Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவாரா முதல்வர்?'   -கேள்வி எழுப்பும் திருமாவளவன்

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் விவகாரத்தில், தமிழகம் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. ' அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்' என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்.

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இரு மாநிலங்களிலும் வாகனங்கள் தாக்கப்படுவது, வர்த்தக நிறுவனங்களை அடித்து நொறுக்குவது என எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. இதுகுறித்துப் பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், " தமிழர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழர்கள் நடத்தும் வாகனங்கள், கடைகள், மற்றும் நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. 

தமிழகத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. பெங்களூரு மற்றும் மைசூர் பகுதி தமிழர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கவேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டிய நிலையிலும் 15 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கிட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது மிகக்குறைந்த அளவேயாகும். எனினும், இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 

அடுத்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் திருத்தம் செய்து ஆணையிட்டது. அதாவது, 15 டி.எம்.சி தண்ணீரை 12 டி.எம்.சி ஆக குறைத்து 17-ம் தேதி வரையில் வழங்கவேண்டுமென, ஏற்கெனவே அறிவித்ததை மாற்றி 20-ம் தேதி வரையில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என தீர்ப்பளித்தது. கர்நாடக அரசின் வேண்டுகோளை ஏற்று உச்சநீதிமன்றம், இத்திருத்தத்தை செய்துள்ள நிலையிலும், சில அமைப்புகள் கர்நாடகத்தில் திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளன. ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 50 பேருந்துகள் மற்றும் 30 லாரிகள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தமிழத்தைச் சேர்ந்த உணவகங்கள் தாக்கப்பட்டுள்ளன. பல 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வன்முறையில் சாம்பலாகிவிட்டன. 

இது மாநிலங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாழ்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்திய தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம். எனவே, பிரதமர் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிடவேண்டும். தமிழர்களின் உடமைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில், உடனடியாக துணை இராணுவத்தை கர்நாடகத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். தென்மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேசவேண்டும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை உடனடியாக நியமிக்க வேண்டும். அத்துடன், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் விவசாயச் சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரவேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர முதல்வர் ஜெயலலிதா முன் வர வேண்டும்" என்கிறார் கொதிப்போடு. 

-ஆ.விஜயானந்த் 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ