Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓணத்தில் கேரள இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! - ஒருதலைக் காதல் விபரீதம்

கோவை: ஓணம் தினத்தில் ஒருதலைக் காதலால் கேரள இளம் பெண் கத்தியால் குத்திக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தையல் கலைஞர் சோமு (52). இவரது மனைவி சாரதா (48). இவர்களது மகள் தன்யா (23). இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக கோவை மாவட்டம் அன்னூர்-தென்னம்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். பொறியியல்‌ ‌பட்டதாரியான தன்யா, பல்லடத்தை அடுத்த பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

தன்யா வீட்டின் அருகில் வசித்து வந்த ஷக்கீர் என்ற வாலிபர், அன்னூரில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவர், தன்யாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷக்கீர், தன்யாவிடம் பலமுறை வற்புறுத்தியும் வந்துள்ளார். இதை மறுத்த தன்யா, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். அவரது பெற்றோரும் ஷக்கீரை கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தன்யாவுக்கு அடுத்த மாதம் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் நிச்சயித்து இருந்தனர். அதனால், தன்யாவின் பெற்றோர் நேற்று மாலை, மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க கோவைக்கு சென்றிருக்கின்றனர். இதையறிந்த ஷக்கீர், தன்யாவின் விட்டு பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போதும், தன்யாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் நிர்பந்தித்துள்ளார்.

அப்போதும் தன்யா திருமணத்திற்கு மறுக்கவே, இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்யாவை சரமாரியாக குத்திவிட்டுத் தப்பி ஓடி இருக்கிறார் ஷக்கீர். இதில் நிலைகுலைந்த தன்யா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர், அங்கு தன்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். உடனே அவர்கள், இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசாருக்கு புகார் அளித்திருக்கின்றனர். உடனே, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யாபாரதி, கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு, கொலையாளி விட்டுச் சென்ற கத்தியை தன்யா வீட்டில் இருந்து கைப்பற்றினர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, தப்பியோடிய ஷக்கீர் கேரள மாநிலம் பாலக்காட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்றனர். அனால், அதற்குள் ஷக்கீர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பாலக்காட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது போலீசார் அந்த மருத்துவமனையில் முகாமிட்டு ஷக்கீரை கண்கானித்து வருகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ