Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாங்கள் ஏன் அதிமுகவை தேர்வு செய்தோம்...? - சாருபாலா, ‘பசி’ சத்யாவின் விளக்கம்


 
டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க., பா.ஜ.க ஆகிய கட்சிகளுடன் தமிழ் மாநில காங்கிரஸ்  தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அ.தி.மு.க-வில் சாருபாலா தொண்டைமான் இணைந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. அப்போது, ‘‘நான் த.மா.கா-வில்தான் இருக்கிறேன். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாத்திரை சாப்பிட்டு அசந்து தூங்கிவிட்டேன். என் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. அந்த நேரத்தில், வதந்தியைப் பரப்பிவிட்டுள்ளார்கள்’’ என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு சொல்லி ஆறு மாதம் முடிந்த நிலையில்தான் தற்போது சாருபாலா தொண்டைமான் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

2001-ல் இருந்து 2009 வரை திருச்சி மேயராக இருந்தவர் சாருபாலா தொண்டைமான். காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து வந்தபோது, அவரது தலைமையை ஏற்று சாருபாலா தொண்டைமானும் த.மா.கா-வில் இணைந்தார். இந்தநிலையில் அ.தி.மு.க-வில் திடீர் பிரவேசமாகியுள்ள சாருபாலா தொண்டைமானிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘ அ.தி.மு.க-வில் இணையக் காரணம்?’’

‘‘நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்தே சில விரும்பத்தகாத நிகழ்வுகள் தா.ம.க-வில் நடந்துவந்தன. தேர்தலில் சரியான கூட்டணி இல்லை. மக்கள் நலக் கூட்டணி வேண்டாம் என்று கூறினோம். அதைக் கேட்காமல் சேர்ந்தார்கள். தேர்தல் முடிந்த பிறகும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா... கவுன்சிலர் சீட்டாவது வாங்கித் தரவேண்டும் அல்லவா? எனவே, ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நான் கட்சியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். கட்சியில் இருந்து நான் ஏன் விலகுகிறேன் என்பதைத் தெளிவாக அந்தக் கடிதத்தில் எழுதிக் கொடுத்துள்ளேன்.’’
 
‘‘த.மா.கா-வில் என்ன நடக்கிறது... ஏன் ஒவ்வொருவராக வெளியேறுகிறார்கள்?’’  

‘‘வாசன் நல்லவர். ஆனால், அரசியலில் வல்லவராக இல்லை. அந்தக் கட்சியின் மீதான விமர்சனத்தை விரிவாக நான் வைக்கவிரும்பவில்லை. பிடிக்கவில்லை, வெளியேறிவிட்டேன். 30 வருடங்களாக நான் அந்தக் கட்சியில் இருந்திருக்கிறேன். எனவே, என்னால் அதிகமாகக் குறைகூற விரும்பவில்லை. அந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று தெரிந்துகொண்டேன். அதனால், வெளியேறிவிட்டேன்.’’

மேயர் பதவியை மையமாகவைத்தே இணைந்ததாகக் கூறப்படுகிறதே. அதுகுறித்து?’’

‘‘அப்படியான எண்ணத்தில் நான் இணையவில்லை. உள்ளாட்சிகளில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு  கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு உள்ளன. இவற்றைச் சரித்திர சாதனையாகப் பார்க்கிறோம். உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீட்டை ராஜிவ் காந்தி கொண்டுவந்தார். அதனை, 50 சதவிகிதமாக முதல்வர் மாற்றியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் விஷயத்தில் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். நான் மேயர் பதவியைவைத்து அ.தி.மு.க-வில் இணையவில்லை.’’

‘‘ ‘அ.தி.மு.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்று சசிகலா புஷ்பா அந்தக் கட்சியின் மீது ஏராளமான குற்றச்சாட்டை வைத்துவிட்டு வெளியேறியுள்ளார். எந்த நம்பிக்கையில் அந்தக் கட்சியில் இணைந்தீர்கள்?’’  
 
‘‘அதைப்பற்றி நான் பேச விரும்வில்லை.’’  

‘ ‘அ.தி.மு.க-வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை’ என்று அந்தக் கட்சியில் உள்ளவர்களே கூறிவருகிறார்கள்? இந்த நிலையில், உங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியமா?’’

‘‘நேர்மையாக, உண்மையாக இருக்கும்போது செயல்படமுடியும். அப்படி இருக்க வேண்டும் என்று அம்மா எதிர்பார்க்கிறார். அதே நேரத்தில், அவருடைய நம்பிக்கைக்கு உரியவராகவும் நான் இருப்பேன். சசிகலா புஷ்பாவுக்கு முக்கியப் பொறுப்புகள் கொடுத்தபிறகும் அவர்கள் உண்மையாக நடந்துகொள்ளவில்லை. அதுதானே, அங்கே பிரச்னை.’’
 
தமிழ்மாநில காங்கிரசில்  எதிர்காலம் இல்லாத காரணத்தால்  அ.தி.மு.க-வில்  சேர்ந்தேன் என்பது  சாருபாலாவின்  காரணம் ... திரைப்பட நடிகை பசி சத்யா சொல்லும் காரணங்களோ  மிக  வித்தியாசமானது....
 
 
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகைகள் பட்டியலில் ‘பசி’ சத்யாவும் ஒருவர். நடிப்பில், தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக்கொண்டு வலம்வந்தவர். சென்னை பாஷை மையமாக வரும் படங்களில், சத்யாவின்  நடிப்பு உச்சத்தைத் தொடும். 1979-ம் ஆண்டு வெளியான, ‘பசி’ படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அந்தப் படத்துக்குப் பிறகு, ‘பசி’ சத்யா என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து, ‘மறுபடியும்’, ‘டூயட்’, ‘சாமுராய்’ உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரும் சென்னையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். இந்தத் திடீர் பிரவேசம் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.  
 
  ‘‘சினிமாவில் இருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்?’’

‘‘முதல்வர் ஜெயலலிதா திரைப்பட கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளார். அதன்  காரணமாகவே அ.தி.மு.க-வில் இணைந்தேன். அதுதவிர, அம்மாவை எனக்குப் பிடிக்கும்.’’

‘‘உள்ளாட்சித் தேர்தலை மையமாகவைத்துச் சேர்ந்துள்ளீர்களா?’

‘‘அவ்வாறு யோசிக்கவில்லை. நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்தான். எனவே, எதையும் எதிர்பார்த்து வரவில்லை. அம்மா செய்து வரும் நலத்திட்டங்கள் பிடித்திருந்தது. அவர்கள் தலைமையின்கீழ் பணியாற்றலாம் என்று வந்துவிட்டேன்.’’

‘‘இத்தனைநாள் சேராமல் இப்போது சேர்ந்துள்ளீர்களே?’’

‘‘தற்போதுதான் அதனை யோசிக்கிறேன். நானே காலம் கடந்துதான் அரசியலுக்கு வந்துள்ளேன். முதலிலேயே  வந்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சிறப்பாகப் பணியாற்றுவோம் என்று உறுதியோடு இணைந்துள்ளேன்.’’
 
-கே. புவனேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ