Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரியை வைத்து அரசியல் செய்வது யார்...? - கொதிக்கும் ஹெச்.ராஜா

 

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அங்கு எதிர்கட்சியாக இருக்கும் பி.ஜே.பி-தான் வன்முறையைத் தூண்டுவதாக தகவல்கள் வருகின்றன. கன்னட அமைப்புகளின் இன உணர்வைத் தூண்டி விட்டு, வரவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பி.ஜே.பி இத்தகைய செயலில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது உண்மையா...? கர்நாடகாவில் அப்படி என்னதான் நடக்கிறது என்பது குறித்து அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம் பேசினோம்.

"பெங்களூரூவில் நடக்கும் கலவரங்களுக்குப் பின்னால் பி.ஜே.பி இருப்பதாக விமர்சனம் வருகிறதே?"

"அப்படியெல்லாம் இல்லை. இந்த அவதூறுகள் சமூக வலைத்தளங்களில்தான் அதிகம் பகிரப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இயங்கும் கும்பல்தான் எங்கள் மீது வெறுப்பைக் கிளப்ப இதுபோன்று திட்டமிட்டு ஆதாரமில்லாத செய்திகளைப் பரப்பி வருகிறது. அங்கு ஆட்சியில் இருப்பது காங்கிரஸ்தான். ஆனால், எங்கள் மீது மட்டும் அவதூறு கிளப்பப்படுகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் விமர்சனத்துக்கு ஆளாகிறோம்.’'

"அப்படியானால் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு யார் காரணம்?"

"பி.ஜே.பி-க்கு இதை வைத்து அரசியல் செய்யவேண்டும் என்கிற நிலை இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு அப்படி இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரோடு இருக்கும் காங்கிரஸ், சொல்லிக் கொள்ளும்படியாக இருப்பது பெரிய மாநிலமான கர்நாடகாவில் மட்டும்தான். எனவே எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி நாடகமாடி வருகிறது. நாங்கள் அங்கு வலுவாக இருக்கிறோம். 28 பாராளுமன்ற இடங்களில் 21 எங்களிடம் தான் இருக்கிறது. வரும் சட்டமன்றத்தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். எனவே, பி.ஜே.பி இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம்இல்லை. கர்நாடக காங்கிரஸும், முதல்வர் சித்தராமையாவும்தான் இப்போதைய வன்முறைகளுக்குக்காரணம். அவ்வளவையும் செய்துவிட்டு, கனத்த இதயத்தோடு இருப்பதாக சித்தராமையா போலி முகம் காட்டுகிறார்."

"காவிரி நதிநீர் விவகாரத்தில் தலையிடமுடியாது என்று மோடி சொல்லி இருக்கிறாரே?"

"ஊடகங்கள் உண்மையை மறைக்கின்றன. அந்த சம்பவத்தின் முழு உண்மையை நான் சொல்கிறேன். தேவகவுடா மோடியை சந்தித்து இருக்கிறார். அப்போது 'நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு கர்நாடகாவின் நலனை காக்கவேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார் தேவகவுடா. அப்போது மோடி, ’காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதன்படி நடந்துகொள்வதே சரி’ என்று சொல்லி இருக்கிறார் மோடி. உடனே ஊடகங்கள் மோடி காவிரி பிரச்சினையில் தலையிட முடியாது என்று சொல்லிவிட்டார் என்று எழுதி, அது குறித்து விவாதிக்கிறார்கள்.’'

"காவிரி விவகாரத்தில் தமிழக பி.ஜே.பி-யின் நிலை என்ன?"

"இந்த விவகாரத்தில் தமிழகம் என்று இல்லை ஒட்டுமொத்த பி.ஜே.பி-யின் கருத்தும் ஒன்றுதான். கீழ்படுகையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கு கணிசமான நீரை வழங்கவேண்டும். காவிரி நதியின் எல்லா உரிமைகளும் கர்நாடகத்துக்கு மட்டும்தான் என்கிற கருத்து சரியானதுஅல்ல; நதிநீரை கடைமடை விவசாயிகள்வரை அனைவரும் பயன்படுத்தவேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் சொல்லாத விஷயத்துக்கு எல்லாம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த பிரச்னைக்கு எதிர்காலத்தில் சுமூக தீர்வு காண பி.ஜே.பி அரசு முயற்சி செய்யும்."

- சமரன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ