Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகாவில் பதற்றம்! - பிரதமரை தலையிடச் சொல்லும் சித்தராமையா

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கர்நாடகத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால், காவிரி பிரச்னை பற்றி விவாதிக்க 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை உடனே கூட்டுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடகத்துக்கு கடந்த செப்.6-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மண்டியா, மைசூரு, பெங்களூரில் கன்னட அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன.

நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்தியது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காவிரி பிரச்னை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழகத்துக்கு பிலிகுண்டுலுவில் உள்ள நீர் அளவீட்டின்படி காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காவிரி படுகையில் குறிப்பாக பெங்களூருவில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்த தண்ணீர் திறப்பு தொடர்ந்து நீடித்தால் கர்நாடகத்திற்கு, குறிப்பாக பெங்களூரு நகருக்கு குடிநீர் பிரச்னை ஏற்படும். அது மட்டுமின்றி காவிரி நீரை நம்பி விவசாயம் செய்யும் காவிரி படுகையில் உள்ள கர்நாடக விவசாயிகளுக்கும் பிரச்னை ஏற்படும். மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு மற்றும் தமிழ்நாட்டில் பெய்துள்ள வடகிழக்கு பருவமழை அங்கு சம்பா பயிர் சாகுபடிக்கு போதுமானதாக இருக்கும்.

உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் கடந்த 6-ம் தேதி நான் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினேன். இதில் கலந்து கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். பா.ஜ.க. தலைவர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினர். ஆனாலும் நான், அரசியல் சாசனப்படி மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதால் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டு உள்ளேன். இதன் காரணமாக கர்நாடகத்தில் அமைதிக்கு பங்கமும், பதற்றமும் ஏற்பட்டு உள்ளது. போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றால், இது மாநிலத்தின் பொருளாதாரத்தின் மீது குறிப்பாக மிகப்பெரும் வருவாயை தந்து கொண்டிருக்கும் பெங்களூருவின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது நாட்டின் அன்னிய செலாவணியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதே நிலை தொடர்ந்தால் மாநிலத்தின் பெரும் பகுதியில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதிக்கும்.

தாங்கள் நாட்டின் பிரதமராக மட்டுமின்றி ஒட்டுமொத்த கூட்டாட்சி முறையின் தலைவராகவும் இருக்கிறீர்கள். எனவே காவிரி நீர் பிரச்னையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் (கர்நாடகம், தமிழகம், கேரளா, புதுச்சேரி) முதலமைச்சர்கள் கூட்டத்தை உடனே அடுத்த சில மணி நேரத்தில் கூட்டுங்கள். தற்போது எழுந்துள்ள காவிரி நீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வையுங்கள்.

இதேபோல் கடந்த 1995-ம் ஆண்டு காவிரியில் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தபோது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பிரச்னை எழுந்தது. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக எழுந்த பிரச்னையை தீர்த்து வைக்குமாறு அப்போதைய பிரதமரிடம் முறையிடப்பட்டது. பிரதமர் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்தார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருப்தி அடையும் வகையில் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. எனது இந்த கடிதத்துக்கு தொலைபேசி, ஃபேக்ஸ் அல்லது இணையதள முகவரி மூலமாக உங்களிடம் இருந்து சாதகமான பதிலை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என்று கூறி உள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ