Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரள டி.ஜி.பி மகளுக்கு நேர்ந்த கொடூரம்...! திணறும் தமிழக போலீஸ்

மது போதையால் மயங்கி கிடந்த கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.யின் மகளும், டாக்டருமான லட்சுமியிடம் தவறாக நடந்தது யார் என்று தெரியாமல் தமிழக போலீஸார் குழப்பத்தில் உள்ளனர்.

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.யின் மகள் லட்சுமி (பெயர் மாற்றம்). எம்.பி.பி.எஸ் முடித்த இவர், காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருகிறார். இதற்காக சென்னை பெசன்ட் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். இவரும், தனியார் கம்பெனியில் பணியாற்றும் தீபக் என்பவரும் காதலர்கள். வாரவிடுமுறையில் இந்த காதல் ஜோடி பல இடங்களுக்கு செல்வது வழக்கம். அதுபோல கடந்த சனிக்கிழமை மாமல்லபுரத்துக்கு சென்றனர். அப்போது தீபக்கின் நண்பரும், ஐ.ஐ.டி.யில் பி.ஹெச்.டி படிக்கும் நசிகேதாவும் காதல் ஜோடியுடன் சென்றுள்ளார். பல இடங்களுக்கு சென்ற மூன்று பேரும் அன்றைய தினத்தை சந்தோஷமாக கழித்துள்ளனர். பிறகு மூவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அளவுக்கு மீறிய மதுவால் மீண்டும் அவர்களால் சென்னைக்கு திரும்ப முடியவில்லை. மதுபோதையில் தள்ளாடிய மூவரும் மாமல்லபுரத்தில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அப்போது, மது மயக்கத்திலிருந்த தன்னிடம் யாரோ, தவறாக நடந்ததாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மூன்று பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர் விஜயராகவன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டதால் அவருக்கும் பரிசோதனை நடந்தது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, தனியாக லட்சுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர், ஜன்னல் வழியாக வந்து தன்னிடம் தவறாக நடந்ததாக சொல்லி இருக்கிறார். அடுத்து விடுதிக்கு சென்று போலீஸார், விசாரித்தனர். ஆனால் லட்சுமி, சொன்ன தகவல்படி அங்கு அதற்கான அடையாளங்கள் இல்லை. இதனால் லட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றது யார் என்று தெரியாமல் போலீஸார் குழப்பத்தில் உள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "விடுதியில், லட்சுமி, தீபக், நசிகேதா ஆகிய மூவரும் மது மயக்கத்தில் இருந்துள்ளனர். இதனால் அங்கு என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரியவில்லை. மருத்துவ பரிசோதனை முடிவில் லட்சுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி என்று தெரியவந்துள்ளது. ஆனால், அதற்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதனால் தீபக், நசிகேதா, விஜயராகவன் ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி அதற்கான முடிவுக்காக காத்திருக்கிறோம். முடிவு அடிப்படையிலேயே லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்தது யார் என்பது தெரியவரும். லட்சுமி சொல்லும் தகவல்களும், அவருடைய காதலன், நண்பர் ஆகியோர் கூறும் தகவல்களும் முரண்பாடாக இருக்கிறது. லட்சுமியும், அவருடைய காதலன் தீபக்கும் ஒரே அறையில் இருந்ததாக விடுதி நிர்வாகம் சொல்கிறது. ஆனால் தீபக்கிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட விடுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா, பழுதடைந்து இருந்ததால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. மருத்துவ பரிசோதனை வந்தபிறகே நடவடிக்கை  எடுக்க முடியும். இதற்கிடையில் புகார் கொடுத்த லட்சுமி தரப்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்" என்றார்.

விடுதி ஊழியரை அடித்த லட்சுமி

விடுதி அறையில் மதுவால் மயங்கி கிடந்த லட்சுமி, காலையில் கண்விழித்ததும் தன் நிலைக்கண்டு கலங்கினார். அப்போது, அங்கு விடுதி ஊழியர் விஜயராகவன் நின்று கொண்டு இருந்தார். இதனால் ஆத்திரத்தில் அவர் தான் தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று கருதிய லட்சுமி, அவரை சரமாரியாக அடித்து உதைத்தார். எதற்காக அடிக்கிறார்கள் என்ற விவரம் கூட தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர் விஜயராகவனும், விடுதியில் உள்ளவர்களும். இதன்பிறகு லட்சுமி, தகவலைச் சொன்னதும் விடுதி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்ததோடு, போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதன்பிறகே இந்த சம்பவம் வெளியில் தெரியவந்துள்ளது. 

அறிமுகமான விடுதி

விடுதி நிர்வாகத்திடம் போலீஸார் விசாரித்த போது லட்சுமி, இதற்கு முன்பு அந்த விடுதிக்கு வந்து இருக்கிறார். அந்த அறிமுகத்தின் பேரிலேயே அவருக்கு இரண்டு அறைகளை கொடுத்ததாக விடுதி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மயக்கத்திலிருந்த லட்சுமி, தீபக், நசிகேதா ஆகியோரிடம் எந்தவித ஆவணங்களையும், கையெழுத்தையும் விடுதி நிர்வாகம் பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.  

தொடரும் சம்பவங்கள் 

சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் சமூகவிரோத சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை கடத்தல் கும்பல் கடத்தியது. இப்போது டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்படுவதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 


எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ