Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு... என்ன நடந்திருக்கும்?!

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

சென்னையில் வாழும் வெளிமாவட்ட மக்கள், பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடி மகிழவே ஆர்வம் காட்டுவது வழக்கம். அதற்காக, தங்கள் சொந்த ஊருக்கு அவர்கள் செல்ல பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். அதனால், பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய பொதுமக்கள் முண்டியடிப்பது வழக்கம். இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக தற்போது 4 மாதங்களுக்கு முன்வே ரயில் முன்பதிவு துவக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை, வருகின்ற ஜனவரி மாதம் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை போகி, ஜனவரி 14-ம் தேதி சனிக்கிழமை பெரும் பொங்கல், ஜனவரி 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 16-ம் தேதி திங்கட்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை புறப்படும் ரயிலுக்கு இன்றும், ஜனவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை போகியன்று புறப்படும் ரயிலுக்கு நாளையும், ஜனவரி 14-ம் தேதி சனிக்கிழமை பொங்கலன்று புறப்படும் ரயிலுக்கு நாளை மறுதினமும் (செப்.16) முன்பதிவு செய்யலாம். இதேபோல் பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு இம்மாதம் 18-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஜனவரி 12-ம் தேதி வியாழக்கிழமை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களுக்கு புறப்படும் ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே ஏராளமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வமுடன் காத்திருந்தனர்.

ஆனால் நெல்லை, பாண்டியன், பொதிகை, அனந்தபுரி, மன்னை விரைவு ரயில்களுக்கா‌ன டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த 10 நிமிடங்களிலேயே, அனைத்து டிக்கெட்டுகளும் விற்று முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள், பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ரயில் பயணிகள் தரப்பில் இதுபற்றி கூறும்போது, " ஆன்-லையனில் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் சில டிராவல் ஏஜண்டுகள் சாப்ட்-வேரில் சில தில்லுமுல்லுகளை செய்து அப்பாவி பயணிகளுக்கு கிடைக்கவிடாமல் செய்கிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ஏரியாக்களில் சில புரோக்கர்கள் பகிரங்கமாக விற்கிறார்கள். ஒரு டிக்கெட்டில் உள்ள நபர்களுக்கு தகுந்தமாதிரி தலைக்கு கூடுதலாக ரூ100, ரூ.200..வைத்து விற்கிறார்கள். இதெல்லாம் ரயில்வே விஜிலென்ஸுக்கு நன்றாக தெரியும். ஆனாலும், அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். அத்தி பூத்தாற்போல, சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த புரோக்கர்களின் இடங்களில் ரெய்டு நடத்துவார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு நடத்தப்படும் இந்த டிக்கெட் மோசடியை தடுக்கவேண்டிய நேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளும் தடுக்கமாட்டார்கள். சென்னையில் ரயில்வேயின் ஐ.ஆர்.டி.சி-யின் கிளை இயங்குகிறது. அங்கே உயர் அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவரிடம் சொன்னால், 'டெல்லியில் பேசுங்கள்..எங்களால் ஒன்றும் செய்யமுடியாது' என்கிறார். பொதுமக்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. புரோக்கர்கள் மோசடி செய்கிறார்கள் என்று டெல்லிக்கு ஃப்ளைட் பிடித்தா போய் புகார் செய்யமுடியும்? சென்னையில் உள்ள முக்கிய ரயில்வே பதவிகளில் தமிழ் தெரியாத இந்தி மொழி மட்டுமே பேசும் அதிகாரிகளை நியமித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்னையை எடுத்துச் சொன்னாலும் புரியாது. அவர்களும் யாரிடம் விசாரிக்கமாட்டார்கள். ரயில் பயணிகள் சங்கம் என்று பெயரளவில் உள்ளது. இந்த மாதிரி பிரச்னைகளை அவர்களும் ரயில்வே மேலிட கவனத்துக்கு கொண்டு போவதில்லை" என்கிறார்கள். 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close