Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட 47 வயதில் இளைஞரணியில் பதவி..! அ.தி.மு.கவில்தான் இந்த அதிசயம்

தென்சென்னை அ.தி.மு.க.வில் சிலருக்குப் பதவிகள் பறிக்கப்பட்டதால் களேபரம் நடந்து வருகிறது. கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்தவர்களை புறக்கணித்து விட்டு தனக்கு விருப்பமானவர்களுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவிக்கின்றனர் கட்சியினர். இதையெல்லாம் கண்டித்து பதவியை பறிக்கொடுத்தவர்கள் ராயபேட்டை தலைமை அலுவலகத்தை சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். அடுத்து மொட்டை போடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பதவியை பறிக்கொடுத்தவர்கள் கூறுகையில், "ஆயிரம் விளக்கு பகுதி எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருக்கும் சந்திரபோஸ், அழகிரி பேரவையில் பதவி வகித்தவர். பணத்தை கொடுத்து இந்தப் பதவியை பெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆயிரம் விளக்கு பகுதி மாணவரணி இணைச் செயலாளர் கலைச்செல்வன் மீது பல வழக்குகள் உள்ளன. எம்.கே. சாமிநாதனுக்கு, தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் பதவியும், ஆயிரம் விளக்கு எம்.ஜி.ஆர். மன்ற பகுதி இணைச் செயலாளர் பதவியும் என இரண்டு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோல மனோகரனுக்கு ஆயிரம் விளக்கு எம்.ஜி.ஆர். மன்ற பகுதி இணைச் செயலாளர், துணைச்செயலாளர் ஆகிய இரண்டு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலின் மன்றத்திலிருந்த ரவிசந்திரனுக்கு தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் பதவி கொடுத்துள்ளார்கள். தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள மெர்குரி ஆர்.மணி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் வேலை செய்கிறார்.

தென்சென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கந்தசாமி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சண்முகராஜ் கட்சியினரோடு அதிகம் தொடர்பு இல்லாதவர்கள். மாவட்டச் செயலாளர் கலைராஜனின் தம்பி சுரேஷ்குமாருக்கு தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தென்சென்னை வடக்கு மாவட்ட மீனவர் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்ட புகழேந்தியும் ஆயிரம் விளக்கு பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கும் சதாசிவமும் அண்ணாநகர் பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவிக்கு ஹேம்நாத்தும் சில 'சி'க்களை கொடுத்து பதவியை பெற்றதாக சொல்கிறார்கள். இவ்வாறு பதவிகளை பெற்றவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் சீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.  இளைஞர் அணிக்கான வயது வரம்பான 30 முதல் 40 வயது வரை என்ற விதியை மீறி 47 வயதான ராதாகிருஷ்ணனுக்கு அண்ணாநகர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதியதாக பதவி கொடுக்கப்பட்டவர்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன" என்றனர். 
 
தலைமைக்குப் பறந்த புகார்கள் 

பதவி பறிக்கப்பட்ட ஐஸ்அவுஸ் மோகன், தலைமை கழகத்துக்கு அனுப்பிய மனுவில், "30 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த எனக்கு பதவி வழங்கப்படவில்லை. தி.மு.க பகுதி செயலாளர் காமராஜை எதிர்த்து அரசியல் செய்ததால் என் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே மீண்டும் எனக்கு 115வது கிழக்கு வட்டச் செயலாளர் பதவி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

82வது வட்ட கழக செயலாளராக இருந்த கோழிகடை மோகன், "பதவிக்காக மாவட்டச் செயலாளர் என்னிடம் 7 லட்சம் ரூபாய் கேட்டார். பணமில்லை என்றதும் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஷாகுல் அமீது என்ற வெள்ளைஷாகுலிடம் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு பதவி விற்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். தி.நகர் கழக செயலாளராக இருந்த ஏழுமலை, "சசிகலா புஷ்பாவின் உறவினர் டி.டி.பால்ராஜிடம் பணத்தை பெற்றுக் கொண்டு பகுதி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் கலைராஜனிடம் கேட்ட போது, "பதவி பறிக்கப்பட்டவர்கள் இதுபோன்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர். நான் யாரிடமும் பணம் வாங்கி கொண்டு பதவிகளை கொடுக்கவில்லை. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு 60 வயது எல்லாம் கிடையாது. அவருக்கு 45 வயதிருக்கும்" என்றார்.

சம்பந்தபட்ட ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். "நீண்ட காலமாக இளைஞரணி பதவியில் இருப்பதால் மீண்டும் அந்தப்பதவி எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு 46 வயதயாகுகிறது என்றவரிடம், இளைஞரணி பதவிக்கு 40 வயது வரைதான் வரம்பு என்று கேட்டதற்கு அப்படியா என்று அமைதியாகி விட்டார். 

ராதாகிருஷ்ணன் மீது புகார் சொன்னவர்கள், 'அவருக்கு 46 வயது எல்லாம் கிடையாது. 60 வயதுக்கு மேல் இருக்கும். அவர் சொல்கிறபடி 46 வயது என்றாலும் அவருக்கு இளைஞரணி பொறுப்பு கொடுக்கப்பட்டது தவறு' என்றனர். 

நமது நிருபர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

13 நாட்களில் சரண் அடைந்த பாகிஸ்தான் இப்போது துள்ளுவது ஏன்?
கோல்... கோல்... கோல்..! ஐ.எஸ்.எல். ஆரம்பம் #LetsFootball
அரசியல்வாதிகளுக்கும் நெட்டிசன்களுக்கும் ஒரு நெருங்கிய ஒற்றுமை உள்ளது... அது என்னவென்று தெரியுமா...? (வீடியோ)

MUST READ