Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' அண்ணா பிறந்தநாளும் கடந்து போனதே...!'  -விரக்தியில் சிறைக் கைதிகள்

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி(செப்டம்பர் 15) 'முன்விடுதலை' நம்பிக்கையோடு காத்திருந்த கைதிகளின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ' இந்த ஆண்டும் 'முன்விடுதலை' அறிவிப்பு வராததால், சிறைக் கைதிகள் மனவெறுப்பில் உள்ளனர்" என்கின்றனர் சிறை அதிகாரிகள். 

தமிழக சிறைக் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக, எட்டு ஆண்டுகளாக நீடித்து வந்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதனால், இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளில் நீண்டகாலம் வாடும் கைதிகள் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு சிறை அதிகாரிகள் மத்தியில் நிலவியது. அதற்கேற்ப, ' 20 ஆண்டுகளைக் கடந்தவர்களின் பட்டியலைத் தயாரித்து அனுப்புங்கள்' என உள்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, மாநிலம் முழுவதும் 20 ஆண்டுகளைக் கடந்த 80 கைதிகளின் பட்டியலும் தயாரானது. அண்ணா பிறந்தநாளில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் எதிர்பார்த்தனர். வழக்கம்போல, இந்தாண்டு அண்ணா பிறந்தநாளும் கடந்து போய்விட்டது. 

" முன்விடுதலை என்பது கைதிகளின் உரிமை. 14 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்களை அறிவுரைக் கழகம் மூலம் முன்விடுதலை செய்ய முடியும். மாவட்ட கலெக்டர், எஸ்.பி, சிறை கண்காணிப்பாளர், நன்னடத்தை அலுவலர் ஆகியோரைக் கொண்டு இயங்கும் அறிவுரைக் கழகம் முறையாகக் கூட்டப்படுவதில்லை. ஒரு கைதி 14 ஆண்டுகளை நிறைவு செய்தாலே, இந்தக் கழகம் கூடி முடிவு செய்ய வேண்டும். ஆனால், சிறை வளாகத்திற்குள் கால் வைப்பதையே பெரும்பாலான மாவட்ட கலெக்டர்கள் செய்வதில்லை. எனவே, அண்ணா பிறந்தநாளிலாவது விடுதலை செய்வார்கள் என்ற ஏக்கம் கைதிகளுக்குப் பிறக்கிறது. அதையும் இந்த அரசு முறையாகச் செய்யவில்லை. கைதிகளின் அடிப்படை உரிமைகளுக்குக்கூட இங்கு இடமில்லை" எனக் கொந்தளிக்கிறார் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் புகழேந்தி. தொடர்ந்து நம்மிடம், " இதுவரையில் நான்கு முறை முன்விடுதலை அடிப்படையில் கைதிகளை விடுவித்துள்ளது அ.தி.மு.க அரசு. 1992, 93, 94 ஆகிய காலகட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் பெண்கள் தினத்தை ஒட்டியும் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அதன்பிறகு, 2001-ம் ஆண்டு அண்ணா பிறந்தநாளை ஒட்டி கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டார்கள். இதன்பிறகு, 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில், ' 7 ஆண்டு முடித்தவர்களையும் விடுதலை செய்யலாம்' என முடிவு செய்யப்பட்டது.  இதுதான் பெரும் பிரச்னையாக மாறிப் போனது. இதை எதிர்த்து சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு, அண்மையில் முடித்து வைக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 14 ஆண்டு சிறைவாசத்தை நிறைவு செய்தவர்கள் 300 பேர் உள்ளனர். ' குடும்பத்தோடு இணைந்து வாழ்வோம்' என்ற நம்பிக்கையோடு இவர்கள் இருந்தார்கள். அத்தனை கனவுகளும் தகர்ந்து போய்விட்டது. இனி, 'அடுத்த அண்ணா பிறந்தநாளிலும் விடுதலையை எதிர்பார்க்க முடியுமா' என்ற அச்சம், அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. முதல்வரின் கவனத்திற்கு இவர்களைப் பற்றிய தகவல்கள் செல்கிறதா என்றே தெரியவில்லை. சிறைக் கைதிகள் எந்த உரிமையையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறதா?" என ஆதங்கப்பட்டார்.  

-ஆ.விஜயானந்த் 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ