Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும்! - பெ.மணியரசன்

சென்னை: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும் என்று பெ.மணியரசன் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டிற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்ணீர் சம்பா சாகுபடிக்கு போதுமானதல்ல என தமிழக விவசாயிகள் பெரும் ஆதங்கம் அடைந்தார்கள். ஆனால் இந்த குறைவான அளவு தண்ணீரையும்கூட திறந்துவிட கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்புகள், அங்குள்ள காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது. வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இப்போராட்டத்திற்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததோடு, அச்சம்பவங்களுக்கு துணை போனதால் அவர் மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு (suo moto) பதிவு செய்ய வேண்டும் என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம், கர்நாடக அரசு மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதும், ஒரு கண்டனம்கூட தெரிவிக்காமல் இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்பு நடைப்பெற்றபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதி அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோது, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, ஆட்சியையே கலைக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தது.

அதனால், உண்ணாவிரதத்தை பாதியில் முடித்துக் கொண்டு, முழு அடைப்புக்கான ஆதரவையும் வாபஸ் வாங்கி கொண்டு கிளம்பினார் கருணாநிதி. அந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது எந்த ஒரு சிறு வன்முறை சம்பவம் கூட நடைபெறவில்லை. அரசு இயந்திரத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வேலை நிறுத்தத்திறகு ஆதரவு தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என கருதிதான் உச்ச நீதிமன்றம் அப்போது கண்டனம் தெரிவித்தது.

நேற்று கர்நாடாவில் நடைப்பெற்ற போராட்டமானது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைப்பெற்றிருக்கிறது. அதற்கு ஆதரவு தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கிறார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. சாலைகளில் தீ வைப்பு சம்பவங்களும், தமிழ்நாட்டு பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல்களும் நடைப்பெற்றுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட கிருஷ்ணராஜசாகர் அணைகயின் ஷட்டர்களை மூட போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றார்கள். இத்தனை சம்பவங்கள் நடந்தும்கூட, அங்கு ஒரு வழக்குகூட  காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கர்நாடக முதல்வர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ