Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' அனைத்துக் கட்சி கூட்டத்தை, முதல்வர் கூட்டாதது ஏன்?!' -நாஞ்சில் சம்பத்தின் விளக்கம்

காவிரி விவகாரத்தில் முதல்வரின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார் தி.மு.க எம்.பி கனிமொழி. ' காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாமல் போனதற்குக் காரணமே, தி.மு.க.தான்' எனக் கொந்தளிக்கிறார் அ.தி.மு.க.வின் நாஞ்சில் சம்பத். 

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை தி.மு.க எம்.பி கனிமொழி, " கர்நாடகாவில் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு நடக்கும் வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், பிரச்னைகளின் நிலவரம் உணராமல் தமிழக முதல்வர் நேற்று மாலைதான் கடிதம் எழுதுகிறார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, அமைதியை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கித் தர வேண்டும். பொதுவாக நதிநீர் பிரச்னைகளை மக்களுக்கு எதிரான பிரச்னைகளாக மாறி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரிக்கு நிரந்தர தீர்வு ஏற்படவேண்டும்" எனப் பேசியிருக்கிறார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், " உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகுதான் நிலைமை விபரீதமானது. அந்த நிமிடத்திலேயே தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இதைப் பற்றி தி.மு.க மகளிரணிச் செயலாளர் குறை சொல்கிறார். அம்மாவைக் குறை சொல்ல, இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மேஜர் பார்ட்னராக அங்கம் வகித்த தி.மு.க, காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்க முடியும். அந்த நேரத்தில் அவர்கள் செய்யத் தவறிவிட்டார்கள். ஆனால், தமிழக மக்களின் உரிமையைக் காக்க, உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டி நீதியைப் பெற்றுத் தந்திருக்கிறார் முதல்வர். இதன்பிறகு, அபாயமான செயல்களில் கர்நாடகாவில் உள்ள சிலர் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்படியொரு நிலைமையை, இங்கே உருவாக்காமல் தடுத்து நிறுத்தி, சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றியிருக்கிறார் அம்மா. காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு வஞ்சனை செய்தது தி.மு.க.தான். ' அவர்களோடு எங்களுக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை' என்று அறிக்கை வெளியிடுவாரா கருணாநிதி? தமிழர்கள் உணர்ச்சிமிக்கவர்கள். அவர்கள் அமைதியாக இருப்பதற்குக் காரணமே, அம்மாவின் நடவடிக்கைகள்தான். தமிழகத்தில் ஏன் அனைத்துக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்று கேட்கிறார் கருணாநிதி. அவருக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் சித்தராமய்யா, ' தீர்ப்பின்படி 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுவோம்' எனப் பேசியிருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அந்த மாநில அரசுதான் இருக்கிறது. தமிழக அரசு ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்?" எனக் கொந்தளித்தார் நாஞ்சில் சம்பத். 

-ஆ.விஜயானந்த்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ