Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலின் கவனத்தை ஈர்த்த 'அந்த' 22 பேர்!  -உள்ளாட்சி தந்திரம்

ள்ளாட்சித் தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டது தி.மு.க தலைமை. ' மாநிலம் முழுவதும் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்ய ஒரு கமிட்டியும் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்பதால், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, உள்ளாட்சியில் அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதில் தி.மு.க முனைப்போடு உள்ளது. அதற்கேற்ப, " வேட்பாளர் தேர்வு, வார்டுக்கான செலவு என அனைத்திலும் புதிய நடைமுறையைப் புகுத்தி இருக்கிறார் பொருளாளர் ஸ்டாலின்" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர். தொடர்ந்து, " இன்று காலையில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர். இவர்களிடம் மனு வாங்கும் பணியில் இருக்கிறார் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. ஒன்றிணைந்த இந்த மூன்று மாவட்டங்களிலும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிக்கு, ஆர்.எஸ்.பாரதி நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரிடம், மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் பரிந்துரைப் பட்டியலில் இருந்து தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். 

இதைப் போலவே, மாநிலம் முழுவதும் 22 கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கமிட்டியின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனு பெறும் வேலைகள் தொடங்கிவிட்டன. ' அ.தி.மு.கவைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளாட்சி இடங்களைப் பெறுவதற்கு, இந்த நடைமுறைதான் சாத்தியப்படும்' என உறுதியாக நம்புகிறார் பொருளாளர் ஸ்டாலின். தலைமையின் இந்த முடிவை பெரும்பாலான கட்சிக்காரர்கள் விரும்பவில்லை. உள்ளாட்சியில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அடுத்து வரக்கூடிய தேர்தலிலும் சாத்தியப்படுத்தும் முடிவில் தலைமை இருக்கிறது" என்றார். 

" தலைமை நியமிக்கும் 22 பொறுப்பாளர்களும் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. சென்னையைச் சேர்ந்த நிர்வாகிக்கு, கன்னியாகுமரியில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ' யாருக்கும் சாதகமாக முடிவு எடுக்காமல், வெற்றி ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வேட்பாளர் தேர்வு அமைய வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறார் பொருளாளர். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தொகுதிக்குள் தேர்தல் வேலையே பார்க்காதவர்கள் பலர் மாவட்ட செயலாளர்களாக நீடிக்கின்றனர். இவர்களில் சிலர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்களே பதவியில் நீடிக்கும்போது, உள்ளாட்சியின் தோல்விக்கு இவர்களே வழி அமைத்துவிடுவார்கள் என்பதுதான் தலைமையின் கவலையாக இருக்கிறது. அதையொட்டியே, ரகசியக் குழுவும் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன" என்கிறார் தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர். 

-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ