Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக முதல்வருக்கு, கர்நாடக முதல்வரின் கோரிக்கை!

பெங்களூருவில் தமிழர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்களை பாதுகாக்க தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நாளில் இருந்து கர்நாடகாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டங்கள் தற்போது வன்முறையாக வெடித்துள்ளது. பெங்களூருவில் நேற்று தமிழக இளைஞர் ஒருவர் கன்னட அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கர்நாடகாவினருக்கு சொந்தமான ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், பேருந்துகள் ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தாக்கினர். பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் இருமாநிலத்திலும் பதற்றம் நிலவி வருகிறது. 

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வருக்கு ட்விட்டடர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பெங்களூருவில் தமிழர் தாக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சட்டம்- ஒழுங்கை காக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தமிழர்களுக்கு பாதுகாப்பானது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்களை பாதுகாக்க தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் கன்னட மக்கள் பத்திரமாக உள்ளனர். தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் வாழும் கர்நாடகா மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று தமிழக டிஜிபி (பொறுப்பு) டி.கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகா வங்கிகள், உணவகங்கள், முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கும் சென்னையில் வசித்து வரும் கன்னட நடிகர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறுகையில், சென்னையில் சுமார் 280 இடங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் தாக்குதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவினருக்கு சொந்தமான ஓட்டல்கள், கடைகள், நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ