Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..! காலாண்டு தேர்வு ஒத்திவைப்பு 

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவும், நடுவர்மன்ற உத்தரவின்படி தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், தமிழர்களுக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளை கண்டித்தும், தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கு, இழப்பீடுகள் வழங்கிட வற்புறுத்தியும், காவேரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை ஏற்படுத்திட வற்புறுத்தியும், மொத்தத்தில் தமிழக விவசாய பெருங்குடி மக்கள், விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் நலன் காக்கப்படுவதன் மூலம் தமிழகத்தின் நலன் காக்கப்பட மத்திய - மாநில அரசுகளை வற்புறுத்தி நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, பல்வேறு விவசாய சங்கங்களின் அமைப்புகள் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக தவிர திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. மேலும், பல்வேறு பிற அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 18 ஆயிரம் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரி குலேசன் மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு காரணமாக தனியார் பள்ளிகள் இயங்காது. தனியார் பள்ளிகளுக்கு வேன்களில் வரும் மாணவர்கள் வருவதிலும் சிரமம் உள்ளது. பள்ளி வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன. வேன், ஆட்டோ உரிமையாளர்கள், டிரைவர்கள் இதில் கலந்து கொள்வதால் பள்ளிகளை திறப்பது பல்வேறு பிரச்னைகள், கஷ்டங்களை ஏற்படுத்தும் என்பதால் தனியார் பள்ளிகள் செயல்படாது" என்று கூறினார். 

தமிழ்நாடு தனியார் பள்ளி வாகனம் கூட்டமைப்பு சங்கத்தின் மாநில செயலாளர் பென்ஜமின் கூறுகையில், காவிரி தண்ணீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். டிரைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை கண்டித்து நாளை நடக்கும் போராட்டத்தில் பள்ளி வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் வாகனங்களை இயக்கவில்லை. சென்னையில் 25 ஆயிரம் பள்ளி வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் இயங்காது" என்றார். 

தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற முழு அடைப்பு காரணமாக தனியார் பள்ளி மாணவர்களுக்கான தேர்வு சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ