Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜோக்கர்' பட பாணியில் கொல்லப்பட்ட மது ஒழிப்புப் போராளி! -திண்டுக்கல் திகில்

திண்டுக்கல்லில் மது ஒழிப்புக்காக போராடி வந்த சமூக ஆர்வலர் ஒருவர், ஜோக்கர் பட பாணியில் கொலை செய்யப்பட்டுள்ளார். ' குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கிறது காவல்துறை' எனக் குற்றம் சுமத்துகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

திண்டுக்கல் மாவட்டம், பெரிய கோட்டை பகுதியில் இளைஞர் நலச் சங்கம் நடத்தி வந்தவர் பழனிவேல். நிலத் தரகராக வேலை பார்த்துக் கொண்டே, ஊருக்குள் சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். ஊருக்குள் கஞ்சா விற்பனை, போலி மது விற்பனை போன்றவற்றுக்கு எதிராக கடுமையாகப் போராடி வந்தார். இந்நிலையில், கடந்த 29-ம் தேதி ஏழு பேர் கொண்ட கும்பலால், கொடூரமாக வெட்டிச் சாய்க்கப்பட்டுவிட்டார். இதுகுறித்து நம்மிடம் பேசிய பெரிய கோட்டை கிராமத்து இளைஞர் ஒருவர், " இளைஞர் நலச்சங்கத்தின் துணை செயலாளராக இருந்தார் பழனிவேல். அரசு திட்டங்களை ஏழை மக்களிடம் கொண்டு செல்வது, மது ஒழிப்பிற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வது, அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டுமென்று பரப்புரை செய்வது போன்றவைதான் அவருடைய முக்கிய வேலைகள்.

இந்த கிராமத்தில் வசிக்கும் மருதமுத்து, முத்துவீரன், போஸ் ஆகிய மூன்று பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, கிராமத்தில் கள்ளத்தனமாக விற்று வந்தனர். குடியிருப்புகளில் கள்ள மது விற்பனையைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த பழனிவேல், இந்த கும்பலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். வடமதுரை காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மருதமுத்து, முத்துவீரன் ஆகியோர் பழனிவேலை அடித்து நொறுக்கினர். சங்கத்தின் தலைவரான ராஜாவையும் காதில் வெட்டினார்கள். இதுகுறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் டூ வீலரில் சென்று கொண்டிருந்த பழனிவேலை வழிமறித்து வெட்டிச் சாய்த்துவிட்டு, ஓடையில் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்" என வேதனைப்பட்டார். 

சம்பவ இடத்தில் இருந்து நம்மிடம் பேசிய எவிடென்ஸ் அமைப்பின் கதிர், " மது விற்பனையில் ஈடுபட்ட கும்பலுக்கு எதிராக போராடியதன் விளைவாகவே பழனிவேல் கொல்லப்பட்டுள்ளார். கொலையைத் தடுக்க முயன்ற சரவணன் என்பவரது கையை வெட்டியுள்ளனர். பழனிவேல் மனைவி காளீஸ்வரி எங்களிடம் பேசும்போது, ' தயாளன், பகவதி சூர்யபிரகாஷ், முத்துவீரன், மருதவீரன், போஸ், மாரிமுத்து ஆகியோர் கொண்ட கும்பல் என் கணவரை கொலை செய்துள்ளனர்' என்று கூறினார். இதுதொடர்பான, முதல் தகவல் அறிக்கையை காளீஸ்வரியிடம் போலீஸார் தரவில்லை.

மருதமுத்து, முத்துவீரன் ஆகிய இரு பெயர்கள் மட்டுமே எஃப்.ஐ.ஆரில் உள்ளன. உண்மைக்கு மாறாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். மதுவிற்கு எதிராக போராடி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகிற்கு விஷயம் தெரிய வருகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. குற்றவாளிகள் மீது பட்டியல் சாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.  இறந்துபோன பழனிவேல் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமும் அரசு வேலையையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்" என்றார் கொந்தளிப்போடு. 

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ