Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்பின்றி கிடக்கும் சட்டமன்ற ஆவணங்கள்: தலைமைச் செயலக அவலம்!

        

மிழக சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பான குறிப்பேடுகள்,உறுப்பினர்களின் பேச்சுக்களின் தொகுப்புகள், அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை உரிய பாதுகாப்பின்றி தலைமைச் செயலகத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவருகிறது. இதில் சட்டப்பேரவை,நிதித்துறை,பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் முதன்மைத்துறை,முதல்வர் சேம்பர் உள்ளிட்ட அரசின் முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன.தமிழக சட்டமன்றம் அமைந்த ஆண்டில் இருந்து இங்குதான் பேரவை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அவை நடவடிக்கைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அதற்கென விலை நிர்ணயிக்கப்பட்டு, புத்தகங்களாக மிகக் குறைந்த விலைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தங்கங்கள் 1952ம் ஆண்டு முதல், பேரவை நடவடிக்கைகளின் ஆவணமாக உள்ளதால் அரசியல் கட்சிகள்,சமூக ஆர்வலர்கள்,ஆய்வு மாணவர்கள் என்று ஏரளாமானோர் அவற்றை வாங்கிப் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில்,செயின்ட் சார்ஜ் கோட்டையின் கீழ் தளத்தில் சட்டமன்ற அவைக் குறிப்பு புத்தகங்கள் பாதுகாப்பில்லாத நிலையில் அப்படியே போட்டு வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.மழை பெய்யும் போது இந்தப் புத்தகங்கள் நனைந்து விடுவதற்கும்,அவை அடுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய பீரோக்கள் நனைவதற்கும் வாய்ப்பு உள்ளதால் புத்தகம் சேதம் அடையும் நிலையில் உள்ளன. சில பீரோக்கள் திறந்த நிலையில் இருப்பதால்  எலிகள் எளிதாக உள்சென்று ஆவணங்களைக் கடித்துக் குதறிவிடும் ஆபத்துள்ளது.

இது தொடர்பாக  சட்டமன்ற பேரவை அலுவலர்கள் கூறுகையில், " அவை நடவடிக்கைகள் அனைத்தும் புத்தகங்களாக  இருக்கின்றன.இவை விற்பனைக்கும் உள்ளன.இவற்றின் முக்கியத்துவம் கருதி கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அவை நடவடிக்கைகள் அனைத்தும் கணினி மயமாக்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்தப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கீழ் தளம் முழுக்க நடைபாதையில்  அவை நடவடிக்கை புத்தங்கங்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன.அவை கரையான் அரிக்கும் நிலையிலும் உள்ளன. இந்த வழியாகவே பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் தினமும் நடந்து செல்கிறார்கள்.

      

இந்நிலையில், சட்டமன்ற பேரவை உயரதிகாரிகள்,கட்சி வாரியாக அவையில் உறுப்பினர்கள் அமைச்சர்கள் பேசியது தொடர்பாக  உள்ள குறிப்புகளை தொகுக்கும் பணிகளை எங்களிடம் ஒப்படைக்கிறார்கள்.குறிப்பாக கடந்த திமுகவிற்கு பதிலடி கொடுக்க,அவர்கள் ஆட்சிக்காலங்களில் நடந்த முக்கிய விஷயங்கள் குறித்த குறிப்புகளை எங்களை எடுத்துத்தர பணிக்கிறார்கள். இது எங்களின் பணியல்ல.அப்படியே அவற்றை நாங்கள் எடுக்க நினைத்தால்  அது கணினி மயமாக இருந்தால்தான் எளிதாக இருக்கும்.ஆனால் புத்தகங்களைத் தேடிச்  சென்று  தினமும் காலைமுதல் மாலை வரை தூசியில் கிடந்தது தேடுவது  மிகப்பெரும் பணியாகவே இருக்கிறது.

அமைச்சர்கள் தங்களின் பதிலுரையில் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்குப் பதில் அளிக்கும் விஷயங்களை அவர்களின் உதவியாளர்களைக் கொண்டே தேடிக் கொள்ள வேண்டும்.அதுதான் உதவியாளர்கள் பணி.ஆனால் அவர்கள் அதைவிடுத்து 'அசெம்பளி ஸ்டாப்' மூலம் தங்களின் வேலையைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள்." என்று தெரிவித்தனர்.

- சி.தேவராஜன்.
                                  

      

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ