Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ராமதாஸை பகைத்துக் கொள்வதையே தலைவர்கள் விரும்பவில்லை!' -ம.ந.கூட்டணியை விளாசும் வி.சி.க.

ட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்ற குரல் எழுந்துள்ளது. ' மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பாக எந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. கூட்டியக்கம் தொடர்வதையே தலைவர்கள் விரும்பவில்லை" என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர். 

'தமிழகப் பிரச்னைகளுக்காக ஒன்றிணைந்து போராடுவோம்' என்ற அடிப்படையில், மக்கள் நலக் கூட்டியக்கம் உருவானது. இந்த இயக்கத்தில் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்தன. சாதி ஆணவக் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஆந்திராவில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டுப் போராட்டம் என நான்கு பிரமாண்டக் கூட்டங்களை நடத்தி அதிர வைத்தனர். தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு, எந்த போராட்டத்தையும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டவில்லை. 

"மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று இருக்கிறது என்பதையே திருமாவளவன் போடும் கூட்டங்களில்தான் நிறுவுகிறார்கள். பசுவின் பெயரால் தலித்துகளும் முஸ்லிம்களும் கொல்லப்படுவதைப் பற்றியோ, சாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடப்பது குறித்தோ, திருமாவளவனை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் ராமதாஸ் பற்றியோ மக்கள் நலக் கூட்டணியின் இதர தலைவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. ' சாதியவாதத்தை எதிர்க்காமல் மதவாதத்தை மட்டும் எதிர்ப்பது, எப்படி மதச்சார்பின்மை ஆகும்' என மேடையில் வைத்தே திருமா பேசினார். தன் மீது தாக்குதல் நடத்தும் ராமதாஸ் பற்றி கூட்டணியின் தலைவர்கள் எதுவும் பேசாமல், மௌனம் சாதிப்பதில் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திருமா" என நம்மிடம் ஆதங்கப்பட்டார் மக்கள் நலக் கூட்டணி நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம், 

"தேர்தல் தோல்வியால் மக்கள் நலக் கூட்டணியின் தொண்டர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தினால் மட்டுமே, உள்ளாட்சித் தேர்தலில் கவுரவமான இடங்களைப் பெற முடியும். அதற்கான சிறு முயற்சியில்கூட தலைவர்கள் இறங்கவில்லை. கடந்த மே மாதத்திற்குப் பிறகு பெண்கள் மீதான வன்முறை, படுகொலைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, காவிரி பிரச்னை உள்பட மக்களை அன்றாடும் வதைக்கும் எந்தப் பிரச்னையிலும் மக்கள் நலக் கூட்டியக்கம் போராட்டம் நடத்தவில்லை. காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இந்தக் கூட்டியக்கமே கூட்டியிருக்கலாமே? அதைச் செய்ய தவறிவிட்டார்கள். போலியான கூட்டணியாக நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற கேள்வியே அனைவர் மனதிலும் எழுகிறது. வி.சி.க ஒருங்கிணைத்த மதச்சார்பின்மை மாநாடு, விருது வழங்கும் விழா போன்றவற்றில் மட்டும், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்று கூட்டணியை உறுதி செய்கிறார்கள். மற்ற நேரங்களில் எந்த சந்திப்பையும் நடத்துவதற்கு அவர்கள் விரும்பவில்லை. 

போயஸ் கார்டன் வரை சென்று திருமாவுக்கு எதிராக கடிதம் கொடுத்தார் ராமதாஸ். மக்கள் நலக் கூட்டணியின் ஒரு தலைவருக்கு எதிராக நடத்தப்பட்ட கடித யுத்தத்திற்கு எதிராக வைகோ உள்ளிட்டவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ராமதாஸை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறார்களா? சி.பி.எம் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் மட்டுமே அறிக்கை மூலம் பா.ம.கவுக்குக் கண்டனத்தைத் தெரிவித்தார். மற்ற தலைவர்களின் மவுனத்தைப் பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார் திருமா. ' மக்கள் நலக் கூட்டணிக்கு நாம் லாயலாக இருக்கிறோம். அவர்களும் அவ்வாறு இருக்கிறார்களா?' என்ற கேள்வி திருமா உள்பட, வி.சி.க தொண்டர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது. வைகோ உள்ளிட்டவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பதையே கணிக்க முடியவில்லை" என்றார் ஆதங்கத்தோடு. 

' கூட்டியக்கம் ஏன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை?' என்ற கேள்வியை சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். " கூட்டியக்கம் என்பது ஆயுள் முழுவதும் போராட்டங்களை முன்னெடுப்பது அல்ல. ' பிரச்னைகளைப் பொறுத்து நான்கு கட்சிகளும் ஒன்று திரண்டு போராட்டத்தை நடத்துவது' என்றுதான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவரையில், அந்தந்த கட்சிகள் தனிப்பட்ட முறையில் போராட்டங்களை நடத்திக் கொள்வார்கள். திருமாவளவன் முன்னெடுத்த கூட்டங்களில் நான்கு தலைவர்களும் பங்கேற்றோம். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடுகிறது" என்றார் நிதானமாக. 

-ஆ.விஜயானந்த் 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ