை போட்டோ, வீடியோ மட்டும் எடுக்கலாம். மைக் போடக் கூடாது, பேட்டி கேட்கக் கூடாது... செய்திக் குறிப்பு மட்டும் பி.ஆர்.ஓ. கொடுத்துவிடுவார் என்பது ஜார்ஜின் நிலை.

கமிஷனரே பேட்டி தருவதில் பின்வாங்கிக் கொண்டதால், அந்தந்த பகுதி போலீஸ் துணை கமிஷனர்கள், உள்ளூர் செய்தியாளர்களிடம் பேசவும் பயந்தனர். பொதுமக்களைச் சந்திப்பதில்தான் கமிஷனர், பாராமுகம் காட்டினாரே தவிர, பொதுமக்களில் வி.வி.ஐ.பி பொதுமக்களான, சினிமா வட்டாரங்களைச் சந்திக்க அவர் எப்போதுமே தயக்கம் காட்டியதில்லை. ஒரு மாதத்தில் 10 சினிமா பிரபலங்களாவது கமிஷனர் ஜார்ஜை சந்தித்துவிடுவார்கள்.

ஜார்ஜ் உருவாக்கி வைத்துவிட்டுப்போன ‘இறுக்கமான திரை’யை டி.கே.ஆர் விலக்கிவிட்டார். மீண்டும் அதே இறுக்கமான திரையை கமிஷனர் ஜார்ஜ் தொங்கவிடுவாரா, தன்னால் எந்த மாதிரியான சூழலின் கீழ் பணியாற்றியவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர் உணர்வாரா என்ற எதிர்பார்ப்பு பரவலாகி இருக்கிறது. அதைச் சரி செய்வதே ஜார்ஜ் எதிர்நோக்கியுள்ள முக்கியச் சவால். அதற்கு அடுத்த சவால், ஆளுங்கட்சி பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல்.

ஜார்ஜ் கமிஷனராக இருந்த காலகட்டத்தில் எப்படியெல்லாம் பாதிப்பு இருந்தது, இப்போது எப்படி மாற்றம் வேண்டும் என்று சில போலீஸ் துணை கமிஷனர்களிடம் கேட்டபோது பொங்கியெழுந்துவிட்டார்கள். ‘‘அன்றாடம் காலை 7 மணிக்கு கான்ஸ்டபிள்களுடன் எங்களைப் போன்ற போலீஸ் துணை கமிஷனர்களையும் இணைத்து ‘பரேடு’ செய்ய வைத்தது போலீஸ் வரலாற்றிலேயே இல்லை. கான்ஸ்டபிளுக்கும் எங்களுக்கும் பதவியிலும் மிகப் பெரிய இடைவெளி இடிக்கும்... அவர்களுக்கு வயது குறைவு. நாங்கள் நாற்பதையும், ஐம்பதையும் கடந்தவர்கள். இதுவும் ஒரு பிரச்னை.

துணை கமிஷனர் அந்தஸ்தில் இருக்கும் எங்களை வரிசையில் நிற்கவைத்து எங்களிடம் ‘பரேடு’ வாங்கும் பொறுப்பு கான்ஸ்டபிள், எஸ்.ஐ. பதவியில் இருக்கிறவர்களிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒரு சில இடங்களில் அந்தப் பொறுப்பு, இன்ஸ்பெக்டர்களிடம் இருக்கும். அவர்கள், இங்கே எங்களை பரேடு வாங்கினால் போலீஸ் ஸ்டேஷனில் பணியின்போது ஏற்படும் அவர்கள் மீதான குறைகளை எங்களால் விசாரிக்கக்கூட முடியாது.

இந்த இடைவெளி போலீஸில் வந்துவிட்டால், போலீஸ் போலீஸாக இருக்காது. ஜார்ஜைப் பொறுத்தவரை அவர் போலீஸ் கமிஷனர் மட்டுமல்ல... ஒட்டுமொத்த காக்கிச்சட்டைக்கும் பொறுப்பு அவரே. இந்தநிலையை அவர் மாற்றாத வரையில் அவர் எத்தனை நல்லது செய்தாலும் எடுபடாது.

இரவு ரோந்து முடித்த நாங்கள் ஓய்வெடுக்கவும் முடியாமல், பரேடும் கவனிக்க முடியாமல் பட்ட துயரம் எங்களுக்கு த்தான் தெரியும். ஜார்ஜ் கமிஷனராக இருந்தபோது, நாங்கள் பெருமையாகக் கருதும் சட்டம் - ஒழுங்கு டியூட்டியை விட்டுப் பலர், பல்வேறு காவல் பிரிவுப் பணிகளில் போய் ஒட்டிக்கொண்டோம்.


 ஜார்ஜ் கமிஷனராக இருந்த இரண்டாண்டு காலத்தில் கூடுதல் பணிச்சுமையின் காரணமாகச் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் (கான்ஸ்டபிளாக வேலைக்குச் சேருகிறவர்கள் ஓய்வுபெறும் காலத்தில் வகிக்கும் பதவிதான் இது)கள் அதிகமான எண்ணிக்கையில் மாரடைப்பால் உயிரிழந்தனர்’’ என்றனர்.

‘‘சென்னை எழும்பூரில் இருந்த பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் கமிஷனராக இருந்து, புதிதாக அமைந்த சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் முதல் போலீஸ் கமிஷனராக, அப்படியே பதவியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்ற ஒரே போலீஸ் கமிஷனராக இருந்தவர், ஜார்ஜ். 


பத்திரிகையாளர்களைச் சந்திக்காமலேயே சென்னையில் இரண்டாண்டுகளை நகர்த்தி சாதனை(?) புரிந்த போலீஸ் கமிஷனர் என்ற பெருமையைப் பெற்ற எஸ்.ஜார்ஜ், தன்னை மாற்றிக்கொண்டு, தன்னுடைய சாதனைகளைக் காலத்தால் நிலைத்து நிற்கும்படி பேசவைக்க வேண்டும் என்பதே அவரது இருக்கைக்கு கம்பீரம்’’ என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ