Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினோமா? திருமாவளவன் 

கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தவில்லை. சமூகவலைதளங்களில் பரவி வருபவை பழைய புகைப்படங்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்தார். 

தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், தமிழக முதல்வர் உருவபொம்மை எரிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி கர்நாடகாவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சமூகவலைதளங்களில் படங்களுடன் செய்திகள் வந்தன. இதனை பார்த்து தமிழகத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடவில்லை. 
சமூகவலைதளங்களில் பரவி வருபவை பழைய படங்கள் என்றார்.

4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியிருப்பது வரவேற்கதக்கது என்று கூறிய திருமாவளவன், நதிநீர் பிரச்னையில் சட்டரீதியில் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் தீர்வு காண வேண்டும் என்றார். 

மேலும், கோவை, சிவகங்கையில் தலித்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றார் திருமாவளவன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ